செல்வந்தர்களும் நடுத்தர வர்க்கத்தினரும் தத்தம் குடியிருப்புகளுக்குள் தம்மைப் பாதுகாத்துக் கொண்ட பின், நமது நகரங்களும் பெரு நகரங்களும் தமது உழைக்கும் வர்க்க குடிமக்களையும், புலம் பெயர்ந்து வந்த தொழிலாளர்களையும், தேவையின்றி சேர்ந்து விட்ட சுமையாகக் கருதி, அவர்களைப் பிதுக்கி வெளியேற்றத் தொடங்கின.
“வைரலாகிவிட்டது” என்ற வார்த்தையை சிறிதேனும் அச்சமின்றி நாம் யாரேனும் இனி பயன்படுத்த இயலுமா?
நம்முடைய நுரையீரல்களைக் கவ்விக் கொள்ளக் காத்திருக்கின்ற, கண்ணுக்குப் புலப்படாத, செத்துப் போகாத ஆனால் உயிரும் இல்லாத சின்னஞ்சிறிய உறிஞ்சு குமிழ்கள், படைபடையாக அப்பிக் கொண்டிருக்குமோ என்றெண்ணி பீதியடையாமல், ஒரு கதவின் கைப்பிடியையோ, ஒரு அட்டைப்பெட்டியையோ, ஒரு காய்கறிப் பையையோ இனிமேலும் நம்மால் தொட முடியுமா?
அறிமுகமில்லாத ஒருவரை முத்தமிடலாம் என்றோ, பேருந்தில் தாவி ஏறலாமென்றோ, குழந்தையை பள்ளிக்கு அனுப்பலாமென்றோ, அச்சம் சிறிதுமின்றி நம்மால் இனி யோசிக்க முடியுமா? சின்னச் சின்ன சந்தோசங்களாகக் கூட இருக்கட்டும். அவற்றில் பொதிந்திருக்கும் அபாயங்களை எடை போட்டுப் பார்க்காமல் அத்தகைய சந்தோசங்களைப் பற்றி நாம் நினைத்துப் பார்க்கவும் முடியுமா? நாம் ஒவ்வொருவருமே இப்போது போலி தொற்றுநோய் வல்லுநர்கள் (Quack), போலி நச்சுயிரி வல்லுநர்கள், போலி புள்ளிவிவர வல்லுநர்கள் ஆகிவிட்டோம், இல்லையா? ஏதேனும் ஒரு அற்புதம் நிகழாதா என்று ரகசியமாக பிரார்த்தனை செய்யாத மருத்துவரோ அறிவியலாளரோ இருக்கிறார்களா? அல்லது ரகசியமாகவேனும் அறிவியலுக்குத் தலைவணங்காத மதகுருவோ புரோகிதனோ இருக்கிறார்களா?
வைரஸ் ஒருபுறம் பல்கிப் பெருகிக் கொண்டிருக்க, இன்னொருபுறம் நகரங்கள் அனைத்திலும் பறவைகளின் இசை ஓங்கி ஒலிப்பதையும், சாலைச் சந்திகளில் மயில்கள் நடனமாடுவதையும், அமைதியான வானத்தையும் கண்டு மனக்கிளர்ச்சி கொள்ளாதவர்கள் நம்மில் யார்?
உலகெங்கும் நோய் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை, இந்த வாரத்தில் பத்து லட்சத்தைக் கடந்து விட்டது. 50,000 பேருக்கு மேல் இறந்து விட்டனர். உயிரிழப்பின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் அதிகரிக்கும் என்று மதிப்பீடுகள் கூறுகின்றன. சர்வதேச வர்த்தகத்தின் பாதைகளின் வழியே, சர்வதேசத் தலைநகரங்கள் அனைத்திற்கும் சுதந்திரமாகப் பயணம் செய்திருக்கிறது இந்த வைரஸ். அது தோற்றுவித்த கொடிய நோய், மனிதர்கள் அனைவரையும் தத்தம் நாட்டுக்குள், தமது நகரத்துக்குள், தமது வீட்டுக்குள் வைத்துப் பூட்டி விட்டது.
இந்த வைரஸ் பல்கிப் பெருக விரும்புகிறது. ஆனால் எல்லை கடந்து பாயும் மூலதனத்தைப் போன்ற லாபவெறி இந்த வைரஸுக்கு இல்லை. அதனால்தானோ என்னவோ, மூலதனம் பாயும் திசைக்கு எதிர்த்திசையில் இந்த வைரஸ் பாய்ந்திருக்கிறது. குடியேற்றக் கட்டுப்பாடுகள், பயோமெட்ரிக் மற்றும் டிஜிட்டல் கண்காணிப்புகள், சகலவிதமான தகவல் பகுப்பாய்வுகள் ஆகிய அனைத்தையும் கேலிப்பொருளாக்கி விட்டு, உலகின் வலிமை வாய்ந்த பணக்கார நாடுகளுக்குள் நுழைந்து அவர்களைத்தான் இந்த வைரஸ் இதுவரையில் கடுமையாகத் தாக்கியிருக்கிறது. முதலாளித்துவத்தை இயக்கிச்செல்லும் எந்திரமான அவர்களைத் திடுமென உலுக்கி நிறுத்தியிருக்கிறது. இதுவொரு தற்காலிகமான நிறுத்தம் மட்டுமே என்பது உண்மைதான். ஆனால் இந்த முதலாளித்துவ எந்திரத்தின் உறுப்புகளைப் பிரித்துப் பார்த்து, இதையே சீர் செய்வதற்கு நாம் உதவ வேண்டுமா, அல்லது இதனைத் தலைமுழுகிவிட்டு, வேறொரு நல்ல எந்திரத்தைத் தேடவேண்டுமா என்று ஆராய்வதற்கு இந்த இடைநிறுத்தம் வழங்கியுள்ள அவகாசம் நமக்குத் தாராளமாகப் போதும்.
