பெண்களையும் – யாரையும் வன்முறை செய்யாத மனிதர்களாய் வாழ்வோம்!
வன்முறைகள் செய்வதற்கான மனப்பாங்கு எங்கிருந்து வருகின்றது?
ஓவ்வொரு சமூகங்களிலும் மக்கள் ஒருவருக்கு ஒருவர் செய்யும் வன்முறைகளின் அடியாக பெண்களுக்கெதிரான வன்முறைகளை வைத்திருக்கின்றோம். அதிலும் நெருங்கிய உறவினர்களால் – துணைவர்களால் செய்யப்படும் வன்முறைகளே அதிகமாக இருக்கின்றன.
வன்முறையாளர்கள் வேற்றுக்கிரகவாசிகளல்ல. எங்கள் சமூகங்களுள் வளர்க்கப்பட்டவர்கள்,
எங்கள் பண்பாட்டிலுள்ள வன்முறைக் கூறுகளை நம்புபவர்கள்.
நாங்கள் வீடுகளுக்குள்ளேயே எங்கள் மகன்களை கட்டுப்பாடுகளற்றவர்களாகவும், வன்முறை செய்பவர்களாகவும் வளர்க்கும் அதே நேரம் எங்கள் மகள்களை அடங்க வேண்டியவர்களாகவும் அச்சமுற வேண்டியவர்களாகவும் வளர்க்கின்றோம்.
ஐந்தாம் ஆண்டுப் புலமைப்பரிசில் பரீட்சை தொடங்கி ஒவ்வொரு போட்டிப் பரீட்சையிலும் வெற்றியடைந்ததாகக் கொண்டாடப்படும் பிள்ளைகள் படிக்கும் அதே பாடசாலைகள் இந்த வன்முறையாளர்களுக்காகவும்; திறந்திருக்கின்றன. கல்வியில் வெற்றி பெறற பிள்ளைகளைக் கொண்டாடும் அளவுக்கு வன்முறையாளர்களாக வாழ்வில் தோல்வியடையும் பிள்ளைகளில் கவனம் செலுத்துகின்றோமா? இனிமேல் இவ்வாறானவர்கள் உருவாகாதிருக்க முன்நடவடிக்கைகள் எடுக்கின்றோமா?
பெண்களை போகப் பொருளாகப் பாவித்தலையும், வன்முறை செய்தலையும் ஆண்மையின் ஒரு இலக்கணமாகச் சித்தரிக்கும் இலக்கியங்களில் தொடங்கி இன்றைய சினிமா வரை பிள்ளைகளுடன் இணைந்து ரசித்து வளர்க்கின்றோம். (பெண்களைக் குரூரமான வில்லிகளாகக் காட்டும் தொலைக்காட்சித் தொடர்களை குடும்பமாக நாம் பார்ப்பதன் விளைவுகள் எப்பொழுது அனுபவிக்கப்போகின்றோமோ தெரியாது).
பெண்களுக்கு என்ன செய்தாலும் ஆண்களில் பிழை வராது. பெண்களில் தான் பிழை வரும். பெண்களுக்கு எதிராக ஆண்;கள் செய்யும் வன்முறைகளுக்கு பெண்களிலேயே காரணம் கண்டுபிடிக்கப்படும் என்ற செய்தியை சிறுவயதிலிருந்தே பிள்ளைகளுக்கு கற்றுத் தருகின்றோம்.
பெண்ணின் உலகம் தனக்கானதாக மட்டுமே இருக்க வேண்டும் என்றும் இல்லாவிடின் சந்தேகப்படலாம், வன்முறை செய்து தன் கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம் என்றும், பெண்ணின் சொத்து தன் பெயருக்கு மாற்றப்பட வேண்டும் – இல்லாவிடின் வன்முறை செய்யலாம் என்றும், விருப்பில்லாத பெண்ணை விரும்பக் கட்டாயப்படுத்துவதும் மறுப்பின் கொல்வது வரை போகலாம் என்றும், தெருவில் போகும் பெண்ணை சீண்டலாம் என்றும் யாரை வேண்டுமென்றாலும் பாலியல் வன்முறை செய்யலாம் என்றும் எங்கள் ஆண்கள் நினைப்பதில் ஒரு மாபெரும் சமூகப்பிழை இருக்கின்றது. அந்த நினைப்பைக் கேள்வி கேட்காமலிருப்பதிலும், அதற்கும் நமக்கும் சம்பந்தமில்லை என்று மௌனமான இருப்பதிலும் ஒரு பெரும் பண்பாட்டுத்தவறு இருக்கின்றது.
நாம் அனைவருமாக இணைந்து திருத்த வேண்டிய தவறு இது.
பெண்களுக்கெதிரான வன்முறைச் சிந்தனைகளை, மனப்பாங்குகளை மாற்ற நாங்கள் எங்களை எங்கள் பண்பாட்டை கலை இலக்கியங்களை ஊடகங்களை உத்வேகத்துட்ன பயன்படுத்த வேண்டிய தருணம் இது.
வன்முறையற்ற சிந்தனையால் எழுவோம்!
பெண்களையும் – யாரையும் வன்முறை செய்யாத மனிதர்களாய் வாழ்வோம்!