கொரோனா நுண்கிருமி உலகெலாம் அவிழ்த்துவிட்ட தொற்றுநோய் மனித வாழ்க்கையையே தலைகீழாகப் புரட்டிவிட்டுள்ளது. மனிதன் ஒரு சமூகப் பிராணி. சமூகத்தைப்பிரிந்து அவனால் வாழமுடியாது. உலகத்தைத் துறந்த முனிவர்கள்கூட அவர்களின் அடிப்படைத் தேவைகளுக்காகச் சில சமயங்களில் சமூகத்தை நாடத்தான் வேண்டியுள்ளது. ஆனால் இன்று கொரோனாவுக்குப் பயந்து ஒவ்வொரு அரசாங்கமும் தத்தம் மக்களை வீட்டிலேயெ முடியுமான அளவுக்கு முடங்கிக் கிடக்குமாறு வேண்;டுகிறது. அதனைச் செயற்படுத்துவதற்காக இலங்கைபோன்ற நாடுகள் ஊரடங்குச் சட்டத்தையே அமுலாக்கியுள்ளன. இந்த நிலையில், ஒவ்வாரு நாடும் ஒவ்வொரு சமூகமும் கொரோனா பரப்பிவிட்ட பேராபத்தை திடகாத்திரத்துடனும் திட்டவட்டமான செயற்பாடுகளுடனும் அதேசமயம் மக்களுக்குக் கூடுதலான இடைஞ்சல்களில்லாமலும் எதிர்கொண்டு எவ்வளவு விரைவில் அதிலிருந்து விடுதலையாகும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
கொரோனா ஏற்படுத்திவிட்ட நோய்நொடியும், மனோபயமும், மரணபயமும் அதனாலேற்பட்ட சுகாதார நெருக்கடியும் ஒரு புறமிருக்க, உலகத்தின் பொருளாதார வளர்ச்சியை எவ்வாறு ஒரு சில வாரங்களுக்குள்ளேயே ஆட்டங்காணச்செய்து, உற்பத்திக் குறைவு, தொழிலின்மை, முதலீட்டு முடக்கம், வறுமை ஆகிய அவலட்சணங்களை வெளிப்படுத்தும் மந்தநிலையை (recession) உருவாக்கி, ஈற்றில் உலகளாவிய ரீதியில் பாரிய பொருளாதார வீழ்ச்சியையும் தோற்றுவிக்கும் இன்னுமொரு நெருக்கடியையும் கொரோனா கொண்டுவந்துள்ளது. இந்த இரண்டாவது நெருக்கடிக்குக் கொரோனாவை மட்டும் தனியே குறைகூற முடியாது. அக்கிருமி வெளிப்படும்போது இருந்த பொருளாதார அமைப்பையும் சேர்த்தே குறைகூற வேண்டும். அந்த அமைப்பை ஆராயும்போதுதான் கொரோனா கற்பிக்கும் பொருளாதாரப் பாடங்களை நாம் அறிந்துகொள்ளலாம்.
அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழக மருத்து வரலாற்றுத்துறைப் பேராசிரியர் பிராங்க் சுநோடன், அண்மையில் வெளியிட்டுள்ள ‘கொள்ளை நோய்களும் சமூகமும்: கறுப்பு மரணத்திலிருந்து இன்றுவரை’ (Epidemics and Society: From Black Death to the Present) என்ற நூலில் ஒரு முக்கியமான உண்மையை மிகச் சுருக்கமாகக் கூறியுள்ளார். அதனை ஏற்கனவே, ‘கொரோனாவும் இலங்கைச் சமூகமும்’இ என்ற எனது கட்டுரையில் சுட்டிக்காட்டினேன். அதை இங்கே மீண்டும் ஞாபகமூட்டுவது பொருத்தமென நினைக்கிறேன். அதாவது, ‘கொள்ளை நோய்கள் தொடர்பின்றிப் பிறந்து சமூகத்தைச் சடுதியாகத் தாக்குவனவல்ல. மாறாக, ஒவ்வொரு சமூகமும் தனக்கெனப் பிரத்தியேகமான பலஹீனங்களை உருவாக்கிக் கொள்கின்றன. அவற்றை ஆராய்ந்தால் அச்சமூகத்தின் அமைப்பு, அதன் வாழ்க்கைத்தரம், அதன் அரசியல் முந்துரிமைகள் போன்றவற்றை விளங்கிக் கொள்ளலாம்.’ அதாவது, இப்பலஹீனங்களுக்கும் கொள்ளைநோயின் ஊடுருவல், அதன் பரவல், அதன் தாக்கத்தின் ஆழ அகலம் ஆதியனவற்றுக்கும் நெருங்கிய தொடர்புண்டு என சுநோடன் வலியுறுத்துகிறார். இதிலே அவர் குறிப்பிடும் வாழ்க்கைத்தரம் பொருளாதார அமைப்புடன் பின்னிப்பிணைந்ததொன்று. ஆகையால், எவ்வாறான ஒரு பொருளாதாரச் சூழலில் கொரோனா தன் கொடூரங்களைக் கட்டவிழ்த்துள்ளது என்பதை முதலில் அறியவேண்டும். அதனை அறிவதற்கு 1980களிலிருந்து ஏற்படத்தொடங்கிய பொருளாதாரச் சிந்தனையையும் பொருளாதார மாற்றங்களையும் சுருக்கமாக விளங்குதல் அவசியம்.