இந்தப் பெருந்தொற்று நோயை சமாளிக்கும் அதிகாரத்தில் அமர்ந்திருப்போருக்கு, போர் பற்றிப் பேசுவதுதான் மிகவும் பிடிக்கும். போர் என்ற சொல்லை ஒரு உருவகமாக அவர்கள் பயன்படுத்தவில்லை. உண்மையிலேயேதான் பயன்படுத்துகிறார்கள். இது உண்மையிலேயே ஒரு யுத்தம்தான் என்றால், அமெரிக்காவைக் காட்டிலும் யுத்தத்துக்குத் தயார் நிலையில் இருக்கவல்ல நாடு எது? கொரோனாவுக்கு எதிரான இந்த யுத்தத்தின் படையணியாய் முன்வரிசையில் நிற்பவர்களுக்குத் தேவைப்படுவன, முக கவசங்களாகவோ கையுறைகளாகவோ இல்லாமல், துப்பாக்கிகள், குறிதவறாக் குண்டுகள், நிலவறை தகர்க்கும் குண்டுகள், நீர்மூழ்கிகள், போர் விமானங்கள், அணு குண்டுகள் போன்றவையாக இருப்பின் அமெரிக்காவில் அதற்குப் பற்றாக்குறை வந்திருக்குமா என்ன?
இரவுகள் தோறும் நியூயார்க் நகரின் ஆளுநர் ஊடகங்களுக்கு அளிக்கும் பேட்டியை, பூமியின் இந்தப் புறத்திலிருந்து நம்ப முடியாத ஆச்சரியத்துடன் நாம் பார்க்கிறோம். புள்ளி விவரங்களைக் காண்கிறோம். அமெரிக்க மருத்துவமனைகள் நிரம்பி வழியும் கதைகளைக் கேட்கிறோம். குறைந்த ஊதியத்துக்கு மிதமிஞ்சி உழைக்கும் செவிலியர்கள், முகக் கவசங்கள் கிடைக்காமல், குப்பைக் கூடைக்குப் பயன்படுத்தப்படும் பாலித்தின் பேப்பர்களையும், பழைய மழைக்கோட்டுகளையும் வைத்து முகக் கவசம் தயாரித்துக் கொள்வதையும், நோயாளிகளைக் காப்பாற்றுவதற்காக தங்களையே பணயம் வைப்பதையும் பார்க்கிறோம். வென்டிலேட்டர்களை வைத்திருக்கும் மாநிலங்கள் அவற்றை ஏலம் விடுகின்றன. பற்றாக்குறையாக உள்ள மாநிலங்கள் போட்டி போட்டுக்கொண்டு ஏலம் கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன. எந்த நோயாளிக்கு வென்டிலேட்டர் தருவது – யாரை வென்டிலேட்டர் இல்லாமல் சாக விடுவது என்று தீர்மானிக்க முடியாத மருத்துவர்களின் ஊசலாட்டத்தையும் பார்க்கிறோம். “கடவுளே, இதுதான் அமெரிக்காவா?” என்று நமக்குள் அதிர்ந்து உறைகிறோம்.
***
இந்தப் பெருந்துயர் உண்மையானது, உடனடியானது, பிரம்மாண்டமானது, நம் கண்முன்னே விரிந்து கொண்டிருப்பது. ஆனால் புதியது அல்ல. இது பல ஆண்டுகளாகத் தடம் புரண்டு தட்டுத்தடுமாறி ஓடிக்கொண்டிருந்த ரயிலுக்கு நேர்ந்திருக்கும் விபத்து. கைகழுவப்படும் அமெரிக்க நோயாளிகள் குறித்த வீடியோக்களை நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். அவற்றை மறக்க முடியுமா? பின்புறம் நிர்வாணமாகத் தெரிகின்ற மருத்துவமனை உடை அணிவிக்கப்பட்ட நிலையிலேயே, (பணம் கொடுக்க முடியாத) பல நோயாளிகள் கள்ளத்தனமாக மருத்துவமனையிலிருந்து விரட்டப்பட்டு தெருவோரத்தில் வீசப்படுவதில்லையா? அமெரிக்க மருத்துவமனைகளின் கதவுகள் ஏழை அமெரிக்க குடிமக்களுக்கு எந்தக் காலத்தில் திறந்திருக்கின்றன? ஏழைகளுடைய நோயையோ, துயரையோ மருத்துவமனைகள் எப்போதாவது பொருட்படுத்தியிருக்கின்றவா?
இதுவரை இல்லை. ஆனால் இப்போது? இந்த கொரோனா வைரஸின் யுகத்தில், ஏழை மனிதனின் நோய், பணக்கார சமூகத்தின் ஆரோக்கியத்தைப் பாதிக்கிறதே! ஆயினும் என்ன, இப்போதும் கூட, “அனைவருக்கும் மருத்துவம்” என்ற கோரிக்கைக்காக விடாப்பிடியாகப் போராடிவரும் செனட் உறுப்பினர் பெர்னி சாண்டர்ஸ், வெள்ளை மாளிகைக்கு உள்ளே நுழையக்கூடாதவர் என்றுதானே கருதப்படுகிறார் – அவருடைய சொந்தக் கட்சியினரே அப்படித்தானே கருதுகிறார்கள்!
என்னுடைய நாட்டின் கதை என்ன? நிலப் பிரபுத்துவத்துக்கும் – மத கடுங் கோட்பாட்டு வாதத்துக்கும், சாதிக்கும் – முதலாளித்துவத்துக்கும் இடையிலான ஏதோ ஒரு இடத்தில் தொங்கவிடப்பட்டு, தீவிர வலதுசாரி இந்து தேசியவாதிகளால் ஆளப்பட்டு வரும் என்னுடைய ஏழ்மை நிறைந்த பணக்கார நாடான இந்தியாவின் கதை என்ன?
