குறைந்த வருமானம் பெறும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு இலட்சம் தொழில்வாய்ப்பை வழங்குவதற்கான வேலைத்திட்டத்திற்கான நேர்முக தேர்வுகள் நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த நேர்முக தேர்வானது இன்றைய தினத்திலிருந்து எதிர்வரும் நான்கு நாட்களுக்கு பிரதேச செயலகங்களில் நடைபெறவுள்ளது. யாழ் மாவட்டத்தில் 26 066 பேர் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான நேர்முக தேர்வுகள் பிரதேச ரீதியில் அவர்களுக்கான பிரதேச செயலங்களில் நடைபெறுகின்றன.
குறித்த நேர்முக தேர்வில் நேர்முக அதிகாரிகளாக இரண்டு அரச அதிகாரிகளும், இரண்டு இராணுவத்தினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த இராணுவ அதிகாரிகள் வேலை வாய்ப்பில் தெரிவானோர்களின் விபரங்களை திரட்டி அவர்கள் சமர்ப்பித்த ஆவணங்களின் உண்மை தன்மையை அறியும் செயற்பாட்டிலும் , பின்னர் அவர்களின் வீடுகளுக்கு சென்று அவர்களின் வீட்டு நிலைமைகளை நேரில் ஆராய்ந்து அவர்கள் குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதனை இராணுவத்தினர் உறுதிப்படுத்திய பின்னரே அவர்களுக்கு நியமன கடிதங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கபடுகின்றது.