உலகயே அச்சுறுத்திவரும் கோவிட்-19 தொற்றுக்கு காரணமான கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பல நாடுகளில் ஊர்கள் அடங்கிவரும் சூழலில், கொரோனா பரவல் ஆரம்பித்த வுஹான் நகரில் மீண்டும் இயல்பு வாழ்க்கை ஓரளவு ஆரம்பமாகியுள்ளது.
சென்ற டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வுஹான் நகரில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. இரண்டு மாத காலத்துக்கும் மேலாக வெளியுலகத்துடன் எந்தவிதமான போக்குவரத்துத் தொடர்பும் இல்லாமல் இருந்த நிலையில் அங்கு இன்று, சனிக்கிழமை, நள்ளிரவு ஒரு ரயில் வந்தடைந்ததாக சீன அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த நகரில் உள்ளூர் போக்குவரத்து, வர்த்தக நிறுவனங்கள் செயல்பாடு ஆகியவை மீண்டும் சிறிய அளவில் இயங்கத் தொடங்கியுள்ளன. ஹூபே மாகாணத்தில் மட்டும் கொரோனவால் இதுவரை 3300 பேர் இறந்துள்ளனர்.