டிசம்பரில் வூகானில் இந்த நோய்த்தொற்றுக்கு எதிராக சீனா போராடிக் கொண்டிருந்தது. இங்கே பல்லாயிரக்கணக்கான இந்தியக் குடிமக்கள், நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட, அப்பட்டமான ஓரவஞ்சனை கொண்ட முஸ்லிம் எதிர்ப்பு குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகப் போராடிக் கொண்டிருந்தனர். இந்திய அரசு இந்தப் போராட்டத்தை கையாண்டு கொண்டிருந்தது.
அமேசான் காடு தின்னியும், கொரோனா மறுப்பாளருமான பிரேசில் அதிபர் பொல்சானரோ, நமது குடியரசு தினக் கொண்டாட்டத்தின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று விடைபெற்றுச் சென்ற சில நாட்களில், அதாவது ஜனவரி 30 அன்று இந்தியாவின் முதல் கொரோனா தொற்று குறித்த செய்தி வெளியானது. இருப்பினும் பிப்ரவரி மாதத்தில் ஆளும் கட்சியால் கொரோனாவுக்கு நேரம் ஒதுக்க இயலவில்லை. அவர்களுக்கு நிறைய வேலை இருந்தது. பிப்ரவரி இறுதியில் அமெரிக்க அதிபர் டிரம்பின் அதிகார பூர்வ விஜயம். குஜராத்தில் ஒரு விளையாட்டு மைதானத்தில் பத்து லட்சம் பேர் கொண்ட கூட்டத்தை உங்களுக்கு கூட்டிக் காட்டுகிறோம் என்று டிரம்ப்புக்கு ஆசை காட்டியிருந்தார்கள். இதற்கெல்லாம் பெருமளவு பணத்தை மட்டுமல்ல, நேரத்தையும் செலவிட வேண்டியிருந்தது.
அப்புறம் டெல்லி சட்டமன்றத் தேர்தல் வந்தது. ஏறி அடிக்காவிட்டால் பாஜக தோற்றுவிடும் என்று கணிப்புகள் கூறின. பாஜக ஏறி அடித்தது. வரைமுறையற்ற வன்மம் நிறைந்த இந்து தேசவெறியைத் தூண்டியதுடன், வன்முறையில் இறங்குவோம் என்றும் துரோகிகளைச் சுட்டுக் கொல்வோம் என்றும் பிரச்சாரம் செய்தது.
இருந்த போதிலும் தோல்வியைத் தழுவியது. அடுத்து, இந்த அவமானகரமான தோல்விக்குக் காரணமான டெல்லி முஸ்லிம்களுக்குத் தண்டனை வழங்கும் படலம் தொடங்கியது. வட கிழக்கு டில்லியின் உழைக்கும் மக்கள் குடியிருப்பு பகுதிகளில், ஆயுதம் தாங்கிய இந்து காலாட்படையினர் போலீசின் உதவியுடன் முஸ்லிம்கள் மீது தாக்குதல் தொடுத்தனர். வீடுகள், கடைகள், மசூதிகள், பள்ளிகள் எரிக்கப்பட்டன. இப்படி ஒரு தாக்குதல் வரும் என்று எதிர்பார்த்திருந்த முஸ்லிம்கள் எதிர்த்துப் போராடினார்கள். 50 க்கும் மேற்பட்டோர் – முஸ்லிம்களும் சில இந்துக்களும் – கொல்லப்பட்டனர்.
ஆயிரக்கணக்கானோர் உள்ளூர் கல்லறைகளில் அமைக்கப்பட்டிருந்த அகதி முகாம்களில் தஞ்சமடைந்தனர். டில்லியின் நாற்றமெடுத்த பாதாள சாக்கடைகளிலிருந்து சிதைந்து போன உடல்களை அகழ்ந்தெடுக்கும் பணி தொடர்ந்து கொண்டிருந்தது. அப்போதுதான் கொரோனா வைரஸ் தொடர்பான முதல் கூட்டத்தை அரசு அதிகாரிகள் நடத்தத் தொடங்கினர். ஹாண்ட் சானிடைசர் என்றொரு திரவியம் இருப்பதாக பெரும்பாலான இந்தியர்கள் அப்போதுதான் கேள்விப்படத் தொடங்கினர்.
மார்ச் மாதத்திலும் அவர்களுக்கு வேலை அதிகம். முதல் இரண்டு வாரங்கள், ம.பி காங்கிரசு அரசைக் கவிழ்த்து பாஜக அரசை நிறுவும் பணிக்கு செலவிடப்பட்டன. கோவிட்-19 அல்லது கொரோனா என்பது உலகு தழுவிய பெருந்தொற்று (பாண்டமிக்) என்று உலக சுகாதார நிறுவனம் மார்ச் 11 அன்று அறிவித்தது. இரண்டு நாட்கள் கழித்து, மார்ச் 13 அன்று கொரோனா தொற்று நோயை சுகாதார அவசரநிலைப் பிரச்சனையாக கருதவியலாது” என்று மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்தது.
