Home இலங்கை என்னைப் போய் சமய வெறியன் என்றீர்களே

என்னைப் போய் சமய வெறியன் என்றீர்களே

by admin

வாரத்துக்கொரு கேள்வி – 06.03.2020

கேள்வி :- நீங்கள் சைவத் தமிழர் என்று மட்டுமே கூறி வருவது பல்வேறு இந்துத் தமிழர் மத்தியிலும் கிறீஸ்தவர்கள், முஸ்லீம்கள், பௌத்தர்கள் மத்தியிலும் உங்களை ஒரு சைவத் தமிழ் வெறியர் என்ற தோற்றப்பாட்டை உண்டாக்கியுள்ளது. போதாக் குறைக்கு நீங்களே திருநீறும் குங்குமப் பொட்டும் அணிந்து வருகின்றீர்கள். இவை பற்றி உங்கள் பதில் என்ன?

பதில் :- எனக்கு சிரிப்பாக வருகின்றது. எந்த அளவுக்கு மனிதன் உண்மைகளை அலசி ஆராயாமல் தனது முடிவுகளுக்கு இன்று வந்து விடுகின்றான் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.

நான் சைவத் தமிழர் பற்றி குறிப்பிட வேண்டி வந்தது ஆதித் தமிழர் பற்றி பேசுகையிலேயே! கிறிஸ்துவுக்கு முன்னிருந்து தமிழர்கள் இலங்கையில் வாழ்ந்து வருகின்றார்கள் என்பதற்குப் பல ஆதாரங்கள் அண்மையில் வெளியாகியுள்ளன. இலங்கையில் அக்கால கட்டத்தில் இருந்த ஒரே சமயம் சைவமே. இலங்கையைப் பாதுகாக்கும் ஐந்து ஈஸ்வரங்கள் அன்று தொடக்கம் இன்று வரையில் இங்கு இருந்து வருகின்றன. அவை கீரிமலையில் நகுலேஸ்வரம், மன்னாரில் திருக்கேதீஸ்வரம், திருகோணமலையில் திருகோணேஸ்வரம், சிலாபத்தில் முன்னேஸ்வரம் மற்றும் தெற்கில் மாத்தறையில் தொண்டேஸ்வரம் ஆவன. தொண்டேஸ்வரம் இருந்த இடத்தில் தான் தற்போது தென்துறை (  Dondra,  தேனாவரம்) விஷ்ணு கோயில் இருக்கின்றது. ஆதி சைவத்தமிழர் இந்த நாட்டில் வாழ்ந்த காலத்தில் (பௌத்தம் வரமுன்பு) பௌத்தம், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் எதுவும் இருக்கவில்லை. சிங்களமொழி பேசுவோர் இருக்கவில்லை. இந்த நாட்டின் ஆதிக்குடிகள் சைவத்தமிழரே என்ற சரித்திர உண்மையைத்தான் நான் கூறியுள்ளேன்.

மற்றையோர் இன்னமும் உலகில் உதிக்காத காலத்தில் தான் சைவத்தமிழர் இலங்காபுரியில் இருந்து வந்ததை நான் உணர்த்தியிருந்தேன். மற்றைய இந்துக்கள் என்று நீங்கள் கூறுவது வைஷ்ணவர்களையும் மற்றவர்களையும் என்று நினைக்கின்றேன். ஆதிசைவத் தமிழர் இங்கு வாழ்ந்த காலத்தில் இங்கு வேறு மதங்கள் இருந்ததாக சான்றுகள் இல்லை. எது எப்படியாயினும் பாரசீகர்களே இந்து நதிக்குத் தெற்கில் உள்ளவர்களை இந்துக்கள் என்று அழைத்தார்கள். எனினும் இந்துக்கள் என்ற சொல் ஆங்கிலேயர் காலத்திலேயே பொதுவாக வழக்கிற்கு வந்தது. இந்து மதம் என்று கூறியபோது அவர்கள் அந்த சொற்றொடரினுள் சிவனை வழிபட்டவர்களையும் உள்ளடக்கினர். மேலும் கணபதி, விஷ்ணு, தேவி, முருகன், சூரியன் போன்ற தெய்வங்களை வழிபட்டவர்களையும் உள்ளடக்கினர்.

