இந்தியாவில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்குச்சட்டம் எதிர்வரும் செப்டம்பர் வரை நீடிக்கப்படலாம் என அமெரிக்க ஆலோசனை நிறுவனமான பொஸ்டன் கன்சல்டிங் குழுவின் ஆய்வு தெரிவித்துள்ளது. கொரோனா வைரசால் வரும் 14ஆம் திகதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி, இந்தியாவில் 2,902 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 68 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், 14ஆம் திகதியோடு ஊரடங்கு தளர்த்தப்படுமா? அல்லது நீட்டிக்கப்படுமா? ஏன்பதே அனைவரதும் கேள்வியாக உள்ளநிலையில் இந்தியாவில்; ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என பொஸ்டன் கன்சல்டிங் குழுவின் ஆய்வு தெரிவித்துள்ளது.
‘இந்தியாவில் அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு ஜூன் மாத இறுதி மற்றும் செப்டம்பர் மாத இரண்டாவது வாரத்துக்கு இடைப்பட்ட காலத்தில் நீக்கப்படலாம். சுகாதாரத் துறை மற்றும் அரசின் திட்டங்களின் செயல்பாட்டால் ஏற்படும் முன்னேற்றங்களைப் பொறுத்தே ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதற்கான வாய்ப்பு உருவாகும்’ என பொஸ்டன் கன்சல்டிங் குழு தெரிவித்துள்ளது.
மேலும் அங்கு ஜூன் மாதத்தின் மூன்றாவது வாரத்தில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் என்ற தகவலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஏப்ரல் 14 ஆம் திகதிக்கு பின்ன ஊரடங்கை நீட்டிக்கும் எந்த திட்டமும் தற்போதைக்கு இல்லை என நாடாளுமன்ற செயலர் ராஜீவ் கவுபா தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. #இந்தியா #ஊரடங்கு #செப்டம்பர் #கொரோனா