நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை பிணையில் விடுவிப்பதற்கு நுகேகொடை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. ரஞ்சன் ராமநாயக்கவை 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் விடுவிப்பதற்கும் வௌிநாடு செல்ல பயணத்தடை விதிக்கவும் நீதவான் மொஹமட் மினார் தீர்மானித்துள்ளார். நீதிமன்ற செயற்பாடுகளுக்குள் அநாவசியமாக தலையீடு செய்த குற்றச்சாட்டில் ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இந்நிலையில், சர்ச்சைக்குரிய தொலைபேசி கலந்துரையாடல்களில் காணப்பட்ட குரல்பதிவு ரஞ்சன் ராமநாயக்கவினுடையது என அரச இரசாயன பகுப்பாய்வாளர் இன்று நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க குறித்த மூன்று நீதிபதிகளுடன் மாத்திரம் தொலைபேசி கலந்துரையாடலில் ஈடுபடவில்லை என அவர் சார்பில் மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ரஞ்சன் ராமநாயக்க, 60 நீதிபதிகளுடன் தொலைபேசி கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தம்மை நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்த மக்களின் தேவை மற்றும் உரிமை கருதியே ரஞ்சன் ராமநாயக்க தொலைபேசி கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மன்றில் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், சந்தேகநபரான ரஞ்சன் ராமநாயக்க, அவருக்கு வழங்கப்பட்ட நாடாளுமன்ற சிறப்புரிமைகளை பயன்படுத்தி நீதிமன்ற செயற்பாடுகளுக்கு இடையூறுகளை விளைவித்தமை தொடர்பில் பல வழிகளிலும் தகவல்களை வௌிக்கொணர்ந்த சாட்சியாளர்கள் மற்றும் முறைப்பாட்டாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கக்கூடுமென சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் ஆஜரான பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால், சந்தேகநபருக்கு பிணை வழங்குவதில் தனக்கு ஆட்சேபனைகள் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், சந்தேகநபரான ரஞ்சன் ராமநாயக்க சுமார் 6 வாரங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையினால் அவருக்கு பிணை வழங்கப்படுவதாக நுகேகொடை நீதவான் மொஹமட் மினார் குறிப்பிட்டுள்ளார்.