ஆகவே நான் சைவத்தமிழர் என்று குறிப்பிட்டது தற்காலத் தமிழ் மக்களை அல்ல. 2500 வருடங்களுக்கு முன் இந்த நாட்டில் வாழ்ந்த சைவத்தமிழர்களையே. அந்தக்காலத்தில் மற்றச் சமயிகள் எவரும் இருக்கவில்லை.
நான் திருநீறும் குங்குமப்பொட்டும் அணிவது என் மதத்தின் அணிகலன்கள் என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன். 1965ல் இலங்கை சர்வமத சம்மேளனத்தைத் தொடக்கிய கிட்டத்தட்ட 40 பேர்களுள் இன்று உயிருடன் இருக்கும் ஒரேயொரு நபர் நான் தான் என்று நினைக்கின்றேன். குறித்த சம்மேளனம் 1970ம் ஆண்டின் 13வது சட்டமாக கூட்டிணைக்கப்பட்டுள்ளது. அதன் ஆரம்பக்கால உறுப்பினர்கள் பெயர்களை அச்சட்டத்தில் பார்க்கலாம். அப்பொழுது நாங்கள் ஒரு விடயத்தை புரிந்து வைத்துக் கொண்டிருந்தோம். நாம் எமது மதத்திற்குரிய சின்னங்களை அணிவது எம் மதத்தின் மீதுள்ள வெறியின் நிமித்தம் அல்ல. அம்மதத்தின் பாரம்பரியத்தின் மீதிருக்கும் பற்றின் நிமித்தமே என்று அப்போது ஏற்றுக்கொண்டிருந்தோம்.
சமய குருமார்களே இன்று மதங்களுடன் நிற்பவர்கள். கிறிஸ்தவ பாதிரிகளுக்கு ஒரு உடை உண்டு. இஸ்லாமிய மௌலவிகளுக்கு ஒரு உடை உண்டு. பௌத்தர்கள் வெள்ளை உடுப்பார்கள். என்னுடைய சிறு வயதில் (சுமார் 75 வருடங்களுக்கு முன்) யாழ்ப்பாணத்தில் சுற்றிவரும் போது பலரும் விபூதி, சந்தனம், குங்குமம் அணிந்தே தெருவில் செல்வதைக் கண்டுள்ளேன். அது ஒரு பாரம்பரியம். வெறி அல்ல. இஸ்லாமியர்கள் தங்கள் மத சின்னங்களை அணிவதை எவரும் கேள்விக்குட்படுத்த மாட்டார்கள். கிறிஸ்தவர்கள் தமது மதத்தோடு வாழ்வதை எவரும் கேள்வி கேட்கமாட்டார்கள். பௌத்தர்களைக் கூட கேள்விகேட்க மாட்டார்கள். ஆனால் ஒரு இந்துவிடம் இந்தவாறான கேள்வி கேட்பது நகைப்புக்கிடமானதே!
சைவர்கள் திருநீற்றை அணிவது ஆணவத்தாலோ அகந்தையாலோ அல்ல. அன்பினால்த் தான் அணிகின்றார்கள். அதாவது திருநீற்றை என் நெற்றியில் கண்டவுடன் மற்றவரின் மனதில் இறை எண்ணம் ஏற்பட வேண்டும் என்ற காரணத்தினாலேயே! உங்கள் நெற்றியில் திருநீற்றைக் கண்டால் குங்குமத்தைக் கண்டால் என் மனதில் இறை எண்ணம் மேலோங்க வேண்டும்.

நான் தேவி உபாசகர் என்ற முறையில் குங்குமம் அணிகின்றேன். தேவியின் மந்திரங்களை உச்சரிப்பதால் தேவி நினைவாக குங்குமத்தை அணிகின்றேன். இதில் என்ன வெறி வேண்டியுள்ளது? உண்மையில் திருநீறும் குங்குமமும் எனக்கு எல்லோர் மீதும் அன்பையும் பரிவையுமே தருகின்றன. அவர்களை கிறிஸ்வர்கள், இஸ்லாமியர்கள், பௌத்தவர்கள் என்று நான் பார்ப்பதில்லை. தேவியின் பிள்ளைகளாகவே பார்க்கின்றேன். என்னைப் போய் சமய வெறியன் என்றீர்களே!

