பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 407 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து கொரோனா வைரஸ் நோயாளார்களின் எண்ணிக்கை 1,950 ஆக அதிகரித்துள்ளது. இன்று (17.03.20) பிற்பகல் வெளியாகியுள்ள உத்தியோகபூர்வமான தகவலின்படி பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக இறப்பு எண்ணிக்கை 56 என கணிப்பிடப்பட்டுள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை (17.03.20) காலை 9 மணி வரை 50,442 பேர், பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் 48,492 பேருக்கு நோய்ப்பாதிப்பு இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை மக்களைப் பாதுகாக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் அதிகரித்துள்ளன. இந்த வகையில் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லையானால் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் ஏறத்தாழ 250,000 பேர் வரை உயிரிழக்கும் நிலை ஏற்படலாமென ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
அரசாங்கத்தால் தற்போது வகுக்கப்பட்டுள்ள சமூக தொலைதூர திட்டங்களையும் மீறி சுகாதார சேவை பாரிய அளவில் பாதிக்கப்படுமென கொரோனா வைரஸ் தொடர்பாக அமைச்சர்களுக்கு ஆலோசனை வழங்கிவரும் இம்பீரியல் கல்லூரியின் நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.
இந்த குழுவின் அண்மைய அறிக்கையில், ஒரே சாத்தியமான மூலோபாயம் என்பது சீன மாதிரியிலான அடக்குமுறை கொள்கையாகும், இது முழு மக்களினதும் சமூகத் தொலைநோக்கை உள்ளடக்கியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸுக்கு எதிரான பயனுள்ள தடுப்பூசி கிடைக்கும் வரை இதுபோன்ற நடவடிக்கைகள் 18 மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்திற்குப் பேணப்பட வேண்டும் எனவும், இம்பீரியல் கல்லூரியின் நிபுணர்கள் குழுவின் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. #கொரோனா #பிரித்தானியா #கடுமையான #நோயாளர்கள் #இம்பீரியல்