இறுதியாக மார்ச் 19 அன்று இந்தியப் பிரதமர் தேசத்துக்கு உரையாற்றினார். அவர் அதிகம் மெனக்கிடவில்லை. பிரான்சும் இத்தாலியும் என்ன செய்தார்களோ அதை அப்படியே கடன் வாங்கிக் கொண்டார். சமூக இடைவெளியை பராமரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். (சாதியப் பண்பாட்டில் ஊறிய இந்த சமூகத்துக்கு சமூக இடைவெளி என்பது எளிதில் புரியக் கூடியதே.) மார்ச் 22 அன்று மக்கள் ஊரடங்கு என்று அறிவித்தார். இந்த நெருக்கடியை சமாளிக்க தனது அரசு என்ன செய்யப் போகிறது என்று அவர் எதுவும் சொல்லவில்லை. மாறாக, எல்லோரும் பால்கனியில் நின்று மணியடிக்க வேண்டும் என்றும் பாத்திரங்களையும் தட்டுகளையும் தட்டி மருத்துவப் பணியாளர்களுக்கு தமது மரியாதையைத் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறினார்.
அதே நேரத்தில், அந்த மருத்துவப் பணியாளர்களுக்கு வழங்கியிருக்க வேண்டிய பாதுகாப்புக் கவசங்களையும், மருத்துவமனைகளுக்கு ஒதுக்க வேண்டிய சுவாச மீட்புக் கருவிகளையும் அந்தக் கணம் வரை இந்தியா ஏற்றுமதி செய்து கொண்டிருந்தது என்ற விசயத்தை மட்டும் அவர் சொல்லவில்லை.
நரேந்திர மோடியின் வேண்டுகோள் பெருத்த உற்சாகத்துடன் நிறைவேற்றப்பட்டதில் வியப்பில்லை. பாத்திரங்களைத் தட்டி ஒலி எழுப்பிய வண்ணம் ஊர்வலங்களும், கும்பல் நடனங்களும் ஊர்வலங்களும் நடந்தன. சமூக இடைவெளி என்பதெல்லாம் காற்றில் பறந்து விட்டது. அடுத்து வந்த நாட்களில் புனிதமான சாணம் நிரம்பிய தொட்டிகளில் பலர் குதித்தனர். பாஜக ஆதரவாளர்கள் பசு மூத்திரம் குடிக்கும் விழாக்களை நடத்தினர். உங்களுக்கு நாங்கள் சளைத்தவர்களில்லை என்று சொல்லும் விதமாக, பல முஸ்லிம் அமைப்புகள் இசுலாமிய மக்களை மசூதிகளில் திரளுமாறும், வைரஸை ஒழிக்க வல்லவன் அல்லா மட்டும்தான் என்றும் அறைகூவல் விடுத்தனர்.
***
மார்ச் 24 ஆம் தேதியன்று இரவு 8 மணிக்கு மோடி மீண்டும் தொலைக்காட்சியில் தோன்றினார். நள்ளிரவு 12 மணி முதல் இந்தியா முழுவதும் ஊரடங்கு என்று அறிவித்தார். சந்தைகள் மூடப்படும். பொதுப் போக்குவரத்து, தனியார் போக்குவரத்து ஆகிய எதுவும் அனுமதிக்கப்படாது என்றார்.
பிரதமர் என்ற முறையில் மட்டுமின்றி, ஒரு குடும்பத் தலைவனாகவே இந்த முடிவினை நான் எடுத்திருக்கிறேன் என்று அவர் கூறினார். சரிதான். 138 கோடி மக்கள் கொண்ட ஒரு தேசம் முழுவதும், எந்தவித முன் தயாரிப்பும் இல்லாமல், ஊரடங்கின் விளைவாக எழும் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய பொறுப்பில் இருக்கும் மாநில அரசுகளைக் கலந்தாலோசிக்காமல், வெறும் நான்கு மணி நேர அவகாசத்தில் ஊரடங்கை அமல்படுத்துவதென்று வேறு யாராவது இப்படி முடிவெடுக்க முடியுமா? இந்தியாவின் பிரதமர் தன்னுடைய குடிமக்களை நம்பத்தகாதவர்களாக, எதிர்பாராமல் தாக்கி வீழ்த்தப் படவேண்டிய பகை சக்திகளாகவே கருதுகிறார். இதுதான் மோடியின் வழிமுறைகளிலிருந்து அவரைப்பற்றி நாம் பெறுகின்ற சித்திரம்.
அனைவரும் ஊரடங்கின் கீழ் கொண்டுவரப் பட்டுவிட்டோம். சுகாதாரத்துறை வல்லுநர்களும் கொள்ளைநோய் மருத்துவர்களும் இந்த நடவடிக்கையைப் பாராட்டினர். ஒரு கோட்பாடு என்ற வகையில் அவர்களது கூற்று சரியானதுதான். ஆனால் உலகின் மிகப்பெரிய ஊரடங்கு நடவடிக்கையான இது, போதுமான திட்டமிடலோ, முன்தயாரிப்போ இல்லாத காரணத்தினால், மிகக் கொடிய தண்டனையாக மாறிவிட்டதை, ஊரடங்கின் நோக்கத்துக்கு நேர் எதிரான விளைவை அது உருவாக்கிவிட்டதை அவர்கள் யாரும் ஆதரிக்கவியலாது.
அதிசயங்களை நிகழ்த்துவதில் பெருங்காதல் கொண்ட மனிதரான மோடி, அதிசயங்கள் அனைத்துக்கும் தாய் போன்றதொரு நிகழ்வை உருவாக்கிக் காட்டி விட்டார்.
இந்த ஊரடங்கு ஒரு வேதியல் சோதனையைப் போல வேலை செய்தது. இதுகாறும் கண் மறைவாக இருந்த பல விசயங்களின் மீது அது ஒளியைப் பாய்ச்சியது. கடைகள், உணவு விடுதிகள், ஆலைகள், கட்டுமானத் தொழில்கள் ஆகிய அனைத்தும் இழுத்து மூடப்பட்ட பின், செல்வந்தர்களும் நடுத்தர வர்க்கத்தினரும் தத்தம் குடியிருப்புகளுக்குள் தம்மைப் பாதுகாத்துக் கொண்ட பின், நமது நகரங்களும் பெரு நகரங்களும் தமது உழைக்கும் வர்க்க குடிமக்களையும், புலம் பெயர்ந்து வந்த தொழிலாளர்களையும், தேவையின்றி சேர்ந்து விட்ட சுமையாகக் கருதி, அவர்களைப் பிதுக்கி வெளியேற்றத் தொடங்கின.