நான் என்னைப் பற்றிப் பொதுவாகப் பிதற்றிக் கொள்வதில்லை. என்ன இருந்தாலும் உங்கள் மத்தியில் நான் அறிமுகத்தால் புதியவன். காலத்தால் பழையவன். ஆனால் மத வெறியன் என்று சிலர் என்னை நினைக்கின்றார்கள் என்றவுடன் என்னைப் பற்றிய சில விபரங்களைத் தந்தே ஆக வேண்டும். 1957ம் ஆண்டில் நான் கொழும்பு றோயல் கல்லூரியில் மக்கீன் ஞாபகார்த்த மத ஒப்பீட்டுப் (ஊழஅpயசயவiஎந சுநடபைழைn) பரிசைப் பெற்றபின் கிறிஸ்தவம், இஸ்லாம், பௌத்தம், இந்துமதம் என்ற நான்கு மதங்கள் பற்றியும் மேலும் மேலும் படிக்க நேர்ந்தது. முதலில் பரிசுக்காகப் படித்தேன். அதன் பின் பற்றினால் படித்தேன். ஓரளவு நான்கு மதங்கள் பற்றியும் அறிந்திருந்தேன். பல மதத் தலைவர்களைக் கண்டு அளவளாவியுள்ளேன். மூன்று மொழிகளில் ஓரளவு பாண்டித்தியம் இருப்பதால் பல புத்த பிக்குமாருடன் நான் அளவளாவும்; சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. வஜீராராமய நாரத தேரர், பலாங்கொட ஆனந்த மைத்திரி போன்வர்களுடன் பௌத்தம் பற்றி அளவளாவியுள்ளேன். மட்டக்களப்பில் இத்தாலியக் கத்தோலிக்க மதகுருமாருடன் மன்ரேசாவில் பல மணி நேரம் மதங்கள் சம்பந்தமாக கருத்துப் பரிமாறியுள்ளேன். யாழ்ப்பாண இஸ்லாமிய பெரியாரான குருபாவா கொழும்பில் இருந்த காலத்தில் பல நாட்கள் அவரிடம் சென்று சந்தித்து இஸ்லாம் பற்றி அறிந்துள்ளேன். பிஷ்ருல் ஹாபி என்ற இஸ்லாமிய சமய ஞானி எனது நண்பராக இருந்தார். இந்து சமயப் பெரியார்கள் பற்றி நான் கூறவேண்டிய அவசியமில்லை. யோகசுவாமி முதல் பலருடன் கலந்துரையாடும் பேற்றைப் பெற்றிருந்தேன். ஆகவே மூன்று மொழி ஞானமும் நான்கு மதஞானமும் என்னை வெறியன் ஆக்கியிருக்க முடியாது. வேதியாகவே (அறிந்தவன்) ஆக்கியுள்ளன. நான் படித்த சமயங்கள் யாவும் அன்பின் வௌ;வேறு பரிமாணங்களையே வெளிப்படுத்தி நிற்கின்றன. கிறிஸ்துவம் கொடையை வலியுறுத்துகின்றது. இஸ்லாம் சகோதரத்துவத்தை முன்னிலைப்படுத்துகின்றது. அதுவும் அன்பின் வெளிப்பாடே. இரக்க சிந்தனையும் கருணை உணர்வுமே பௌத்தத்தின் கருப்பொருள். அன்பே சிவன் என்கின்றது திருமந்திரம்.

எனவே இந்த அன்பின் பாற்பட்ட சமயங்களின் சங்கமமாகவே நான் இருக்கின்றேனே ஒளிய என் மதமே நன்மதம் என் மதத்தவரே நல்லவர்கள் மற்றையவர்கள் யாவரும் தீயோர்கள் என்ற எண்ணம் எப்பொழுதும் என் நெஞ்சில் எழுந்ததில்லை. அன்பு வளரும்போது அகந்தை, அகம்பாவம், ஆணவம் ஆகியன தாமாக எம்மைவிட்டு அகன்றுவிடுவன. அங்கு வெறித்தனத்திற்கு இடமிருக்காது. வெறி என்பது அகந்தையின் வெளிப்பாடு. அதற்கும் எனக்கும் வெகுதூரம்.
நன்றி

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முன்னாள் முதலமைச்சர், வடமாகாணம்
செயலாளர் நாயகம், தமிழ் மக்கள் கூட்டணி
இணைத்தலைவர், தமிழ் மக்கள் பேரவை
தலைவர், தமிழ் மக்கள் தேசிய கூட்டணி

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More