பொதுமக்களின் தேவையினை உரிய நேரத்திற்குள் நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும். அதற்கு தேவையான அர்ப்பணிப்பினை உத்தியோகத்தர்கள் வழங்க வேண்டும் என புதிதாக கடமையேற்றுள்ள மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தெரிவித்தார்.
கடந்த 30 வருடகால யுத்ததினால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளையும் கட்டியெழுப்ப தேவையான நடவடிக்கைகளை தன்னால் முடிந்தளவு முன்னெடுக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கலாமதி பத்மராஜா இன்று (27.01.20) காலை தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். இன்று காலை மாவட்ட செயலகத்திற்கு சென்ற புதிய மாவட்ட அரசாங்க அதிபருக்கு மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள், மேலதிக அரசாங்க அதிபர்களினால் வரவேற்பளிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து மாவட்ட செயலகத்தில் உள்ள மகா கணபதி ஆலயத்தில் விசேட பூஜைகள் நடைபெற்றதுடன் அதில் புதிய அரசாங்க அதிபர் கலந்து கொண்டு வழிபாடுகளை மேற்கொண்டார். வழிபாடுகளை தொடர்ந்து 10.35 மணி அளவில் தனது கடமைகளை புதிய அரசாங்க அதிபர் பொறுப்பேற்றுக்கொண்டார்.
புதிய அரசாங்க அதிபருக்கு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த், மேலதிக அரசாங்க அதிபர் நவரூப ரஞ்சினி முகுந்தன் உட்பட பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள் வாழ்த்துகள் தெரிவித்துக் கொண்டனர். அதனை தொடர்ந்து மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடலிலும் மாவட்ட அரசாங்க அதிபர் கலந்து கொண்டார்.
மட்டக்களப்பினை சேர்ந்த கலாமதி பத்மராஜா 29 வருடங்கள் நிர்வாக சேவையில் அனுபவத்தினைக் கொண்டுள்ளதுடன், முதல் நியமனத்தினை கல்முனை உதவி பிரதேச செயலாளராக பெற்றுக் கொண்டதுடன், அதன் பின்னர் வாழைச்சேனை மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராகவும் கிழக்கு மாகாணசபையில் பிரதி செயலாளராகவும் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.