யாழில் உள்ள தனியார் மருத்துவ மனையொன்றில் தரமற்ற எம்.ஆர் ஐ ஸ்கனரை பயன்படுத்துவது தொடர்பில் வைத்திய அதிகாரிகள் சிலர் விசனம் தெரிவித்துள்ளனர்.
குறித்த வைத்திய சாலை, வேறொரு வைத்திய சாலையில் பாவிக்கப்பட்டு, கழித்து விடப்பட்ட எம்.ஆர் ஐ ஸ்கனரை கொள்வனவு செய்து பாவித்து வருவது தொடர்பில் வைத்தியர்கள் சிலர் முன் வைத்த குற்றச்சாட்டுக்களை அடுத்து, குறித்த வைத்திய சாலையில் கடமையாற்றும் வைத்திய நிபுணர்கள் அதனை பாவிப்பதனை தவிர்த்து வந்தனர்.
இந்நிலையில் குறித்த வைத்திய சாலையில் கடமையாற்றும் ஒரு வைத்திய நிபுணர் மாத்திரம் குறித்த தரமற்ற எம்.ஆர்.ஐ ஸ்கனரை பயன்படுத்தி வருகின்றார். அதற்காக குறித்த வைத்திய சாலை அவருக்கு மேலதிகமாக ஆயிரம் ரூபாய் பணத்தினை வழங்கி வருகின்றார்கள். என தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் சில வைத்திய நிபுணர்கள் குறித்த வைத்திய சாலை நிறுவனத்திடம் அந்த எம்.ஆர் ஐ ஸ்கனரை பயன்படுத்த வேண்டாம். அதனால் ஏற்படும் கதிர் வீச்சுக்கள் நோயாளிகளுக்கு ஆபத்தான தாக்கங்களை உண்டு பண்ணும் என எச்சரித்துள்ளனர். அதனை குறித்த வைத்திய சாலை நிர்வாகம் கவனத்தில் எடுக்காது. தொடர்ந்து அதனை பயன்படுத்தி வருகின்றார்கள்.
அதேவேளை அது தொடர்பில் சுகாதார திணைக்களத்திடமும் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும் அவர்களும் பாராமுகமாக உள்ளனர் என குற்றம் சாட்டப்படுகின்றது.
ஏற்கனவே நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இவ்வாறு தரமற்ற ஸ்கனரை பயன்படுத்துவதன் ஊடாக ஏற்படும் கதிர் வீச்சுக்கள் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என தெரிந்தும் யாரும் நடவடிக்கை எடுக்காது இருப்பது தமக்கு கவலையளிப்பதாக வைத்தியர் ஒருவர் தெரிவித்தார்.