நாட்டிலுள்ள காணிகளை அளவீடு செய்யும் நடவடிக்கைகளை விரைவில் நிறைவுசெய்யுமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அடையாளம் காணப்பட்ட மொத்த நில அலகுகளின் எண்ணிக்கை 14 மில்லியன் என்பதுடன், அவற்றில் 10 வீத காணிகளின் அளவீட்டு நடவடிக்கைகள் கடந்த வருடம் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
எனவே, மீதமுள்ள 90 வீதமான காணிகளின் அளவீட்டுப் பணிகளை காலம் தாழ்த்தாது விரைவில் நிறைவுசெய்யுமாறும் அதற்கு தேவையான வசதிகளை உடனடியாக பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
முறையான கணக்கெடுப்பின் பின்னர், அனைத்து நில அலகுகளுக்கும் உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு காணி மற்றும் மறுசீரமைப்பு அமைச்சின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
அளவீட்டுப் பணிகளுக்காக நவீன கண்காணிப்பு உபகரணங்கள் மற்றும் ட்ரோன் கெமராக்களைப் பயன்படுத்துமாறு அவர் ஆலோசனை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அளவீட்டுப் பணியில் நிலவும் மனிதவள வெற்றிடத்திற்காக புதிய பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றதா என்பது தொடர்பில் இதன்போது பரிசீலிக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
அனைத்து அளவீடுகள் தொடர்பான தகவல்களும் ஒரே தரவுத்தளத்தில் அனைவருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.