131
மன்னார் மாவட்டத்தில் ‘கொரோனா’ வைரஸ் தொற்றிற்கு உள்ளாகி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இருந்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டவர்களில் இது வரை எவரும் குறித்த வைரஸ் தொற்றிற்கு உள்ளாகவில்லை என பரிசோதனையின் பின்னர் கண்டறியப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி தர்மராஜா வினோதன் தெரிவித்தார்.
இவ்விடையம் தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,,,,
மன்னார் மாவட்டத்தில் இதுவரை ‘கொனோரா’ வைரஸ் தாக்கத்திற்கு உள்ளானவர்கள் என எவரும் கண்டறியப்படவில்லை. சந்தேகத்தின் நிமித்தம் ஒரு சிலர் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். எனினும் அனுப்பி வைக்கப்பட்டவர்களில் யாரும் குறித்த நோய்த்தாக்கத்திற்கு உள்ளாகவில்லை என பரிசோதனையின் பின் எமக்கு அறிக்கைகள் கிடைத்துள்ளது.
குறித்த நோய் சம்பந்தமான அறிவுரைகள் பொது மக்களுக்கு வழங்கிய போது கடந்த மூன்று வாரங்களாக பொது மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு போன்று சமூக இடைவெளி, பாதுகாப்பான சுகாதார விடயங்களில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும் என கேட்டு நிற்கின்றேன். இதை எமது மன்னார் மக்கள் தொடர்ந்து பின் பற்றி வருவார்கள் என்றால் இவ் தொற்று நோய்க்கு மன்னார் மக்கள் தப்பித்துக் கொள்ள முடியும்.
ஏற்கனவே பொது மக்களுக்கு விடுத்திருக்கும் அறிவுரையை அதாவது யாராவது வெளி இடங்களிலிருந்து வருகை தந்திருந்தாலும், அத்துடன் தொற்று நோய்க்கான அறி குறிகள் தென்பட்டால் எங்களுக்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்தும் போது நாங்கள் அவ்விடத்துக்கு வருகை தந்து இவ் விடயமான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.
ஆனால் இவைகளை மறைத்து வைத்திருந்து இறுதி நேரத்தில் தெரிய வரும் பட்சத்தில் குடும்பங்களுக்கோ அல்லது சமூகத்துக்கு ஏற்படும் விளைவு என்ன என்பது நாளாந்தம் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.
ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படுகின்ற போது மக்கள் பயணம் செய்கின்ற போதும் கடைகளில் பொருட்கள் கொள்முதல் செய்யும் போதும் சமூக இடைவெளியை கட்டாயம் கவனித்து செயல் பட வேண்டும் என மிக கண்டிப்பான முறையில் மக்களுக்கு அறிவுறுத்துகின்றோம்.
மன்னார் மாவட்டத்தில் சகல வைத்தியசாலைகளிலும் வைத்திய அதிகாரிகள் எப்பொழுதும் தயார் நிலையில் இருக்கின்றார்கள். வெளி நோயார் பிரிவுக்கு வந்து அவசியம் நோய்க்கு சிகிச்சை பெற வேண்டும் என்று கருதினால் மட்டும் வந்து செல்லலாம். கிளினிக் நோயாளர்களுக்கு பிரதேச வைத்தியசாலை பகுதிகளில் நேரடியாகச் சென்று அவர்களுக்கான மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அவ்வாறு மாவட்ட வைத்தியசாலை பகுதிகளில் தபால் திணைக்கள உதவியுடன் மருந்துகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
தனியார் பகுதிகளில் மருந்துகள் பெற வேண்டுமானால் மன்னார் மாவட்டத்தில் ஐந்து மருந்தகம் அடையாளம் காணப்பட்டு பொது மக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுடன் தொடர்பு கொள்ளும் போது இவர்கள் வீடுகளுக்கு வந்து தருவார்கள். இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவர்களுடனான தொலை பேசி இலக்கங்கள் சுகாதார இணையத் தளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
இது கடினமாக இருந்தால் அருகிலுள்ள பொது சௌக்கிய சுகாதார அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டால் அவர்கள் உதவி செய்வார்கள். ஆகவே இன்றைய நிலையில் தேவையற்ற முறையில் வைத்தியசாலைக்கு வருவதை தவிர்த்துக் கொள்ளுங்கள் என மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி தர்மராஜா வினோதன் மேலும் தெரிவித்தார். #மன்னார் #கொரோனா
Spread the love