300
யாழ்.பிரதேச செயலகத்தில் விண்ணப்பபடிவங்களை பூர்த்தி செய்ய முடியாது தடுமாறுபவர்களுக்கு உதவும் முகமாக பட்டதாரி பயிலுனர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
யாழ்.பிரதேச செயலகத்தில் பிறப்பத்தாட்சி பத்திரம் உள்ளிட்டவற்றை பெற வருவோர்கள் விண்ணப்பப்படிவங்களை நிரப்ப முடியாது தடுமாறுகின்ற வேளைகளில் அங்கு தரகர்கள் போன்று செயற்படும் சில நபர்கள் விண்ணப்ப படிவங்களை நிரப்பி கொடுப்பதற்கு 50 ரூபாய் முதல் 100 ரூபாய் வரையில் அறவீடு செய்து வந்துள்ளார்கள்.
இதனை கண்டறிந்த பிரதேச செயலர் எஸ். சுதர்சன் தரகர்கள் போன்று செயற்பட்ட நபர்களை கடுமையாக எச்சரித்து இனி பிரதேச செயலகத்திற்குள் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டால் பொலிசாரிடம் கையளிக்கப்படுவீர்கள் என எச்சரித்து விடுவித்துள்ளார்.
அந்நிலையில் இன்றைய தினம் புதன்கிழமை முதல் பிரதேச செயலகத்திற்கு வரும் மக்கள் விண்ணப்ப படிவங்கள் பூர்த்தி செய்ய முடியாது தடுமாறுபவர்களுக்கு உதவி செய்வதற்காக பட்டதாரி பயிலுனர்களை சேவையில் அமர்த்தியுள்ளார். வயதானவர்கள் உள்ளிட்டவர்களுக்கு விண்ணப்ப படிவங்களை நிரப்பி கொடுப்பது , மற்றும் பிரதேச செயலக சேவைகளை பெற வருபவர்களுக்கு உதவிகளை செய்கின்றார்கள்.
பிரதேச செயலரின் இம் முன்மாதிரியான செயற்பாட்டை பலரும் பாராட்டியதுடன் , ஏனைய பிரதேச செயலர்களும் நடைமுறைப்படுத்தினால் பிரதேச செயலகத்திற்கு சேவை பெற செல்பவர்கள் தடுமாற்றம் இன்றி சேவைகளை பெற்றுக்கொள்ள இலகுவாக இருக்கும் என தெரிவித்தனர். #சேவை #பட்டதாரிபயிலுனர்கள் #தரகர்கள் #விண்ணப்பபடிவங்கள்
Spread the love