சங்கைக்குரிய மகா சங்கத்தினரே
சங்கைக்குரிய ஏனைய மதகுருமார்களே
நண்பர்களே
அன்புடைய பிள்ளைகளே
இது முழு உலகமும் கொரோனா தொற்றுநோய்க்கு முகங்கொடுத்துள்ள சந்தர்ப்பமாகும். இந்த நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ள முடியுமான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த தொற்றுநோய் பரவுவதற்கு ஆரம்பித்த சந்தர்ப்பத்திலிருந்து நாம் அது தொடர்பாக மிகுந்த கவனத்துடன் செயற்பட்டோம். நாம் அவ்வாறு மிகுந்த கவனத்துடன் செயற்பட்ட காரணத்தினாலேயே நோய் ஆரம்பித்த சீனாவின் வூஹான் பிரதேசத்திலிருந்த இலங்கையர்களை உலகின் ஏனைய நாடுகளுக்கு முன்னர் காப்பாற்றி இலங்கைக்கு அழைத்து வர முடிந்தது.
உங்களது உயிர் தொடர்பாக நாம் செலுத்திய கவனத்தை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாம் குறைத்து விடவில்லை. அவர் இலங்கையில் இருந்தாலும், வேறொரு நாட்டிலுள்ள இலங்கையராக இருந்தாலும் அவரது உயிரைப் பாதுகாப்பதற்கு நாம் நடவடிக்கை மேற்கொள்வோம். அந்தப் பொறுப்பு காரணமாகவே தம்பதிவ யாத்திரைக்குச் சென்ற குழுவினரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு நாம் அனைத்து விடயங்களையும் தயார் செய்துள்ளோம்.
அதனால் ஒரு நோயாளி தொடர்பாக அல்லது நோயாளியொருவருடன் பழகிய ஒருவர் தொடர்பாக அறியக் கிடைத்தவுடன் அவரைத் தனிமைப்படுத்தி அவதானிப்பதற்கு நாம் நடவடிக்கை மேற்கொண்டோம். அவ்வாறு கவனஞ் செலுத்தியமையினாலேயே ஆயிரக்கணக்கானவர்களைப் பல நாட்களாக ஓரிடத்தில் தடுத்து வைத்து உணவு குடிபானங்கள், மருந்துகளை வழங்கி தனிமைப்படுத்தி அவதானிக்க இயலுமானது. நாடு என்ற வகையில் அது கடினமான பணி என்பதை விளக்க வேண்டியதில்லை.
எந்தளவு கடுமையான தொற்றுநோயாக இருப்பினும், எந்தளவு கடுமையான பணியாக இருப்பினும் மக்களின் கஷ;டங்களைக் குறைக்கும் வகையிலேயே அரசாங்கம் செயற்படுகிறது என்பதை உங்களுக்கு கூற விரும்புகிறேன். நாம் பிள்ளைகளின் பாதுகாப்புக்காக பாடசாலைகள், பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை வழங்கினோம். படிப்படியாக விமானப் பயணங்களைக் கட்டுப்படுத்தினோம், வருகை தரும் முனையம் மூடப்பட்டுள்ளது. நாட்டு நிலைமை மற்றும் உலக நிலைமையைக் கருத்திற்கொண்டு படிப்படியாகவே நாம் இவற்றைச் செய்தோம். நாம் எதிர்காலத்திலும் இவ்வாறு தான் செயற்படுவோம்.
நான் உங்களுக்கு உரையாற்றும் இச்சந்தர்ப்பத்தில் நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. உலகின் கடுமையான தீவிரவாதத்திற்கு எதிராகச் செயற்பட்ட காலத்திலும் எமக்கு ஒரே தடவையில் முழு நாட்டிலும் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய தேவை ஏற்படவில்லை. எனினும் சிலரின் பொறுப்பற்ற செயற்பாடு காரணமாக இன்று எமக்கு இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேணடியேற்பட்டுள்ளது.
இச்சந்தர்ப்பத்தில் உங்களது, உங்களது பிள்ளைகளது உயிர்களைப் பாதுகாப்பதற்காகவே நாம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம். இதனால் ஏதாவது அசௌகரியங்கள் ஏற்படின் நாம் அது தொடர்பாக வருந்துகிறோம்.
அத்துடன் உங்களது நாளாந்த வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் எம்மால் வழங்க முடியும். பல மாதங்களுக்குத் தேவையான அளவு மருந்துகள், உணவு – குடிபானங்கள், எரிபொருட்கள் என்பன எம்மிடம் உள்ளன. அது தொடர்பாக சந்தேகிக்கவோ, தேவையற்ற குழப்பத்தினை ஏற்படுத்திக்கொள்ளவோ வேண்டாம். நான் இதற்கு முன்பு தெரிவித்தது போன்று எமது அரசாங்கம் மக்களுக்கு எதையும் மறைப்பதில்லை. எமது அனைவரினதும் பாதுகாப்புக்காக நோயாளிகள் தொடர்பான, நோயின் இயல்பு தொடர்பான தகவல்களை மிக விரைவாக மக்களுக்கு வழங்குகிறோம்.
முழு உலகமும் மிகவும் கடினமான நிலைமையை எதிர்நோக்கியுள்ள இச்சந்தர்ப்பத்தில் மிகவும் யோசித்து, தூரநோக்குடன் செயற்படுமாறு நான் வேண்டிக்கொள்கிறேன். வைத்தியர்கள் வழங்கும் அறிவுறுத்தல்கள், அரசாங்கம் வழங்கும் அறிவுறுத்தல்களை முறையாக நீங்கள் பின்பற்றுவீர்களாயின், எமக்கு மிக விரைவில் இந்தத் தொற்றுநோயிலிருந்து மீள முடியும் என நம்புகிறேன். நாம் ஒரே நாட்டு மக்கள் என்ற வகையில் இந்த அனர்த்த நிலைமையில் ஒன்றிணைந்து நிற்போம்.
நாட்டு மக்கள் என்ற வகையில் நாம் இதனை விடவும் பெரிய சவால்களை வெற்றிகொண்டுள்ளோம். நாம் அனைவரும் இந்த அனர்த்தத்திலிருந்து மீள்வதற்கான பலத்தினைக் கொண்டுள்ளோம் என நம்புகிறேன்.
உங்கள் அனைவருக்கும் மும்மணிகளின் துணை.