கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் மற்றுமொரு நடவடிக்கையாக சுற்றுப் பயணங்கள், யாத்திரைகளை முற்றாக தடை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. உருவாகியுள்ள நிலைமைகளுக்கு மத்தியில் மக்களை பாதுகாக்கும் வகையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது
மக்கள் பெருமளவில் ஒன்றுகூடுவது நோய் பரவுவதற்கு காரணமாகும் என அறிவுறுத்தப்பட்டிருந்தபோதும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் குழுக்களாக நாட்டினுள் பயணிப்பதாக தகவல் கிடைத்துள்ளது. உள்நாட்டுப் பிரஜைகளும் சுற்றுப் பயணங்களில் ஈடுபட்டுள்ளனர். இத்தகைய ஒன்றுகூடல்கள் நிறுத்தப்படவேண்டியுள்ளது.
மக்கள் நடமாடும் இடங்களில் சுமார் ஒரு மீற்றர் தூரத்தில் தனிநபர் இடைவெளியை பேணுமாறு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை கட்டாயம் பேணுமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
பஸ் மற்றும் புகையிரத சேவை நடைமுறையில் உள்ள சந்தர்ப்பங்களில் இந்த நடைமுறையை பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை பேணுவதற்காக பஸ் வண்டியிலும் புகையிரதத்திலும் பயணிகள் பயணம் செய்வதற்கான எண்ணிக்கையில் அரைவாசி எண்ணிக்கையானோர் மட்டுமே பயணிக்க முடியும்.
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்களை சதொச கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம் உள்ளிட்ட விற்பனை நிலையங்களுக்கு போதுமானளவு அரசாங்கம் விநியோகித்துள்ளது. மக்கள் அசௌகரியத்திற்குள்ளாகாத வகையில் அவற்றை விநியோகிக்குமாறு அந்த விற்பனை நிலையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை (23) முற்பகல் 6.00 மணிக்கு ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டதன் பின்னர் மீண்டும் அதனை அமுல்படுத்துவது குறித்து (22) ஞாயிற்றுக்கிழமை மக்களுக்கு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது #சுற்றுப் பயணங்கள் #யாத்திரை #தடை #கொரோனா #சதொச