ரஸ்யாவில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள போது தன் வீட்டு வாசலில் சத்தமாக பேசிய 5 பேரை ஒருவர் சுட்டுக்கொன்றுள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள நிலையில் ரஸ்யாவிலும் சில பகுதிகளில் ஊரடங்குச்சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தலைநகர் மொஸ்கோவிலிருந்து தென்கிழக்கில் 200 கி.மீ தொலைவில் உள்ள ரியாசான் என்னும் பிராந்தியத்தில் உள்ள யெலட்மா கிராமத்தில் இவ்வாறு துப்பாக்கிச்சூடு நடந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை இரவு 31வயதுடைய நபர் ஒருவரின் வீட்டு ஜன்னலுக்கு வெளியே சில இளம் வயது ஆண்களும் பெண்களும் கூட்டமாக நின்று சத்தமாக பேசிக்கொண்டிருந்துள்ளனர். இதனால், ஆத்திரம் அடைந்த குறித்த நபர் அவர்களை சென்று அங்கிருந்து செல்லுமாறு கோரியுள்ளார்.
இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கோபத்தின் உச்சிக்கு சென்ற அந்த நபர், தன்னிடம் இருந்த கைதுப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுட்டுள்ளார். இதில், 4 ஆண்கள், ஒரு பெண் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக யாசான் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #ரஸ்யா #ஊரடங்கு #சுட்டுக்கொலை