196
புத்தூர் மேற்கு சிறுப்பிட்டி கலைமதி கிந்துபிட்டி மாயனத்தில் உடலை தகனம் செய்ய வந்தவர்களை வல்லை மண்டான் மயானத்தில் தகனம் செய்யுமாறு மல்லாகம் நீதிமன்று கட்டளை பிறப்பித்துள்ளது.
சிறுப்பிட்டியை சேர்ந்த ஒருவர் இயற்கை எய்திய நிலையில் அவரின் பூதவுடலை கிந்து பிட்டி மயானத்தில் தகனம் செய்ய உறவினர்கள் முயற்சித்த போது , குறித்த மாயனத்தை சூழவுள்ள மக்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டதை தொடர்ந்து காவல்துறையினர் , காவல்துறை விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் இரு தரப்பினரிடமும் காவல்துறையினர் பேச்சுக்களை நடாத்திய போதிலும் இரு தரப்பினரும் ஒரு நிலைப்பாட்டிற்கு வராத நிலையில் இரு தரப்பினை சேர்ந்த நால்வரை மல்லாகம் நீதிவானிடம் அழைத்து சென்றிருந்தனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணை செய்த நீதிவான் , சடலத்தை எரிக்க விடாது எதிர்ப்பு தெரிவித்த தரப்பினரை சேர்ந்த நால்வரையும் கைது செய்ய உத்தரவிட்ட நீதிவான் , சடலத்தை எரியூட்ட வந்த தரப்பினரை வேறு மயானத்தில் தகனம் செய்யுமாறு கட்டளை பிறப்பித்தார்.
அதனை அடுத்து மயானத்தில் இருந்து சுமார் 500 மீற்றர் தூரத்தில் உடலத்தை தகனம் செய்ய வந்திருந்தவர்கள் சுமார் நான்கரை மணித்தியாலம் காத்திருந்த நிலையில் , நீதிமன்ற கட்டளையை அடுத்து வல்லையில் உள்ள மண்டான் மயானத்தில் உடலத்தை தகனம் செய்ய கொண்டு சென்று உடலத்தை தகனம் செய்தனர்.
குறித்த சுடலையில் தகனம் செய்ய கூடாது என சூடலையை சூழவுள்ள மக்கள் கடந்த 2017ஆம் ஆண்டு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்த நிலையில் சுடலையில் உடலத்தை தகனம் செய்து வரும் தரப்பினர் அதற்கு ஆட்சேபனை தெரிவித்த நிலையில் இரண்டு வருட காலமாக நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து கடந்த நவம்பர் மாதம் 08ஆம் திகதி , “மயானத்தைச் சுற்றி மதில் அமைத்து சடலங்களை அங்கு எதியூட்ட முடியும். அதனை எதிர்த்தரப்புத் தடுக்க முடியாது. அங்கு குழப்பம் விளைவித்தாலோ மதிலை உடைத்து அத்துமீறினாலோ அந்த தரப்புக்கு எதிராக காவல்துறையினர் உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது #வல்லை #உடலம் #தகனம் #சிறுப்பிட்டி #கிந்துபிட்டிமாயனம்
Spread the love