கொரோனா வைரஸை உலகம் முழுவதும் பரவக்கூடிய தொற்றாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளநிலையில் இதன் பாதிப்பினால் இதுவரை 4 ,627 பேர் பலியாகி உள்ளனர். ஒரு லட்சத்து 26 ஆயிரம் பேருக்கு வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டு, தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். நேற்றையதினம் மாத்திரம் கொரோனா வைரசினால் உலகம் முழுவதும் ஒரேநாளில் 337 பேர் பலியாகியுள்ளதுடன். 7 ஆயிரத்து 352 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் இஸ்ரேலில் உள்ள விஞ்ஞானிகள் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை உருவாக்கியிருப்பதாகவும், இது தொடர்பாக விரைவில் அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. அந்த நிறுவனங்களின் விஞ்ஞானிகள் உருவாக்கிய மருந்துகள் பல்வேறு கட்ட சோதனைகளில் உள்ளது. இதில் சில நிறுவனங்களின் ஆய்வு இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
அவ்வகையில் இஸ்ரேல் நாட்டின் உயிரியல் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பு மருந்து, பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.
அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தால் இன்னும் சில தினங்களில் தடுப்பூசி தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என விஞ்ஞானிகள் கூறியதாக இஸ்ரேல் நாளிதழில் செய்தி வெளியாகி உள்ளது. ஆனால் இது அரசு தரப்பில் உறுதி செய்யப்படவில்லை.
இதேவேளை அமெரிக்காவிலும் இதுவரை 31 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளதுடன் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதனையடுத்து வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் விதமாக பிரித்தானியா தவிர்ந்த ஐரோப்பிய நாடுகளிலிருந்து அமெரிக்கா வருவதற்கு 30 நாட்கள் தடை விதிப்பதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள வோஷிங்டன், பிரான்சிஸ்கோவில் பொது நிகழ்ச்சிகளுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் வோஷிங்டனில் பொதுச் சுகாதார அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது #கொரோனா #பலி #தடுப்புமருந்து #இஸ்ரேல் #முன்னேற்றம் #அமெரிக்கா #தடை