(க.கிஷாந்தன்)
திருணோமலை கோமரங்கடவல காவல்துறை பிரிவுக்குட்பட்ட மதவாச்சி குளத்தில் மூழ்கி (19.02.2020) மாலை நான்கு மாணவர்கள் பலியாகியுள்ளனர். அத்துடன், நீரில் மூழ்கிக்கொண்டிருந்த மேலும் நான்கு மாணவர்களை இராணுவத்தினரும், காவல்துறையினரும் இணைந்து காப்பாற்றி வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
ஊவா-ஹாலிஎல விஞ்ஞானக் கல்லூரியில் தரம் 10 இல் கல்வி பயிலும் 86 மாணவர்களும் (44 மாணவர்கள், 42 மாணவிகள்) 8 ஆசிரியர்களும் கல்விச் சுற்றுலாவை மேற்கொண்டிருந்தனர். இதன்படி பொலன்னறுவை, திருகோணமலை ஆகிய பகுதிகளுக்கு சென்ற பிறகு 19.02.2020 அன்று மாலை கோமரங்கடவல பகுதியிலுள்ள விகாரையொன்றில் அவர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அங்குசென்ற பின்னர் விகாரைக்கு அருகாமையிலுள்ள மதவாச்சி குளத்தில் மாணவர்கள் நீராடும் வேளையிலேயே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இதன்போது நான்கு மாணவர்களே பலியாகியுள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் அனுஷத் சமாடீ (எட்டாம்பிட்டிய பிரதேசம்), உமேஷ் சிஹார் (கலஉட பிரதேசம்), நெதிக சஞ்சித் (இங்குறுகமுவ பிரதேசம்), அனுச அன்சன (கோடுவல எல்ல பிரதேசம்) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது இச்சம்பவம் குறித்து மேலதிக காவல்துறை விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. #மதவாச்சி #குளத்தில் #மாணவர்கள் #வைத்தியசாலை #கல்விச்சுற்றுலா