308
தென்னை வட்டு மிதிப்பதாக குறைந்த கூலி பேசி வேலையை தொடங்கும் நபர்கள் வேலை முடிய அதிக பணம் கேட்டு மிரட்டி பணத்தினை பெற்று சென்றனர் என பாதிக்கப்பட்ட ஒருவர் கூறினார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ,
திருநெல்வேலி தபால் பெட்டி சந்திக்கு அருகில் உள்ள வீடொன்றுக்கு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை சென்ற இருவர் உங்கள் வீட்டு தென்னை மரத்தில் ஏறி வட்டினை மிதிச்சு தாறோம் 300 கூலி தாருங்கள் என கோரினார்கள். தென்னை வட்டு மிதிச்சால் தான் குலை விழும் என கூறினார்கள். அதற்கு வீட்டார் தேவையில்லை என கூறி அனுப்பி வைத்துள்ளனர்.
அந்நிலையில் இன்றைய தினம் புதன்கிழமையும் குறித்த வீட்டுக்கு சென்ற இருவர் தென்னையில் ஏறி வட்டு மிதிச்சு தாறம் 300 ரூபாய் தாருங்கள் என பேரம் பேசியுள்ளார்கள். இன்றைக்கு வீட்டு உரிமையாளரும் அதற்கு சம்மதித்துள்ளார். அதனை அடுத்து தென்னையில் ஏறி வட்டை மிதித்தவர்கள் 15 நிமிடத்திற்குள் இறங்கி 2300 ரூபாய் கூலி கேட்டுள்ளார்கள்.
அவர்களின் கூலியை கேட்ட வீட்டு உரிமையாளர் அதிர்ச்சி அடைந்து 300 ரூபாய் தானே முதலில் பேசினீங்க . அதற்கு தான் நான் உடன்பட்டேன் என கூறி 300 ரூபாயை கொடுத்துள்ளார். அதற்கு கூலிக்கு வந்த இருவரும் தாம் 2300 தான் கேட்டோம். அதற்கு நீங்கள் சம்மதித்ததால் தான் தென்னையில் ஏறினோம். என கூறி தமக்கு 2300 ரூபாய் தந்தால் தான் வீட்டை விட்டு போவோம் என கூறி வீட்டு வளவுக்குள் இருந்துள்ளார்கள்.
சுமார் 45 நிமிடங்களுக்கு மேலாக அவர்கள் இருவரும் வீட்டு வளவை விட்டு வெளியேறாமல் வீட்டு வளவுக்குள் இருந்ததால் வீட்டின் உரிமையாளர் வேறு வழியின்றி அவர்கள் கேட்ட 2300 ரூபாய் பணத்தினை கொடுத்து அவர்களை அனுப்பியுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் , ஏமாற்று பேர்வழிகள் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதேவேளை பகல் வேளைகளில் , வீடுகளுக்கு பழைய பொருட்கள் வாங்க எனவும் , பொருட்கள் விற்க எனவும் , கூலி வேலைகள் செய்து தருவதாக கூறியும் ஜோதிடம் , மற்றும் ஆலயத்திற்கு பணம் சேகரிக்க எனவும் வரும் ஏமாற்று பேர்வழிகள் தொடர்பில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும், தெரியாத நபர்களை வீட்டு வளவினுள் அனுமதிப்பதை இயன்ற அளவிற்கு தவிர்க்குமாறும் காவல்துறையினர்கேட்டுக்கொண்டுள்ளனர்.
இவ்வாறு வரும் சில நபர்கள் வீடுகளை கண்காணித்து களவு மற்றும் கொள்ளை நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர். #ஏமாற்றுபேர்வழிகள் #விழிப்புடன் #கோரிக்கை
Spread the love