மட்டக்களப்பு பல்கலைகழகம் மற்றும் கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையம் என்பவற்றில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு முகாமில் உள்ளவர்களிடம் இருந்து எவ்வித கொடுப்பனவும் அறிவிடப்பட மாட்டாது என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு, கந்தக்காடு கொரோனா தடுப்பு முகாம்களில் அமைதியற்ற நிலை!
மட்டக்களப்பு பல்கலைகழகம் மற்றும் கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையம் என்பவற்றில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு முகாமில் நாளாந்தம் வழங்கப்படும் உணவிற்காக பணம் செலுத்த வேண்டியுள்ளமை தொடர்பில் அப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள மக்கள் தங்களது கவலையை தெரிவித்துள்ளனர்.
அவர்களுக்கு தேவையான உணவை பெற்றுக் கொள்வதற்கு பணம் செலுத்த வேண்டி உள்ளதுடன் அதற்காக 14 நாட்களுக்கு மூன்று வேளை உணவை பெற்றுக் கொள்ள 7500 ரூபா பணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அப்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ள மக்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து அமைதியற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
எவ்வாறாயினும் தென்கொரியா மற்றும் இத்தாலியில் இருந்து இன்று (10) காலை வருகை தந்த 181 பேர் கொரோனா வைரஸ் தடுப்பு முகாமான மட்டக்களப்பு தனியார் பல்கலைக் கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் 179 இலங்கையர்கள் மற்றும் 2 தென்கொரிய நாட்டவர்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் ஈரான், இத்தாலி மற்றும் தென் கொரியா ஆகிய மூன்று நாடுகளில் இருந்து வருகை தருபவர்களை இவ்வாறு இன்று முதல் கொரோனா வைரஸ் தடுப்பு முகாமிற்கு அனுப்பி வைக்க உள்ளதாக விஷேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இதற்கு மேலதிகமாக கந்தக்காடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தடுப்பு முகாமிற்கும் குறித்த நாடுகளில் வருபவர்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது