பட்டிப் பாரம்பரியம்
எத்தனை நாட்கள் தொடரும் பட்டிப் பொங்கல்
மேய்ச்சல் நிலமெல்லாம் போலிக் கட்டிடங்கள்….
மாடுகளை பாரினில் போற்றிடுங்கள்
தடுக்க வரும் மாசுகளை தூற்றிடுங்கள்.
அசைகின்ற தெய்வங்கள் நம் பசுக்கள்-ஏன்
இன்னும் அசையாத கோயில் கொண்ட வீதி தெருக்கள்.
மாடு போல உழைக்க நாம் கற்றுக்கொண்டோம்.
அந்த மாடுகளையே இன்று மறந்து கொன்றோம்.
இறைச்சியாய் தின்ன ஒரு பகுதி துடிக்கிறது!
மேய்ச்சல் நிலமின்றி ஒரு பகுதி தவிக்கிறது.
முடங்கிக் கிடக்கின்றான் பட்டிக்காரன்.
முன்னேறுகின்றான் அவன் உழைப்பைத் தின்ற பால் பெட்டிக்காரன்
பிடிவாத காலனியமும் பித்தலாட்ட நவ காலனித்துவமும்
எதைத்தான் விட்டு வைத்தது எம் பசுவோடு சேர்த்து
ஜேர்சி, பிறிசியன் எனக் கொண்டுவந்து
ஊதிவிட்டான் எம்மவரின் உலைக்குச் சங்கு….
பச்சை பால் என்றாலே முகம் சுழிக்கின்றோம்.
கழிவாக வரும் பெட்டி மா விற்றமின் என்கின்றோம்.
இருளாக தொடர்கின்றது வெளிநாட்டு மோகம்.
என்று தான் தீரும் நம் உள்நாட்டின் தாகம்
அன்றைய உழவனுக்குத் தெரியும் பசுவின் உழைப்பு
இன்றைய புலவனுக்குத் தெரியாதோ? -இயந்திரத்தின் விளைவு
விரைவு என்ற பெயரில் நாம் வழிகொடுத்தோம்.
தம் ஆயுளின் தொடர்ச்சிக்கான வழியடைத்தோம்.
பசுவின் கழிவைக்கூட கழிப்பதில்லை நாம்.
சானம் மெழுகிய குடிசைத் தூக்கம் மறந்தோம்.
இயற்கை உரம் தந்த பசுவை
அசேதனத்தால் அழித்துவிட்டோம்
நச்சு அசேதனம் தலைதூக்க
இயற்கை உரம் தேடி ஓடுகிறோம்.
மாட்டுக் காரன் வாரான் என்று
பேனைக் காரர்கள் எள்ளி நகைப்பதுண்டு….
கற்றதைப் புகட்டும் நீர் மேதையெனில்
சுயமாக கற்றுக் கொள்ளும் அவனும் மேதைத்தான்….
கொள்ளை நோய்கள் பசுவைக் கொன்று வயிற்றில் அடித்தது.
நோயின் பின்னால் உள்ள சதியை அதிகாரமும் மூடி மறைத்தது.
மாட்டோடும், காட்டோடும் போராடும் பட்டிக்காரன் நிலையை
ஏசியறையில் சுக தூக்கம் காணும் அரசாங்கம் அறியாதோ?
இதற்கு முடிவும் தான் கிடைக்காதோ?
இரத்தமதை பாலாய்க் கொடுத்து
நீர் வீழ்கின்ற போது பணமாய் தோள்கொடுத்து
இறந்தபின் இசைக்காய் தோல் கொடுத்து
மடிந்தும் முழங்கும் எம் பசு
இதை அறியாமல் போய்விடுமோ நம் தலைமுறை சிசு?
மாசுபட்ட இது-இயந்திர உலகம்
நாளை நாம் செய்வோம் புது பல்கலைக்கழகம்
சுயம் என்ற அறிவொளியால் துணிந்து செல்வோம்.
மீண்டும் மாசற்ற நம் அடையாளம் வெல்வோம்.
த.நிறோஜன்.
கிழக்குப் பல்கலைக்கழகம்,
இலங்கை.