அவர்களில் பலர் தமது முதலாளிகளாலும், வீட்டு உரிமையாளர்களாலும் வெளியேற்றப்பட்டவர்கள். பசியாலும் தாகத்தாலும் வாடிய ஏழைகள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள், நோயாளிகள், பார்வையற்றவர்கள், மாற்றுத் திறனாளிகள், என லட்சக்கணக்கான மக்கள், போக்கிடம் ஏதும் இல்லாமல், பொதுப் போக்குவரத்தும் இல்லாமல், தத்தம் கிராமங்களை நோக்கி ஒரு நீண்ட பயணத்தைத் தொடங்கினார்கள். பல நூறு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஆக்ரா, பதுவான், ஆசம்கார், அலிகார், லக்னோ, கோரக்பூர் என்ற ஊர்களை நோக்கி நாள் கணக்கில் நடந்தார்கள். சிலர் போகும் வழியிலேயே இறந்தும் போனார்கள்.
வீட்டை நோக்கிச் சென்ற அனைவருக்கும் நாம் அரைப்பட்டினி நிலையை நோக்கித்தான் செல்கிறோம் என்று தெரியும். தாங்கள் வைரஸை சுமந்து செல்லக்கூடும் என்பதும், ஊரில் இருக்கும் தம் குடும்பத்தினரையும் பெற்றோரையும் பாட்டன் பாட்டிகளையும் தாங்கள் சுமந்து செல்லும் நோய் தொற்றிக் கொள்ளக்கூடும் என்பதும் அவர்களுக்குத் தெரியும். எனினும் தமக்குத் தெரிந்த மனிதர்கள் வாழும் இடத்துக்குப் போய்விட வேண்டுமென அவர்கள் தவித்தார்கள். பாசமோ அன்போ கிடைக்கவில்லை என்றாலும், குடியிருக்க ஒரு வீடும், கவுரவமும், சோறும் கிடைக்கின்ற இடத்துக்குப் போய்விடவேண்டுமென அவர்கள் தவித்தார்கள்.
ஊரடங்கை கறாராக அமல்படுத்துமாறு உத்தரவிடப்பட்டிருந்த போலீசாரால், கால்நடையாகச் சென்ற அந்த மக்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டார்கள், அவமானப் படுத்தப்பட்டார்கள். நெடுஞ்சாலையில் தவழ்ந்து செல்லுமாறும், தவளை போல தத்திச் செல்லுமாறும் இளைஞர்களை போலீசார் துன்புறுத்தினர். பரேலி நகருக்கு வெளியே மக்களை ஒரு இடத்தில் கூட்டி வைத்து அவர்கள் மீது இரசாயனம் கலந்த தண்ணீரைப் பீய்ச்சியடித்தனர்.
நகரத்திலிருந்து வெளியேறும் மக்கள் இந்த வைரசை கிராமத்துக்குப் பரப்பி விடுவார்களோ என்ற ஐயம் சில நாட்களுக்குப் பின் அரசுக்கு வந்துவிட்டது. உடனே மாநில எல்லைகளை மூடினார்கள். நடந்து செல்பவர்களைக் கூட அனுமதிக்கவில்லை. நகரங்களிலிருந்து கிளம்பி நாள் கணக்கில் நடந்து வந்த மக்கள், எந்த நகரத்தை விட்டு வெளியேறுமாறு நிர்ப்பந்திக்கப் பட்டார்களோ அதே நகரத்திற்கு – அங்கு அமைக்கப்பட்ட முகாம்களுக்கு – திரும்பிச் செல்லுமாறு விரட்டப்பட்டார்கள்.
1947 இல் இந்தியா பிரிக்கப்பட்டு பாகிஸ்தான் உருவானபோது, பெருந்திரளான மக்கள் புலம் பெயர்ந்த நினைவுகளை இது முதியவர்களிடையே கிளர்த்திவிட்டது. அன்றைய புலம்பெயர்தலுக்கு மதப் பிளவு அடிப்படையாக அமைந்திருந்தது. வர்க்கப் பிரிவினை இந்தப் புலம்பெயர்தலைத் தீர்மானித்தது. இவ்வாறு புலம் பெயர்ந்தவர்களை இந்தியாவின் கடைக்கோடி ஏழை மக்கள் எனக் கூற முடியாது. இவர்களுக்கு இதுநாள் வரை நகரத்தில் ஒரு வேலை இருந்தது. திரும்பிச் செல்வதற்கு கிராமத்தில் ஒரு வீடும் இருந்தது. ஆனால் வேலை கிடைக்காதவர்களும், வீடற்றவர்களும், கதியற்றவர்களும் – கிராமம் ஆயினும் சரி, நகரமாயினும் சரி – எங்கே இருந்தார்களோ அந்த இடத்தை விட்டு அகலவில்லை. இந்த அவலம் நிகழ்வதற்கு நெடுநாட்களுக்கு முன்னரே, அவர்கள் மீளாத துயரில் மூழ்கிக் கொண்டிருந்தார்கள். இந்தக் கொடிய நாட்களின் போது, உள்துறை அமைச்சர் அமித் ஷா பொதுமக்கள் பார்வையிலேயே தென்படவில்லை.
