மேற்கு ஐரோப்பிய நாடுகளின் ஆதிக்கம் ( பிரித்தானியா, போர்த்துக்கல், ஒல்லாந்து, பிரான்ஸ், ஸ்பெயின்….) உலகம் முழுதும் கோலோச்சிய காலம் காலனித்துவம் என வரலாற்றின்கண் பேசப்படுகின்றது. எனினும், வரலாற்றில் அடையாளப்படுத்தப்பட்ட காலனித்துவம் என்பது பிரித்தானியரின் ஆட்சிக்காலமே ஆகும். வரலாற்றின் கண் காலனித்துவம் என்பதாக அடையாளப்படுத்தப்படும், பிரித்தானியரின் ஆட்சியை விடுத்து, காலனித்துவம் என்ற சொல்லாடல் குறித்த பொருள் தெளிவு ஏற்படல் என்பது, காலனித்துவம் தொடர்பான தெளிவானப் புரிதலையும், அதன் பாரதூரமான முன்னெடுப்புகள் குறித்து மறுவாசிப்பு செய்யப்பட வேண்டியதன், தேவையையும் நன்கு தெளிவுப்படுத்தும்.
உலகம் முழுதும் தம் கொள்கை நலன் பேணுகை சார்ந்து, தோற்றம் பெற்ற அரசுகள்,தாம் கைப்பற்றிய நாடுகளில், உள்ளுர் பண்பாட்டம்சங்களைப் புறகணித்து, தம் கொள்கை நலன் பேணுகைக்காக, நிறுவிய அரசு முறைமைகளும், அவற்றின் கொள்கை பரப்புகையுமே, காலனித்துவம் என்பதாக விளக்க முடியும். இந்த அடிப்படையில் தமிழ்ச்சூழலில் ஆரியர் வருகைக்கு பின் ஏற்பட்ட ஆரியமயமாக்கம் என்பதும் ஒருவகை காலனித்துவமே. இவற்றை விட வரலாற்றில் பேசப்படும் பேரசுகளின் தோற்றமும் அவற்றின் கொள்கைப் பரப்புகையும் ஒருவகையான காலனித்துவம் தான்.
சுருக்கமாகச் சொன்னால்,காலனிய நலன் பேணும் வகையிலான சிந்தனைசலவைச் செய்யப்படல் என்பதே, காலனித்துவம் என்பதாகக் கூறலாம். காலனிய ஆட்சியாளர்களின் நலன்பேணுகை நோக்கில், நகரமயமாக்கல், நுகர்வுப்பண்பாடு, கலாசாரத் தனியுடைமையாக்கல் என்பதான செயற்பாடுகளின் முன்னெடுப்புகள் இடம்பெற்றமையும், காலனியக்காலத்தில் உருவாகிய, ஆங்கிலம் கற்ற மத்தியதரவர்க்கத்தின் தோற்றமும் உள்ளுர் அறிவுமுறையின் புறகணிப்புக்;கு வழிகோலின.
குறிப்பாக இன்றளவிலும் நடைமுறையில் இருக்கின்ற, சான்றிதழ் மயப்படுத்தப்பட்ட கற்கைநெறி என்பது, உள்ளுர் அறிவுமுறைமையின் புறகணிப்புக்கு வலுவான ஆயுதமாகப் பிரயோகிக்கப்படுகின்றது. பாடசாலைமட்டங்களில் இடம்பெறும் தேர்வுகளும் பல்கலைச்சூழலில் இடம்பெறும் தேர்வுகளும் இன்னும் பிறவும் சான்றிதழ்களை அளவீட்டுக்கோலாகப் பயன்படுத்தலே, பாமரர், படித்தவர் என்ற பிரிவினையை தோற்றுவித்திருக்கின்றது.
குறிப்பாக, மனிதர்களாக பிறந்த நாம் பகுத்தறிவு எனும் ஆளுமையாலேயே, பிற உயிர்களிடமிருந்து வேறுப்படுத்தப்பட்டு நோக்கப்படுகிறோம். எனினும், காலனிய காலத்திற்கு பின்னரான சூழல், என்பது அறிவு என்பதை மட்டிடும் கருவியாக சான்றிதழ்களை வேண்டி நிற்கின்ற மனோநிலையை பரவலாக ஏற்படுத்தியுள்ளது. இந்;நிலையில்தான் அனுபவ அறிவு அல்லது உள்ளுர் அறிவு என்பது கேள்விக்குரியாகின்றது.
இயற்கை விவசாயம் செய்த நம்முன்னோர்கள், எந்தகாலத்தில் என்ன பயிரிடுவது என்பது தொடர்பான அறிவை கைக்கொண்டிருந்தனர்: பாம்பு கடித்தால் விஷமுறிவு ஏற்பட என்ன செய்ய வேண்டுமென விஷக்கடி வைத்தியர் அறிந்திருந்தார்: வளம் வேண்டி சடங்குகளை நெறிமுறையாக நடத்தும் அனுபவம் வாய்க்கப்பெற்றிருந்தனர்: அறிவியல் வளர்ச்சியடையாதக் காலத்தில்கூட கணிதவியல் தொடர்பான எண்ணக்கருக்களும் ( பரிபாடல் ‘ பாழென காலென பாகென…’ பால் – பூச்சியம், கால் -1ஃ4 பாகு- ¾என அளவீடுகளைக் குறித்தது) காலத்தைக் கணித்தல் தொடர்பான அறிவும் வாய்க்கப்பெற்றிருந்தனர்.
ஆனால் காலனியமனோபாவம் இவற்றையெல்லாம், அறிவுடைமையாக ஏற்க மறுக்கின்ற நிலையே நிலவிவருகின்றது. உண்மையில் அறிவு என்பது என்ன? வெறுமனே, நுனிபுல் மேய்தல் நிலையில் நின்றும், தேர்வுகளில் சிறந்த பெறுபேறு பெற்று சான்றிதழ் பெறுதலா?. அறிவு என்பது உண்மையில், குறித்த விடயம் சார்ந்த தெளிவு பெறல் என்பதுடன் மட்டும் மட்டிட்டு நில்லாமல், வலுவான கட்டுக்களைக் கட்டுடைத்து கட்டமைக்க வேண்டிய புத்திக்கூர்மையை ஏற்படுத்திக் கொள்ளலே.
இந்நிலைக்கு மாறாக இன்றளவும், நுகர்வுப்பண்பாட்டு சூழலில் நுகர்வோராக நின்று,உள்ளுர் அறிவு முறைமையை புறக்கணிப்பதோடு, பாமரர் என்ற முத்திரையைப் பதிக்கவும், விளைந்துள்ள சூழலே பரவலாக இடம்பெற்று வருகின்றது. கூத்துக்கலையில் சிறந்து விளங்கும் அண்ணாவிமார்கள், நாட்டார் இசையில் சிறந்துவிளங்கும் நாட்டுப்புறக் கலைஞர்கள், வேளாண்மை தொழிலில் சிறந்து விளங்கும் நிபுணர்கள், கடற்தொழிலில் நிபுணத்துவமுடையோர்,கவிபாடும் மரபுகள் என உள்ளுர் அறிவுமுறைமை என்பது, கலைசார்ந்தும் பிற துறைசார்ந்தும் விரிவுப்பட்டு நிற்கின்றநிலையில், சான்றிதழ் என்ற அளவீட்டைக் கொண்டு, உள்ளுர் அறிவு முறையை புறக்கணித்தல் என்பது அபத்தமானதே.
இரா.சுலக்ஷனா
நுண்கலைத்துறை,
கிழக்குப்பல்கலைக்கழகம்.