ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன்-2 படப்பிடிப்பிற்கிடையே ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகிவரும் இந்தியன்-2 திரைப்படத்தின் படப்பிடிப்பு பூந்தமல்லியில் நடைபெற்று வருகிறது. இதன்போது பல நூறு குதிரைகள், வீரர்கள் சேர்ந்து பிரம்மாண்ட சண்டைக்காட்சிகளை தனித்தனியாகப் படமாக்கி வந்தனர். இந்த நிலையில் இண்டஸ்ட்ரியல் கிரேன் எனப்படும் மிகப்பெரிய கிரேனைப் பயன்படுத்தி அங்கு படப்பிடிப்பு எடுக்கப்பட்டு வந்தது. கிரேன் முழுமையாக நகர்த்தப்பட்டதன் பின்னரே அதனை மேலே ஏற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால் ஒவ்வொரு முறையும் கிரேனை கீழே இறக்கி, அதனை நகர்த்தி பின்னர் மீண்டும் மேலே ஏற்றுவது என்பது படப்பிடிப்புக்கு அதிக சிரமமான வேலையாக இருந்து வந்த நிலையில் நேற்று(பிப்ரவரி 19) படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது அறிவுறுத்தலையும் மீறி 150 அடி உயரத்தில் கிரேன் மேலே இருக்கும் நிலையிலேயே அதனை நகர்த்துவதற்கு முற்பட்டுள்ளனர்.
இதன்போது அதிக பாரம் கொண்ட கிரேன் எதிர்பாராதவிதமாக உடைந்து விழுந்ததில் கீழே பலருக்கும் பெரும் காயங்கள் ஏற்பட்டதுடன் உதவி இயக்குநர், தயாரிப்பு வேலை பார்க்கும் ஒருவர், ஒரு செட் உதவியாளர் என மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு அவர்கள் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
விபத்து நடந்த இடத்தில் இருந்து வெறும் 4 அடி தொலைவில் இருந்த கமல்ஹாசன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். பெரும் விபத்து ஏற்பட்ட நிலையில் கமல்ஹாசனை உடனடியாக அவரது வீட்டிற்கு செல்ல அனைவரும் வற்புறுத்திய போதும் அவர் அங்கிருந்து செல்வதற்கு மறுத்துவிட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #இந்தியன்2 #விபத்து #இயக்குனர் #உயிரிழப்பு #ஷங்கர் #கமல்ஹாசன்