டில்லியிலிருந்து இந்த நடைபயணம் தொடங்கிய நாட்களில், நான் அடிக்கடி எழுதுகின்ற ஒரு பத்திரிகையின் அனுமதிச் சீட்டைப் பயன்படுத்திக் கொண்டு, டில்லி – உ.பி எல்லையில் இருக்கும் காசிபூருக்கு வாகனத்தில் சென்றேன்.
நான் கண்ட காட்சி விவிலியத்தின் சித்தரிப்பை நினைவூட்டியது. அப்படிக்கூட சொல்ல முடியாது. இத்தனை பெரிய மக்கள் கூட்டத்தை விவிலியம் நினைத்துப் பார்த்திருக்கவே முடியாது. உடல் ரீதியான விலகியிருத்தலை உத்திரவாதப் படுத்துவதற்காக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு, அதற்கு நேரெதிரான விளைவைத் தோற்றுவித்திருந்தது. எண்ணிப் பார்க்கவும் முடியாத அளவுக்கான ஜன நெரிசலை அது தோற்றுவித்திருந்தது. புலம் பெயர்ந்தோரின் கூட்டத்தில் மட்டுமல்ல, இந்தியாவின் நகரங்கள் பெருநகரங்கள் அனைத்திற்குள்ளும் நிலவும் உண்மை இதுதான். நகரங்களின் முக்கியச் சாலைகள் வெறிச்சோடி இருக்கலாம். ஆனால் சேரிகளின் எட்டடிக் குச்சுகளுக்குள் ஏழைகள் நெருக்கியடித்துக் கொண்டு வாழ்கிறார்கள் என்பதே உண்மை.
நடந்து சென்ற மக்களிடம் நான் பேசினேன். என்னுடன் பேசிய அத்தனை பேரும் கொரோனா வைரஸ் குறித்து கவலை தெரிவித்தார்கள். ஆனால் அச்சுறுத்தும் வேலையின்மை, பட்டினி, போலிசின் வன்முறை ஆகியவைதான் அவர்களது வாழ்வின் எதார்த்தமாக இருந்தன. இவற்றுடன் ஒப்பிடும்போது கொரோனா வைரசுக்கு அவர்கள் வாழ்வில் இடமில்லை, வைரஸ் என்பது அவர்களது வாழ்க்கையில் அந்த அளவுக்கு உண்மையான அச்சுறுத்தலாகவும் இல்லை.
சில வாரங்களுக்கு முன்பு நடந்த முஸ்லிம் எதிர்ப்புத் தாக்குதலில் தப்பிப் பிழைத்த முஸ்லிம் தையற்கலைஞர்கள் சிலர் உள்ளிட்ட பலருடன் நான் பேசினேன். அவர்களில் ஒரு மனிதரின் சொற்கள்தான் என்னைப் பெரிதும் துன்புறுத்தின. அவர் ஒரு தச்சர். பெயர் ராம்ஜித். நேபாள எல்லையில் இருக்கும் கோரக்பூருக்கு டில்லியிலிருந்து நடந்தே செல்வது என்ற திட்டத்துடன் கிளம்பியிருந்தார்.
“மோடிஜி இதனைச் செய்வது என்று முடிவு செய்வதற்கு முன், எங்களைப் பற்றி யாரும் அவருக்கு எடுத்துச் சொல்லியிருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். ஒருவேளை எங்களைப் பற்றி அவருக்குத் தெரியாமலும் இருக்கலாம்” என்றார் ராம்ஜித்
“எங்களை” என்று அவர் குறிப்பிட்டாரே, அவர்களின் எண்ணிக்கை சுமார் 46 கோடிப் பேர்.
***
இந்த நெருக்கடியான காலத்தில் இந்தியாவின் மைய அரசைக் காட்டிலும் (அமெரிக்காவைப் போலவே) மாநில அரசுகள்தான் புரிதலையும் அக்கறையையும் காட்டியிருக்கின்றன. தொழிற்சங்கங்களும், தனிப்பட்ட குடிமக்களும் பிற அமைப்புகளும் மக்களுக்கு உணவையும் அத்தியாவசிய பொருட்களையும் விநியோகிக்கின்றன. மாநில அரசுகள் பணம் வேண்டும் என்று கதறிய போதிலும், மைய அரசின் எதிர்வினை மெத்தனமாகவே இருந்து வருகிறது. பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் பணம் இல்லையெனத் தெரிகிறது. இதற்குப் பதிலாக “பிரதமரின் கருணை” என்று பெயரிடப்பட்ட மர்மமான கணக்கில் பணம் வந்து குவிகிறது. மோடியின் முகம் அச்சிடப்பட்ட தயார் நிலை உணவுப் பொட்டலங்கள் ஆங்காங்கே தலை காட்டுகின்றன.
இவை தவிர, தன்னுடைய யோக நித்திரையைக் காட்டும் வீடியோக்களையும் மோடி சமூக ஊடகங்களில் பகிர்ந்திருக்கிறார். அனிமேசன் முறையில் தயாரிக்கப்பட்ட அந்த வீடியோக்களில் கச்சிதமான உடற்கட்டு கொண்ட மோடி பல யோகாசனங்களைச் செய்து காட்டி தனிமை தோற்றுவிக்கும் மன அழுத்தத்திலிருந்து மக்களை விடுவிக்க உதவுகிறார்.
இந்த சுயமோகத்தை சகிக்க முடியவில்லை. வேண்டுகோள் ஆசனம் என்றொரு ஆசனத்தை மோடி செய்தால் நன்றாக இருக்கும். அந்த ஆசனத்தின் மூலம் பிரெஞ்சு பிரதமரிடம் மோடி ஒரு வேண்டுகோள் வைக்கலாம். பிரச்சனைக்குரிய ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு, அதில் கிடைக்கும் 60,000 கோடி ரூபாயை பட்டினியில் வாடும் கோடிக்கணக்கான இந்திய மக்களின் தேவையை நிறைவேற்றுவதற்கு பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்குமாறு அவரிடம் கோரலாம். பிரெஞ்சுக்காரர்கள் நிச்சயம் புரிந்து கொள்வார்கள்.
