இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 162 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, பேருவளை – பன்னில பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான தாய் ஒருவருடன் பழகிய 150 பேர் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக சுகாதாரத் துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
அவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக பேருவளை சுகாதார அத்தியட்சகர் வருண செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
பிரசவத்திற்காக குறித்த தாய் களுத்துறை – நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது.
தற்போது அவர் குழந்தையை பிரசவித்துள்ளதுடன், தாயும் சிசுவும் கொழும்பு நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பேருவளை சுகாதார அத்தியட்சகர் வருண செனவிரத்ன தெரிவித்தார்.
பேருவளையில் இதுவரையில் 12 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதற்கமைய, 07 கிராம சேவகர் பிரிவுகள் அடையாளம் காணப்பட்டு தேவையான சுகாதார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பேருவளை சுகாதார அத்தியட்சகர் சுட்டிக்காட்டினார்.