இலங்கை பிரதான செய்திகள்

புலிகளின் எழுச்சிப் பாடல்கள் இறுவெட்டை விற்றவர் பிணையில் விடுதலை…

தமிழீழ விடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடல்கள் அடங்கிய இறுவெட்டை விற்பனை செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் ஒரு வருடத்தின் பின்னர் சட்ட மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன், சட்ட மா அதிபரிடம் எழுத்துமூலம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக சந்தேகநபரை பிணையில் விடுவிக்கப்பட்ட தருமபுரம் பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

அதற்கமைய தருமபுரம் காவற்துறையினரின் அறிக்கைக்கு அமைய சந்தேகநபரை பிணையில் செல்ல கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை பிணையில் விடுவித்தது.

கிளிநொச்சி, தருமபுரம் பகுதியில் விடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடல்கள் அடங்கிய இறுவெட்டை விற்பனை செய்தமை மற்றும் அதனை வாங்கி ஒலிக்கச் செய்தமை என இரண்டு பேர் 2019ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சந்தேகநபர்கள் இருவரும் கடந்த ஒரு வருடமாக தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

சந்தேகநபர்களில் ஒருவரான அழகுசாதனக் கடை உரிமையாளரான விஸ்வமடுவைச் சேர்ந்த கந்தசாமி அரிகரனின் விடுதலை தொடர்பில் அவரது உறவினர்கள் சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன் ஊடாக நடவடிக்கை எடுத்திருந்தனர்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவரை பிணையில் விடுவிக்கும் அதிகாரம் சட்ட மா அதிபரிடம் உள்ள நிலையில் கந்தசாமி அரிகரனை பிணையில் விடுவிக்க ஆவன செய்யுமாறு கலாநிதி கு.குருபரன், சட்ட மா அதிபர் தப்புல்ல டி லிவேராவுக்கு கடந்த செப்ரெம்பர் மாதம் 19ஆம் திகதி கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

அந்தக் கடிதம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுத்திருந்த சட்ட மா அதிபர், சந்தேகநபரை பிணையில் விடுவிக்க தருமபுரம் காவற்துறையினருக்கு அறிவுறுத்தல் வழங்கியிருந்தார். அதனடிப்படையில் ஒரு வருடத்துக்கு பின்னர் சந்தேகநபர் கந்தசாமி அரிகரன் இன்று கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடல்களை ஒலிக்கவிட்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு மற்றைய சந்தேநபரான குணபாலசிங்கம் குணசீலன் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் சார்பில் சட்டத்துறை அமைப்பு ஒன்றால் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை பிணையில் விடுவிக்கும் அறிவுறுத்தல் சட்ட மா அதிபரால் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.