இதோ, ஊரடங்கின் இரண்டாவது வாரம் தொடங்குகிறது. நாடெங்கும் பொருள் விநியோக நடவடிக்கைகளின் சங்கிலி அறுந்து விட்டது. மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்ளின் விநியோகத்தில் தட்டுப்பாடு தொடங்கிவிட்டது. சோறும் தண்ணீரும் இல்லாமல் ஆயிரக்கணக்கான லாரி ஓட்டுநர்கள் நெடுஞ்சாலைகளில் தன்னந்தனியே தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அறுவடைக்குத் தயாராக நிற்கும் பயிர்கள் அழுகிக் கொண்டிருக்கின்றன.
பொருளாதார நெருக்கடி கண் முன்னே அச்சுறுத்துகிறது. அரசியல் நெருக்கடியோ ஏற்கனவே தொடர்ந்து கொண்டிருக்கிறது. மைய நீரோட்ட ஊடகங்கள் 24 மணி நேரமும் தாங்கள் மேற்கொண்டு வரும் முஸ்லிம் எதிர்ப்பு பிரச்சாரத்திற்குள் கொரோனா கதையை செருகி விட்டனர். ஊரடங்கு அறிவிக்கப்படுவதற்கு முன்னால் டெல்லியில் ஒரு கூட்டத்தை நடத்திய தப்லிக் ஜமாத் என்ற அமைப்பு முதன்மையான “நோய் பரப்பி” ஆகிவிட்டது. முஸ்லிம்களை கொடியவர்களாக சித்தரிப்பதற்கும் பழிதூற்றுவதற்கும் இது பயன்படுத்தப் படுகிறது.
இப்படி ஒரு வைரசை கண்டுபிடித்து அதனை வேண்டுமென்றே சமூகம் முழுவதும் பரப்புவதை ஜிகாத்தின் இன்னொரு வடிவமாக இசுலாமியர்கள் செய்து வருகிறார்கள் என்ற கருத்தை உருவாக்கும் விதத்தில் இந்த பிரச்சாரத்தின் தொனி வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை கொரோனா நோய்த்தொற்று ஒரு மாபெரும் நெருக்கடியாக உருவெடுப்பதென்பது இனிமேல்தான் நடக்க வேண்டும். ஒருவேளை அவ்வாறு நடக்காமலும் போகலாம். நமக்குத் தெரியாது. ஒருவேளை அப்படியொரு நெருக்கடி வரும் பட்சத்தில், சாதி – மத – வர்க்க ரீதியான காழ்ப்புகள் என்னவெல்லாம் சமூகத்தில் தற்போது நிலவுகின்றவோ, அவற்றின் அடிப்படையில்தான் இந்த நெருக்கடியும் அணுகப்படும் என்று நாம் உறுதியாகக் கூறலாம்.
இன்றைய (ஏப்ரல் 2) கணக்குப்படி நோய்த்தொற்றுக்கு ஆளானவர்கள் 2000 பேர். இறந்தவர்கள் 58 பேர். மிகவும் குறைவான அளவில் செய்யப்பட்ட சோதனைகளின் அடிப்படையில்தான் இந்த புள்ளிவிவரங்கள் தரப்படுகின்றன ஆகையால், இவை நம்பத்தக்கவை அல்ல. வல்லுநர்களின் கருத்துகளும் பெரிதும் வேறுபடுகின்றன. சிலர் லட்சக்கணக்கில் பாதிப்பு வரும் என்கிறார்கள். பாதிப்பு குறைவாகத்தான் இருக்கும் என்று சிலர் கருதுகிறார்கள். நெருக்கடியை நாம் சந்திக்க நேர்ந்தாலும், அப்போதும் கூட அதன் பரிமாணமும் வீச்சும் என்ன என்பது ஒருபோதும் நமக்குத் தெரியப்போவதில்லை. நமக்குத் தெரிவதெல்லாம் ஒன்று மட்டும்தான். மருத்துவமனைகளை நோக்கி மக்கள் கும்பல் கும்பலாக ஓடும் நிலை இன்னும் தொடங்கவில்லை.
இந்தியாவின் பொதுமருத்துவமனைகள் மற்றும் தனியார் சிகிச்சையகங்களின் நிலை என்ன? வயிற்றுப்போக்கு, ஊட்டச் சத்துக் குறைவு மற்றும் பிற உடல்நலக் குறைவுகளினால் ஆண்டுக்கு பத்து லட்சம் குழந்தைகள் இறப்பதை இவற்றால் தடுக்க முடியவில்லை. லட்சக்கணக்கான காச நோயாளிகளை (உலகின் கால்பங்கு) குணப்படுத்த முடியவில்லை. சாதாரண நோய்களே உயிரைப் பறித்துவிடும் என்ற அளவுக்கு ரத்த சோகையினாலும் ஊட்டச்சத்துக் குறைவினாலும் பெரும்பான்மை மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவற்றையெல்லாம் சமாளிக்க முடியாத இந்திய மருத்துவத்துறையால் இன்று ஐரோப்பாவும் அமெரிக்காவும் எதிர்கொண்டு வரும் நெருக்கடியைப் போன்றதொரு நெருக்கடியை சமாளிக்க முடியுமா?
