கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மும்பையில் ஒருவர் உயிரிழந்ததையடுத்து, இந்தியாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்ற நிலையில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை பலியாகி உள்ளனர்.
இந்தியாவிலும் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. 500க்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு உத்தரவின் பேரில் அனைத்து மாநிலங்களிலும் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் திவிரப்படுத்தப்பட்டுள்ள போதிலும் வைரசின் தீவிரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. நாடு முழுவதும் 75 மாவட்டங்கள் முடக்கப்பட்டுள்ளன. பல்வேறு மாநிலங்களில் 144 தடை உத்தரவு, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் நடமாட்டம் குறைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் ஏற்கனவே 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இன்று மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் சிகிச்சை பெற்று வந்த 65 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். துபாயில் இருந்து திரும்பிய இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இவர் உயிரிழந்துள்ளார். இவர் மரணம் அடைந்ததையடுத்து, இந்தியாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது #கொரோனா #இந்தியா #உயிரிழப்பு #உயர்வு #மும்பை