Home இலக்கியம் கஜால் அஃமத் Kajal Ahmad) இன் மூன்று கவிதைகள்… தமிழில். தேவ அபிரா…

கஜால் அஃமத் Kajal Ahmad) இன் மூன்று கவிதைகள்… தமிழில். தேவ அபிரா…

by admin


கஜால் அஃமத் இராக்கின் கிர்குக் நகரத்தில் 1967 ம் ஆண்டு பிறந்தவர். இவர் கவிஞர், பத்திரிகையாளர்  சமூக விமர்சகர் எனப் பல ஆளுமைகளைக் கொண்டவர்.இது வரை நான்கு புத்தகங்களை வெளியிட்டுள்ள இவர் குர்திஸ்தானி நியூஸ் இன் பிரதம ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

வீதி

பித்துப்பிடித்த பெண்ணே!

நீ எங்கிருக்கிறாய்? எங்கு செல்கிறாய்?

என வீதிகள் கேட்பதில்லை.

வீதிகள் அநீதி இழைப்பதுமில்லை

ஆணையிடுவதுமில்லை.

வீதிகளுக்குப் பயங்கரவாதமென்றால் என்னவென்று தெரியாது.

வீதிகள் எதுவும் மனிதர்களைப் போலிருப்பதில்லை.

மனிதர்களும் வீதிகளைப் போலிருப்பதில்லை

வீதி எனக்குச் சொல்கிறது:

என்னைக்கடந்து போ.

வளர்.

காதலி.

சின்னச்சின்னச் சுமைகளைக் கூடத் தூக்கிச் செல்லாதே!

இருளின் கொடும் குணம் கொண்டவனினதும்

அறியாமையில் உழல்பவனினதும் காதல்களுக்கு அருகாமையிற்  செல்லும் போது பறந்து செல்லும் பெண்ணின் சிறகுகள் உதிர்ந்து விடுகின்றன.

சந்தேகப்பட முடியாதபடி வாழ்வென்னும் சாடி அதன் சொந்த இதயத்தின் கைகளிலேயே உடைந்து விடுகிறது.

யாரோ ஒருவரோடு வீதியைக் கடந்த நினைவு இனிமையானது.

அன்று  நாம் ஒருவரை ஒருவர் காதலிப்பதை  விதி தடுத்து விட்டது.

அந்த ஒருவரோடு அவ்வீதியில் ஓடிய போது என் இதயம்சிறகடித்துப் பறந்தது

நான் முன்னே செல்ல வேண்டும் என்பதற்காக

அவன் என்னைக்கடந்து செல்ல விரும்பாது வேண்டுமென்றே பின்தங்கிவிட்டான்.

சுதந்திரத்தை அனுபவிப்பதற்கும்

கடந்து செல்வதற்கும்

ஒரு வீதி போதும்.

சிறுவர்கள் கடந்து பாடசாலை செல்வதற்கும்

பையன்கள் குமரிகளைப் பார்ப்பதற்கும்

அவர்கள் சிரிப்பதற்கும்

ஒரு வீதி போதும்.

எனது பெயரைச் சுமந்து நிற்கும் வீதி நெடுகில்

புகழ்பெற்ற எவரது சிலையும் இருக்கக்கூடாது.

எனது வீதி எனது இதயம் போலப் பரந்ததாக இருக்கட்டும்

அதிகாலையிலும் மாலையிலும் கவிதையின் வீட்டில் இருக்கும் அமைதி  அங்கு நிலவட்டும்.

மற்ற வேளைகளில் எனது உள் போல்

உதடுகளுக்குள் இருக்கும் உதடுகள் போல்

ஓசை நிறைந்ததாக இருக்கட்டும்.

இரத்தம் படியாத ஒரு வீதி வேண்டும்

பயங்கரத்தைப் பார்த்திராத அறிந்திராத ஒரு வீதி வேண்டும்

அது கறை படியாததாக இருக்க வேண்டும்

காதலினதும் காமத்தினதும் ஆசைகள் நிராகரிக்கப்பட்ட

 அநியாயமாகக் கொல்லப்பட்ட பெண்களின் இரத்தக்கறை படியாததாக அவ்வீதி இருக்கட்டும்

அவ்வீதி அவர்களின் கொடுந்துயரம் போல் நீண்டதாக இருக்கட்டும்.

அவ் வீதியில் நாங்கள் எல்லோரும் பயணிகள்.

நானோ என்றென்றும் பயணி.

நிசாப்பூரின (Nishapur)  வெண்பாக்கள் திடீரெனத் தம்மைத்தாமே நம்பிக்கொண்டு பைத்தியகாரத்தனமாகக் காதலையும் அருந்திக்கொண்டு

என்னுடன் கைகோர்த்து நடந்து விடுவதில்லை.

ஆங்கில மொழி பெயர்ப்பு: Mewan Nahro and  Alana Marie Levinson-LaBrosse

சட்டைப்பொத்தான்

அப்பாவித்தனமான முத்தங்களுக்கிடையில்

எனது மென்சிவப்புச் சட்டையின் முதலாவது பொத்தான் கழன்று விழுந்துவிட்டது.

பிற்பாடு தைத்துக் கொள்ள வேண்டுமே!

லேசர் போன்ற, கண்களில் ஒட்டிக்கொண்ட மூக்குக் கண்ணாடியுடன்

தனது விரல்களைப் போன்ற தையல் ஊசியைக் கைகளில் வைத்துக்கொண்டு

காறித்துப்பியபடி கோபமுடன் அம்மா உறுமினாள்:

இந்தப்பொத்தானை ஒர் கவிதைக்குள் போட்டிருக்கலாமே?

ஆங்கில மொழிபெயர்ப்பு :Daria Ali and Alana Marie Levinson-LaBrosse

நிலைக்கண்ணாடி

எனது காலத்தின்  தெளிவற்ற கண்ணாடி உடைந்து விடுகிறது. என்னென்றால்

அது பெரியதைச் சிறியதாகக் காட்டுகிறது

சிறியதைப் பெரியதாகக் காட்டுகிறது.

சர்வாதிகாரிகளும் பேய்களும் கண்ணாடியின் முகத்தை நிரப்புகிறார்கள்.

நான் சுவாசித்துக்கொண்டிருக்கும் இக்கணத்திலும்

உடந்த கண்ணாடியின் கூரிய துண்டுகள் என்னிதயத்தைக் கீறுகின்றன.

வியர்ப்பதற்குப்பதிலாக நான் கண்ணாடியிலிருந்து ஒழுகுகிறேன்.

ஆங்கில மொழிபெயர்ப்பு :Daria ali and Alana Marie Levinson-laBrosse

தமிழ் மொழி பெயர்ப்பு. தேவ அபிரா

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More