நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீரவை கைது செய்வதற்கு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. விமல் வீரவங்ச உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைகளில் இன்று முன்னிலையாகாததால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜூன் 29 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதற்கும் நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் ராட் அல் ஹூசைனின் இலங்கைப் பயணத்தின் போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2016 பெப்ரவரி 6 ஆம் திகதி, கொழும்பு 7 பௌத்தாலோக மாவத்தையிலுள்ள ஹெவ்லோக் வீதியை மறித்து, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக சந்தேகநபர்கள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணை இன்று இடம்பெற்ற நிலையில் வழக்கின் இரண்டாவது சந்தேகநபரான நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர இன்று மன்றில் முன்னிலையாகவில்லை. அத்துடன் வழக்கின் சந்தேகநபரான ரொஜர் செனவிரத்னவும் இன்று மன்றில் முன்னிலையாகியிருக்கவில்லை.
அவர் சுகயீனமுற்றுள்ளதாக தெரிவித்து, பிரதிவாதி தரப்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் மருத்துவ அறிக்கையொன்றை மன்றுக்கு சமர்ப்பித்திருந்தனர்.