மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் ஈடுபட்ட மத்திய வங்கியில் பிரதான பதவிகளை வகித்தவர்கள் போன்றே, அவர்களுக்கு அரசியல் ரீதியான உதவிகளை வழங்கியவர்களையும் நீதியின் முன்பாக நிறுத்த வேண்டுமென சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.
குறிப்பாக அர்ஜுன மஹேந்திரன், அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட முன்னாள் மத்திய வங்கி ஆளுநர்கள், அவர்களுக்கு அரசியல் ஆலோசனைகளை வழங்கிய அரசியல்வாதிகள் உள்ளிட்டோரும் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட வேண்டியது அவசியமெனவும் அவர் தெரிவித்துள்ளார்,
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர்,
2000- 2015 ஆம் ஆண்டு வரையில் இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பான தணிக்கை அறிக்கை நீதிச் செயற்பாடுகளின் பிரகாரமே தயாரிக்கப்பட்டுள்ளதென தெரிவித்த அவர், அந்த அறிக்கை மரண பரிசோதனை அறிக்கையை போன்றதெனவும் தெரிவித்தார்.
இந்த அறிக்கையில் வெளிப்பட்டுள்ள விடயங்களை மக்கள் விடுதலை முன்னணி முன்பிருந்தே வலியுறுத்தி வந்ததெனவும், அதனுடன் தொடர்புடையவர்கள், சில காலங்களில், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியிலும், ஐக்கிய தேசிகயக் கட்சியிலும் பின்னர் பொதுஜன பெரமுனவிலும் என மாறி மாறி இருந்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்