Home இலங்கைஇஸ்லாமாபாத் வீட்டுத்திட்ட குடியிருப்பில் பெற்றோல் குண்டு தாக்குதல்…

இஸ்லாமாபாத் வீட்டுத்திட்ட குடியிருப்பில் பெற்றோல் குண்டு தாக்குதல்…

by admin

இஸ்லாமாபாத் வீட்டுத்திட்ட குடியிருப்பில் இனந்தெரியாதோரால் பெற்றோல் குண்டு தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. கல்முனை காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட இஸ்லாமாபாத் வீட்டுத்திட்ட குடியிருப்பில் செவ்வாய்க்கிழமை (11.02.20) அதிகாலை 12.45 மணியளவில் இனந்தெரியாதோரினால் இப் பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இத்தாக்குதலில் சிறு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக கல்முனை காவற்துறையினர் தெரிவித்தனர். மேலும் இத்தாக்குதலினால் பாதிப்புக்குள்ளான இடத்தில் தரித்து நின்ற  முச்சக்கர வண்டிக்கு எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை .

மேலும் இவ்வீட்டுத்திட்ட குடியிருப்பில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கல்முனை பெரும் குற்றத்தடுப்பு காவற்துறையினர்  மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த தாக்குதலுக்கு உள்ளான பகுதியை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்முனை மாநகர உறுப்பினர் எம்.ஐ.எம். அப்துல் மனாப் சென்று பார்வையிட்டுள்ளார்.

இதே வேளை குறித்த பிரதேசத்தை அண்டிய பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (9.02.20) மாலை இரு சமூகங்களிற்கிடையே ஏற்பட்ட மோதல் ஒன்றினை அடுத்து இத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

குறித் சம்பவத்தில் கல்முனை பகுதியை சேர்ந்த 24 வயதிற்குட்பட்ட சுமதாச தம்மிக்க மற்றும் ஏகாம்பரம் யதுசன் ஆகிய இருவர் காயமடைந்து காவற்துறைப்  பாதுகாப்பில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் கல்முனை காவல் நிலையத்தில் அன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய கல்முனை இஸ்லாமபாத் பகுதியை சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க ராஜாஎன்றழைக்கப்படும் பழில் மற்றும் அவரது மகனான ரொசான் (வயது-27) ஆகியோர் காவற்துறையினரால் ஞாயிறு மாலை கைது செய்யப்பட்டு திங்கட்கிழமை(10.02.20) கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு தலா 1 இலட்சம் சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து கல்முனை காவல்  நிலைய பொறுப்பதிகாரி சுஜீத் பிரியந்த தலைமையில் திங்கட்கிழமை(10) மதியம் இரு சமூகத்தை சேர்ந்த பிரதிநிதிகள் அழைக்கப்பட்டு நல்லிணக்கத்திற்கான கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் கல்முனை பிராந்திய உதவி காவற்துறை அத்தியட்சகர் பிரதீப் குமார மற்றும் கல்முனை சுபத்திராராம விகாராதிபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டிருநதனர்.

பாறுக் ஷிஹான்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More