Home இந்தியா தமிழகத்தைச் சேர்ந்த உயர்கல்வி மாணவிக்கு கனடாவில் கத்திக்குத்து!

தமிழகத்தைச் சேர்ந்த உயர்கல்வி மாணவிக்கு கனடாவில் கத்திக்குத்து!

by admin

கனடாவில் மேற்கல்வி படித்து வரும் தமிழகத்தை சேர்ந்த மாணவி ஒருவர் அடையாளம் தெரியாத நபரால் கத்தியால் குத்தப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

23 வயதான ரேச்சல் அல்பர்ட் எனும் அந்த மாணவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என  மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தின் குன்னூரை சேர்ந்த அல்பர்ட் என்பவரின் இரண்டாவது மகள் ரேச்சல். குன்னூரில் பள்ளிக் கல்வியை படித்த அவர், பெங்களூருவில் இளநிலை பட்டப்படிப்பை பெற்ற பின், சுமார் மூன்றாண்டுகள் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்தார்.

பாடசாலை, கல்லூரி கல்வியில்  சிறந்து விளங்கிய அவருக்கு, கனடாவின் மிகப் பெரிய நகரமான டொரொண்டோவில் உள்ள யோர்க் பல்கலைக்கழகத்தில் முழு கல்வி உதவித்தொகையுடன் பட்ட மேற்படிப்பு படிக்கும் வாய்ப்பு கிடைக்க, அங்கு கடந்த ஆண்டு மே மாதம் முதல் “விநியோகச் சங்கிலி மேலாண்மை” (Supply chain management) பயின்று வருகிறார்.

இந்நிலையில், உள்ளூர் நேரப்படி, கடந்த புதன் கிழமை அன்று இரவு 10 மணியளவில் யோர்க் பல்கலைக்கழக வளாகம் அருகே அடையாளம் தெரியாத நபரால் ரேச்சல் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக டொரொண்டோ நகர காவற்துறை  ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

ஆசியாவை சேர்ந்தவராக கருதப்படும் அந்த நபர், சுமார் 5´11´´ உயரம் இருக்கக் கூடும் என்றும், ரேச்சலை தாக்கிய பிறகு அவர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டதாகவும், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அளித்த தகவல்களை முதலாக கொண்டு அந்த குற்றவாளியை கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் டொரொண்டோ நகர  காவற்துறை அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டொரொண்டோ நகர வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ரேச்சலை பார்ப்பதற்காக, கனடாவுக்கு செல்லும் முயற்சியில் ஈடுபட்டு வரும் அவரது தந்தை அல்பெர்ட்டை இதுதொடர்பாக பிபிசி தமிழ் தொடர்பு கொண்டு பேசியது.

பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை போன்று, கனடாவிலும் படிப்பில் சிறந்து விளங்கிய தனது மகளை பொறாமையின் காரணமாக உடன் படிக்கும் மாணவரே தாக்கியிருக்கக் கூடும் என்று அல்பர்ட் சந்தேகிக்கிறார்.

“எனது மகள்தான் அவளது வகுப்பறையிலேயே இளைய மாணவர். 30-35 வயதை சேர்ந்தவர்கள் கூட அவளுடன் படிக்கிறார்கள், ஆனால் ரேச்சல்தான் படிப்பில் சிறந்து விளங்கி வருகிறாள். இந்நிலையில், தன்னிடம் ´எப்படி நீ மட்டும் இவ்வளவு மதிப்பெண்கள் பெறுகிறாய்´ என்று அடிக்கடி கேட்டு தமிழகத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் தன்னை தொந்தரவு செய்வதாக எனது மகள் என்னிடம் கூறியதுண்டு. எனவே, அந்த சக மாணவர்தான் ரேச்சலை தாக்கி இருப்பாரா என்று எனக்கு சந்தேகமாக உள்ளது” என்று அவர் கூறுகிறார். இந்நிலையில், கடந்த வாரம்தான் ரேச்சல் தான் சமூக ஊடகங்களிலிருந்து வெளியேற உள்ளதாக தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார்.

“எனது மகளிடம் அவரை டேட்டிங் செய்ய விரும்புவதாக கூறி, அதே பல்கலைக்கழகத்தில் படிக்கும் இந்தியாவை சேர்ந்த மாணவர் ஒருவர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாக எனது முதல் மகளிடம் சமீபத்தில் ரேச்சல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எனக்கு தெரியாது என்பதால், சமூக ஊடகங்களில் இருந்து வெளியேற உள்ளதாக ரேச்சல் என்னிடம் கூறியபோது அவர் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவதற்காக இவ்வாறு முடிவெடுத்திருக்கலாம் என்று நான் நினைத்தேன். ஆனால், இப்போது எந்த சம்பவத்தை எதனோடு தொடர்புபடுத்தி பார்ப்பது என்று எனக்கு தெரியவில்லை” என்று அல்பர்ட் கூறுகிறார்.

ரேச்சல் அடையாளம் தெரியாத நபரால் அவரது கழுத்துப் பகுதியில் பலமுறை குத்தப்பட்டு, சம்பவம் நடந்த நடைபாதையில் சிறிது தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டதாக கனடாவை சேர்ந்த ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வரும் நிலையில், தனது மகள் கத்தியால் குத்தப்பட்டதுடன் பின்புறம் துப்பாக்கியாலும் சுடப்பட்டதாக அவரது தந்தை கூறுகிறார்.

“எனது மகளின் உடல்நிலை தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகத்தின் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டபோது, அவர் துப்பாக்கியாலும் சுடப்பட்டதாக கூறினர். ஆனால், இதுதொடர்பாக ஏன் தங்களது செய்தியில் கனேடிய ஊடகங்கள் குறிப்பிடவில்லை என்று எனக்கு குழப்பமாக உள்ளது. இந்திய வெளியுறவுத் துறையின் உதவியுடன், விசா கிடைத்த உடனேயே கனடாவுக்கு செல்ல உள்ளேன். நான் நேரில் சென்ற பிறகுதான் அனைத்து விடயங்களும் தெரிய வரும்” என்று ரேச்சலின் தந்தை அல்பர்ட் கூறுகிறார்.

ரேச்சல் அனுமதிக்கப்பட்டுள்ள வைத்தியசாலையில் பாதுகாப்பு பணியில் டொரொண்டோ நகர காவற்துறையினர் ஈடுபட்டுள்ளதாகவும், தனது மகளின் உடல்நிலையை கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டதாகவும் அவர் மேலும் கூறுகிறார்.

BBC

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More