கொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதை கட்டுப்படுத்தல் மற்றும் அதனுடன் இணைந்த சமூக நலன்பேணல் நடவடிக்கைகளை இலகுபடுத்தும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட நிதியமொன்றை தாபித்துள்ளார். அந்நிதியம் ‘கொவிட்-19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியம்’ என பெயரிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் ஜனாதிபதி நிதியம் அதற்காக 100 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது. இலங்கை வங்கியின் நிறுவன கிளையில் தனியாக விசேட கணக்கொன்று இதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இக்கணக்கு இலக்கம் 85737373 ஆகும்.
தேசிய, சர்வதேச நன்கொடையாளர்கள் சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு பணம் மூலம் பங்களிக்க முடியும். சட்டபூர்வமான கணக்கின் மூலம் நிதியத்திற்கு செய்யப்படும் அன்பளிப்புகள் வரி மற்றும் வெளிநாட்டு நாணய சட்ட திட்டங்களில் இருந்து விலக்களிக்கப்படும். காசோலை, டெலிகிராப் ஊடாக நிதியினை வைப்பிலிட முடியும்.
‘சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்தின்‘ முகாமைத்துவம் மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் நிதி மற்றும் வங்கித் துறையின் உயர் திறன்களுடன் தொழில்வல்லுனர்களைக் கொண்ட பணிக்குழாம் ஒன்றின் மூலம் மேற்கொள்ளப்படும். அமைச்சுக்களின் செயலாளர்கள், சுகாதார பணிப்பாளர் நாயகம், கணக்காய்வு நிபுணர்கள் மற்றும் வங்கித் தலைவர்கள் முகாமைத்துவ சபைக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
நாடு முகம்கொடுத்துள்ள தற்போதைய சவால்களுக்கு மத்தியில் மனிதாபிமான உணர்வுடனும் சகோதரத்துவத்துடனும் அதனுடன் இணைந்து செயற்படுமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.
தேசிய, சர்வதேச நிறுவனங்களும் நிதியத்திற்கு பங்களிப்பதன் மூலம் சுகாதார, சமூக பாதுகாப்பை வலுப்படுத்த பங்காளர்களாவதற்கும் மனிதாபிமான பணியின் மூலம் அனைத்து பிரஜைகளையும் கவனிக்கவும் கிடைத்த விசேட சந்தர்ப்பமாகும் என ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பீ.பி ஜயசுந்தர நம்பிக்கை தெரிவித்தார்.
வெளிநாட்டு அரசாங்கங்கள், சர்வதேச நிதி நிறுவனங்கள், இலங்கையின் முன்னணி தேசிய, சர்வதேச கம்பனிகள் இதில் முக்கிய பங்கை எடுத்துக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
2004 சுனாமி அனர்த்தத்தின் போதும் 2009 மனிதாபிமான நடவடிக்கையின் போதும் எமது நாட்டில் அனைத்து மக்களும் எழுந்திருந்தது இவ்வாறேயாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். #கொரோனா #கட்டுப்படுத்த #ஜனாதிபதி #விசேடநிதியம்