ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை விடுதலை செய்வதில் தாமதம் ஏன்? என்று தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ராஜீவ் காந்தியை கொலை செய்ய பயன்படுத்த பெல்ட் வெடிகுண்டுக்கான பட்டரியை வாங்கி கொடுத்த குற்றச்சாட்டில் தாம் சிறைவாசம் அனுபவிக்கிறேன் ஆனால் பெல்ட் வெடிகுண்டு எங்கு யாரால் தயாரிக்கப்பட்டது என்கிற விவரத்தை சிபிஐ தமக்கு தெரிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் சிபிஐ, மீண்டும் மீண்டும் ஒரே பதிலை அளித்ததால் உச்சநீதிமன்றம் அதிருப்தியை வெளியிட்டது. இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் புதிய பதில் மனுவை தாக்கல் செய்தது சிபிஐ. அதில், பெல்ட் வெடிகுண்டு குறித்து புதிய தகவல்களை திரட்ட முடியவில்லை. பெல்ட் வெடிகுண்டு வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டது என மனுதாரர் கூறுகிறார். வெளிநாடுகளில் விசாரிக்க பல வழிமுறைகள் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதாரம் எதுவும் இல்லை. இந்நிலையில் பேரறிவாளனை விடுதலை செய்வதில் தாமதம் ஏன் என்று தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் பேரறிவாளனை விடுதலை செய்ய தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து 2 வாரங்களில் தமிழக அரசு பதிலளிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.