மறுமதிப்பீடுகளுடன் மாண்பு செய்யப்பட வேண்டிய சுத்திகரிப்புச் சேவைத்துறை சுத்திகரிப்புச்சேவைத் துறையின் மேம்படுத்துகைக்கான ஓர் முன்மொழிவு
இன்று இந்த உலகத்தில் வாழுகின்ற மனிதர்களாகிய நாம் கொரொனா வைரசின் ஆட்கொல்லும் அபாயத்துக்குள் அகப்பட்டுக் கொண்டு அந்த ஆபத்திலிருந்து எம்மை விடுவித்துக் கொள்வதற்கான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம்.
இந்தச்சூழலில் மனிதன் கண்டுபிடித்த இராணுவ வல்லமையைக் காட்டும் ஆயுதங்கள் எவற்றாலும் மனித உயிர்களுக்குப் பாதுகாப்பு வழங்க முடியாது என்பது ஆரம் பிக்கப்பட்டு விட்டது. அதிநவீன புலனாய்வு நடவடிக்கைகளாலும் கொரொனா வைரசின் பரவலைத் தடுக்க முடியாது போய்விட்டது. இப்பின்னணியில் உலகத்தின் பாதுகாப்பு, உலகில் வாழும் மனிதர்களின் பாதுகாப்பு மருத்துவம், சுகாதாரம், சுத்திகரிப்பு எனும் மூன்று முக்கிய விடயங்களிலேயே தங்கியுள்ளது என்பது உணரப்பட்டு வருகின்றது.
கொரொனா வைரசின் தாக்குதலிலிருந்து மனிதர் தம்மைப் பாதுகாப்பதற்கான ஒரே வழி சுத்தமாக இருத்தலும் மருத்துவர்கள் வலியுறுத்தும் சுகாதார ஆலோசனைகளைச் சரிவரக் கடைப்பிடித்தலுமே என்பது வலியுறுத்தப்பட்டு வருகின்றது. ஆட்கொல்லி வைரசுக்கு எதிராகத் தமது உயிரையே பணயம் வைத்து இவ்வனர்த்தத்திற்கு எதிராகப் போராடி வரும் மருத்துவர்கள். தாதியர்கள், மருத்துவப்பணியாளர்கள் மாண்புக்கும் மரியாதைக்கும் உரியவர்களாகக் காட்சி தருகின்றார்கள். இரவு பகலாக மனித உயிர்களைக் காத்துக் கொள்வதற்காக அயராது பணியாற்றும் மருத்துவத்துறை சார்ந்த மனிதர்கள் மீது அளவுகடந்த பேரன்பு ஊற்றெடுக்கின்றது.
மருத்துவத்துறையினரோடு நாம் மாண்பு செய்ய வேண்டிய மற்றொரு பணியாளர்கள் நம்மத்தியில் வாழ்ந்து வருகின்றார்கள் அவர்கள் யாரெனில் சுத்திகரிப்புப் பணியில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் ஆவர். நாளாந்தம் நாம் வாழும் சூழலைச் சுத்தம் செய்வதில் இவர்களுடைய இயக்கம் மிகவும் இன்றியமையாததாக இருந்து வருகின்றது. இம்மனிதர்களின் சமூக பண்பாட்டு பொருளாதார வாழ்நிலை குறித்துக் கவனஞ்செலுத்தி இத்தகைய மனிதர்களின் நலனோம்பு நடவடிக்கைகளில் நாம் அக்கறை செலுத்த வேண்டியது தேவையாகி நிற்கின்றது.
அதாவது இவர்கள் கடமையில் ரூடவ்டுபடும்போது அணிந்து கொள்ள வேண்டிய பாதுகாப்பான ஆடைரூபவ்அங்கிகள் தொடர்பாகவும் அவற்றை வடிவமைத்துப் பெற்றுக்கொடுத்தல் பற்றியும் இவர்களுக்கான வாழ்வாதார வசதிகளைத் தேவையான அளவு கிடைக்கச் செய்தல் என்பவற்றிலும் அதிக கவனஞ்செலுத்த வேண்டியதுடன் இச்சேவையாளர்கள் பற்றிய சமூகப்பண்பாட்டு மதிப்பீடுகளை மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டியதும் அவசியமாகியுள்ளது.
மருத்துவத்துறையினோடு சம்பந்தப்பட்ட துறையாக, சுத்திகரிப்புத் தொழில் உள்ள போதும் அத்துறை சார்ந்த சமூகப்பார்வை வேறுவிதமாகவே இருந்து வருகின்றது. இன்றைய பேரனர்த்தம் மருத்துவம் சுகாதாரம், சுத்திகரிப்பு எனும் நேர்கோட்டில் வரும் ஓர் அத்தியாவசிய சேவையாக அத்துறையினரின் முக்கியத்துவத்தை நமக்கு இடித்துரைத்து நிற்கின்றது.
எனவே மனித குலத்தின் பாதுகாப்பான எதிர்கால வாழ்வியலுக்கான அடிப்படைச் சேவைகளைச் செய்து வரும் சுத்திகரிப்புத்துறையினர் குறித்தும் அச்சேவையில் பணியாற்றும் மனிதர்கள் பற்றியும் அவர்களின் பொருளாதார மேம்பாடுகள் சம்பந்தமாகவும் அதீத அக்கறை செலுத்தி அத்துறை குறித்த சமூக பண்பாட்டு ரீதியிலான மறுமதிப்பீடுகளை மேற்கொண்டு அவற்றை ஆக்கபூர்வமான முறைமைகளில நடைமுறைக்குக் கொண்டு வருவோம்.
கலாநிதி சி.ஜெயசங்கர்
து.கௌரீஸ்வரன்