உலகம் முழுவதும் மிகவும் தீவிரமாக பரவிவரும் கொரோனா வைரஸ் இதுவரை 160 நாடுகளில் பரவி உள்ளது. 244,517 பேருக்கு இந்த வைரஸ் தொற்றியுள்ள நிலையில் 10,030 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி அதிலிருந்த மீண்டவர்களின் எண்ணிக்கை 86,025 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் இத்தாலியில் 3405 பேர் உயிரிழந்துள்ளனர்.
“எனினும், கொரோனா வைரஸ் போன்ற பெருந்தொற்று நோய்களை அடக்குவதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் நாடுகள் தங்களது குடிமக்களை தனிமைப்படுத்தி, சோதித்து, தக்க சிகிச்சை அளிக்க வேண்டும்” என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், உலகிலேயே முதல் முறையாக அமெரிக்காவில் பரிசோதிக்கப்பட்டு வரும் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி ஒரு “நம்ப முடியாத சாதனை” என்று டெட்ரோஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதேவேளை கவர்ச்சிப் பத்திரிகையான ப்ளேபாயும் கொரோனா வைரஸ் தொற்று பரவலால் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் தங்களின் விநியோகம் கொரோனா வைரஸால் பெரிதும் பாதிப்படைந்துள்ள நிலையில், தங்களின் பதிப்புகள் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதால் தங்களின் பதிப்புகளை அச்சிடுவதை தற்போதைய நிலையில் நிறுத்துவதாக ப்ளேபாய் அறிவித்துள்ளது.
66 ஆண்டுகளாக தங்களின் இதழ்களை அச்சிட்டு வரும் ப்ளேபாய், ஒரு கட்டத்தில் மாதத்துக்கு 7 மில்லியன் இதழ்கள் விற்பனை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.