கொரோனாவுக்கு சேவை செய்யும் பொருட்டு மற்றெல்லா நோய்களுக்குமான மருத்துவ சேவைகளை எல்லா மருத்துவ மனைகளும் கிட்டத்தட்ட நிறுத்திவிட்டன. டெல்லியிலுள்ள புகழ்பெற்ற எய்ம்ஸ் மருத்துவமனையின் விபத்து சிகிச்சைப் பிரிவே மூடப்பட்டுவிட்டது. புற்று நோய் அகதிகள் என்று அழைக்கப்படும் நூற்றுக்கணக்கான கான்சர் நோயாளிகள் அந்த பிரம்மாண்டமான மருத்துவமனையின் வாசலில் நெடுநாட்களாய்க் குடியிருந்து வருகிறார்கள். இன்று அவர்களெல்லாம் ஆடுமாடுகளைப் போல அடித்து விரட்டப்படுகிறார்கள்.
நோய்வாய்ப்படும் மக்கள் பலர் வீட்டிலேயே இறக்கக் கூடும். அவர்களின் கதை நமக்கு ஒருபோதும் தெரியப் போவதில்லை. அவர்களால் புள்ளி விவரங்களிலும் இடம்பிடிக்க முடியாது. குளிர்ந்த வானிலைதான் கொரோனாவுக்குப் பிடிக்கும் என்று கூறும் ஆய்வுகளின் மீது நம்பிக்கை வைப்பதைத் தவிர (மற்ற பல ஆய்வுகள் இதனை மறுத்த போதிலும்) நமக்கு வேறு வழியில்லை. கோடைகாலத்தில் வெயில் தீயாய் தகித்தால் நன்றாக இருக்குமே, என்று அறிவுக்குப் புறம்பான முறையில் இந்திய மக்கள் முன்னெப்போதும் ஏங்கியிருக்க மாட்டார்கள்.
என்ன இது? நமக்கு என்னதான் நடந்து கொண்டிருக்கிறது? இது ஒரு நச்சுக்கிருமி. ஆம். அந்தக் கிருமிக்கு அறம் ஏதும் கிடையாது. ஆனால் இது வெறும் நச்சுக்கிருமி அல்ல. நிச்சயம் அதற்கு மேலே ஏதோ ஒன்று. இது மனிதர்களுக்கு கடவுள் கற்பிக்கும் பாடம் என்று சிலர் நம்புகிறார்கள். தனது ஆதிக்கத்தின் கீழ் உலகத்தைக் கொண்டு வருவதற்கு சீனா செய்கின்ற சதி என்று சிலர் கூறுகிறார்கள்.
எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். கொரோனா வைரஸ் எல்லாம் வல்லவர்கள் எனப்படுவோரை மண்டியிட வைத்திருக்கிறது. வேறு எதனாலும் சாதிக்க முடியாத வகையில் உலகத்தின் அசைவை நிறுத்திக் காட்டியிருக்கிறது. நமது சிந்தனை பின்னும் முன்னும் அலைபாய்கிறது. இயல்பு நிலை திரும்பாதா என்று ஏங்குகிறது. நம்முடைய எதிர்காலத்தை நம்முடைய கடந்த காலத்துடன் எப்படியாவது இழுத்துப் பிடித்துத் தைத்து விட முடியாதா என்று நம் சிந்தனை முயற்சிக்கிறது. இழைகள் அறுபட்டுக் கிழிந்து தொங்குகின்ற எதார்த்தநிலையை நம் சிந்தனை அங்கீகரிக்க மறுக்கின்றது. அங்கீகரிக்க மறுத்தாலும், முறிவு இருக்கத்தான் செய்கிறது. நம்பிக்கைகள் தகர்ந்து வீழ்ந்து கொண்டிருக்கும் இந்தச் சூழலில், நமது இறுதித் தீர்ப்பினை எழுதுவதற்கு நம் கைகளால் நாமே உருவாக்கிக் கொண்டிருக்கும் எந்திரம் குறித்து மீளாய்வு செய்து பார்ப்பதற்கு இந்த முறிவு நமக்கு ஒரு வாய்ப்பினை வழங்கியிருக்கிறது. இயல்புநிலை என்று சொல்கிறோமே, அந்த இயல்புநிலை அப்படியே திரும்புவதுதான் மிகமிக ஆபத்தானது.
பெருந்தொற்று நோய்கள் கடந்த காலத்திலிருந்து முறித்துக் கொண்டு, தங்களது உலகை புதிய முறையில் கற்பனை செய்து பார்க்க மனித குலத்தை நிர்ப்பந்தித்திருக்கின்றன. இது வரலாறு. இன்று நாம் எதிர்கொள்ளும் சூழலும் அப்படிப்பட்டதே. இதோ இது ஒரு திறப்பு. ஒரு உலகத்திலிருந்து இன்னொன்றுக்கு மாறிச் செல்வதற்கான நுழைவாயில்.
நாம் இதற்குள் நுழைந்து கடந்து செல்லலாம். அவ்வாறு போகும்போது, நமது தப்பெண்ணங்கள், வெறுப்புகள், பேராசைகள், நமது தரவுக் கிடங்குகள் – மக்கிப்போன கருத்துகள், நமது செத்துப்போன ஆறுகள் – புகை மண்டிய வானங்கள் அனைத்தையும் நம்முடனே இழுத்துச் செல்லலாம்.
அல்லது அவற்றையெல்லாம் துறந்து விட்டு, கடந்த காலத்தின் சுமைகள் ஏதுமின்றி, புதியதோர் உலகினைக் கற்பனை செய்த வண்ணம், மிதந்தும் செல்லலாம். புதிய உலகிற்காகப் போராடுவதற்கும் ஆயத்தமாகலாம்.
நன்றி: வினவு
நன்றி: அருந்ததி ராய், பைனான்சியல் டைம்ஸ்.
தமிழாக்கம்: முத்து
பைனான்சியல் டைம்ஸ், ஏப்ரல் 3, 2020 நாளேட்டிலிருந்து…