இலங்கை பிரதான செய்திகள்

எதிர்காலச் சந்ததியினருக்காக தீர்க்கமான முடிவுகளை மேற்கொள்ள வேண்டும்…

எதிர்காலச் சந்ததியினருக்காக எல்லைத் தாண்டிய மீன்பிடியையும் தடைசெய்யப்பட்ட உபகரணங்கள் பயன்படுத்தப்படுகின்ற கடற்றொழில் முறைகளையும் முற்றாக நிறுத்த வேண்டிய அவசர தேவையிருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும் இந்திய இழுவலைப் படகுகள் மூலமான தொழிற் செயற்பாடுகளை மாற்றி அவற்றை ஆழ்கடல் தொழிலாக முன்னெடுப்பதற்கு இந்திய மத்திய அரசாங்கத்தினால் தமிழகத்திற்கு பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் அதற்காக இந்திய மத்திய அரசிற்கு நன்றி தெரிவிப்பதாவும் கூறிய அமைச்சர் அவர்கள், இந்தச் செயற்பாடானது எல்லை தாண்டிய மீன்பிடிப் பிரச்சினையை விரைவில் தீர்க்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது எனவும் தெரிவித்தார்.

1996ஆம் ஆண்டின் 2ஆம் இலக்கத்தின் கீழான கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் சட்டத்தின் 1 முதல் 9 வரையிலான ஒழுங்கு விதிகள் முன்மொழிவுகளை இன்று(21.01.2020) நாடாளுமன்றில் சமர்ப்பித்து உரையாற்றும்போதே கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்தார்

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஒழுங்கு விதிகள் தொடர்பான முன்மொழிவுகள் யாவும் இந்த நாட்டினதும், நாட்டு மக்களினதும் நலன் கருதியே வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், முன்மொழியப்பட்ட ஒழுங்கு விதிகளின் அடிப்படையில் நீர் வாழ் உயிரினங்களுக்கும், நீரக வள மூலங்களுக்கும் பாதிப்பினை உண்டு பண்ணக் கூடிய கழிவுப் பொருட்களையும் எறிவது – கொட்டுவது தடை செய்யப்படுகின்றது.

அத்துடன், மீன் மற்றும் இறால் பெருக்கத்திற்கு, கால்நடை உணவுக்கு, கடற்கரையின் பாதுகாப்பிற்கு என பல்வேறு நன்மைகளை வழங்குகின்ற கண்டல் தாவரம் அழிக்கப்படுவது தடைசெய்யப்படுகின்றது.

இது ‘ஸ்பியர்’ எனப்படுகின்ற ஈட்டி பொருத்தப்பட்ட அதாவது கூர் முனை கொண்ட துப்பாக்கி கொண்டு, அல்லது கூர்மையான ஆயுதத்தைக் கையில் கொண்டு, கடற்றொழிலில் ஈடுபடுவதைத் தடை செய்கின்றது.

மீனினங்கள் மற்றும் கடலுணவு உற்பத்திகளை இறக்குமதி செய்தல், ஏற்றுமதி செய்தல், மீள் ஏற்றுமதி செய்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுகின்றவர்கள் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தில் பதிவு செய்தல் வேண்டும் போன்றன உட்பட சட்டவிரோத மற்றும் முறையற்ற கடற்றொழிலை தடுப்பதற்கான ஒழுங்கு விதிகளை நாடாளுமன்றில் சமர்ப்பித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்,

கடற்றொழிற் துறையை மேலும் அறிவியல் ரீதியாக மேம்படுத்தும் நோக்கிலும், சர்வதேச உடன்படிக்கைகளின் விதிமுறைகளுக்கு அமைவாகவாகவும், கடல் வளத்தையும், கடற்றொழிலாளர்களது வாழ்வாதாரங்களையும் பேணிப் பாதுகாக்கும் வகையிலும் குறித்த ஒழுங்கு விதிகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.