நிவாரணம் எனும் புகழாரம்
வறுமை என்றும்-ஓர்
புறக்கணிப்பு நோய்
ஏழையின் புன்னகையை
பாதாளக் குழியில் புதைத்துவிட்டது.
அதை மீட்க
முன் வராக் கரங்கள்
பதில் அணுவாயுதமாய்
படையெடுத்த கொரோனாவிற்கு
எங்கிருந்து நீள்கிறது
பாசாங்குக் கரங்கள்
சுரண்டல்களை திருப்பிக்கொடுக்கும்
கொள்ளையனுக்கு
புகைப்படங்களில் புகழாரம்
தேடுகிறது இயந்திரக் கமராக்கள்
மனிதாபிமான நெஞ்சங்கள்
பத்திரிக்கைச் செய்திக்காய் பரிசளிக்கமாட்டார்கள்
என்றிருக்கையிலே
யார் இந்த ஈசல்கள்
ஏன் இந்த குள்ளநரி கொடுப்பனவுகள்
பாமரன் என்ற அடையாளமே
கேள்விக்குட்படாத குற்றம்தான்
அவர்களின் பசிதானோ கிடைத்தது
உம் பதவிக் கதிரைக்கான பாதையாக….
உயிர் இருக்கும் போது பதுக்கிவிட்டீர்
பூக்காத மலர்களாய் எம்மை ஒதுக்கிவிட்டீர்
இறக்கும் சடலங்களாய்
நாங்கள் தவிக்கும் போது
யாருக்கு வேண்டும் புகழார புதையல்கள்
உமக்கு புகைப்படம்தான்
வேண்டுமென்றால்
எம் மரணப்புகைப்படங்களை
இலவசமாக கொண்டு செல்லுங்கள்
ஏழையின் பசியைவிட
கொடியதல்ல
கொரோனா கொண்டுவரும்
பதினாங்கு நாடகள் எனும்
காலக் கெடு
என்றுதான் மறையுமோ
எங்கள் ஏழ்மை வடு
த.நிறோஜன்.
கிழக்குப் பல்கழைக்கழகம்,
இலங்கை