அனுராதபுர சிறைச்சாலையில் இடம்பெற்ற பதற்றமான சூழ்நிலையினை தொடர்ந்து காவற்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த கைதிகளின் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது. 8பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் துலான் சமரவீர இதனை தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம் சிறைச்சாலையில் நேற்று (21.03.20) மாலை ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையை தொடர்ந்து பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த 5 கைதிகள் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அனுராதபுரம் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் துலான் சமரவீர தெரிவித்துள்ளார்.
கொரோனா – அநுராதபுரம் சிறைச்சாலைக் கலகம் ஒருவர் பலி – மூவருக்கு கடும் காயம்…
Mar 21, 2020 at 14:31
அநுராதபுரம் சிறைச்சாலையில் கோரோனா வைரஸ் தொற்று அச்சநிலை காரணமாக கைதிகள் சிறை வாயிலை உடைத்து வெளியேற முயற்சித்த வேளை கைதிகள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார். அதனால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் இன்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றது.
அநுராதபுரம் சிறைச்சாலையில் பதற்றமான நிலையொன்று ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அதனை கட்டுப்படுத்த காவற்துறையினர் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் அங்கு அழைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அநுராதபுரம் சிறைச்சாலையில் கோரோனா வைரஸ் என்ற சந்தேகத்தில் 2 பேரை அநுராதபுரம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதன்பின்னர் இன்று சுகாதார அமைச்சரால் வெளியிடப்பட்ட தகவலின் அடிப்படையில் அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நான்கு பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அதனால் சிறையில் உள்ள சுமார் 350 கைதிகள் தம்மை வெளியில் செல்ல அனுமதிக்க வேண்டும் என கோரி சிறைச்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ் அரசியல் கைதிகளுடன் சிறை வைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனைக் கைதிகள் சிறையை உடைத்து சிறைச்சாலை உள் வளாகப்பகுதிக்கு வந்துள்ளனர். அங்கிருந்து சிறையின் முன் வாயிலை உடைக்க அவர்கள் முயற்சித்துள்ளனர்.
சிறைச்சாலை அதிகாரிகளின் அழைப்பின் பேரில் அங்கு சிறப்பு அதிரடிப்படையினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டனர். கைதிகளை அடக்க நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார். அநுராதபுரம் வைத்தியசாலையில் 3 கைதிகள் படுகாயமடைந்தநிலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கொரோனா – அனுராதபுரம் சிறையில் கலகம் – துப்பாக்கிச் சூட்டில் மூவர் பலி?
அனுராதபுரம் சிறைச்சாலையில் கொரோனா அச்சம் காரணமாக கைதிகள் சிறை உடைப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன்போது கைதிகளை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் இதில் மூன்று கைதிகள் உயிரிழந்துள்ளதாகவும் கொழும்பு செய்திகள் தெரிவித்துள்ளன. எனினும் அரசாங்க தரப்பில் இருந்து உத்தியோகபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.
இது குறித்து மேலும் வெளியாகி உள்ள தகவல்களின் அடிப்படையில், அனுராதபுரம் சிறைச்சாலையில் கொரோனா வைரஸ் என்ற சந்தேகத்தில் 4 பேரை அனுராதபுரம் வைத்தியசாலையில் சிறை அதிகாரிகள் அனுமதித்துள்ளனர்.
இதன் பின்னர் சிறையில் உள்ள கைதிகள் தம்மை வெளியில் செல்ல அனுமதிக்க வேண்டும் என கோரி அதிகாரிகளுடன் முரண்பட்டநிலையில் முரண்பாடு கூர்மையடைந்துள்ளது. ஆயுள் கைதிகள் அரசியல் கைதிகளுடன் சிறை வைத்திருந்த நிலையில் ஆயுள் கைதிகள் அவர்களை அடைத்து வைத்த சிறையை உடைத்து சிறைச்சாலை உள் வளாகப்பகுதிக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து கைதிகள் சிறையின் முன் வாயிலை உடைக்க முயற்சித்த நிலையில் அதிரடிப்படையினரும் காவற்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
கைதிகளை கட்டுப்படுத்த முடியாத நிலையில் வானை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட போதிலும் நிலைமை கட்டுக்கடங்காமையால் கைதிகளை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. . இதேவேளை அனுராதபுரம் சிறையில் 11 தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்மை குறிப்பிடத்தக்கது.