இரண்டாவது உலகப்போர் தோற்றுவித்த பொருளாதாரச் சீரழிவிலிருந்து விடுபடுவதற்காக கீன்சிய பொருளாதாரக் கொள்கை ஜோன் மெய்னாட் கீன்ஸ் என்ற பிரித்தானிய பொருளியலாளனின் சிந்தனையிலிருந்து உதயமானது. இந்தக் கொள்கையின் தாரக மந்திரம் என்னவெனில் ஒரு நாட்டின் பொருளாதார வளாச்சியை தனியே சந்தைச் சக்திகளுக்கும் தனியார் துறைக்கும் அரசாங்கம் ஒப்படைத்துவிட்டு நீதியையும் பாதுகாப்பையும் நிலைநாட்டுவதை மட்டும் அரசாங்கம் பொறுப்பேற்றிருந்தால் 1930களில் ஏற்பட்ட உலகளவிலான பொருளாதார வீழ்ச்சியைத் தடுக்கமுடியாது. மாறாக, அரசாங்கம் பொருளாதாரத் துறையில் நேரடியாக ஈடுபாடுகொண்டு நாட்டின் பொருளாதார வளாச்சியையும் நாட்டு மக்களின் நலனையும் மேம்படுத்த வேண்டும் என்பதே. அதற்கேற்றவாறு அரசாங்கத்தின் வரவுசெலவுகளும், வரிக்கொள்கையும் இதர நடவடிக்கைகளும் அமைய வேண்டுமெனவும் கீன்ஸ் வலியுறுத்தினார். இக்கொள்கையின் நுணுக்கங்களை கட்டுரையின் விரிவஞ்சி இங்கே விளக்காது விடுவோம்.
இந்தத் தத்துவத்தின் அடிப்படையிலேயே 1950களிலிருந்து 1970கள் வரை பொதுவுடமை நாடுகளைத்தவிர்ந்த ஏனைய நாடுகள் தமது பொருளாதாரங்களை வளர்க்கலாயின. கீன்ஸியத் தத்துவமே முதலாளித்துவப் பொருளாதாரங்களின் அத்திவாரமாக விளங்கிற்று. அந்த அடிப்படையில் பொதுவாக எல்லா நாடுகளுமே கணிசமான வெற்றியை ஈட்டின என்றும் கூறலாம். அனைத்து முதலாளித்துவப் பொருளாதாரங்களும் கைத்தொழில் துறையையே பிரதானமாகக் கொண்டு வளர முற்படடன. எனினும் நாடுகளுக்கிடையேயும் ஒவ்வொரு நாட்டுக்குள்ளேயும் பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் நீங்கவில்லை என்பது உண்மை. எனவேதான் வரிக் கொள்கையைக் கொண்டு உண்ணாட்டு ஏற்றத்தாழ்வையும், வெளிநாட்டு உதவிகொண்டு நாடுகளுக்கிடையேயுள்ள ஏற்றத்தாழ்வையும் தீர்க்கவேண்டுமென கீன்ஸியத் தத்துவம் வலியுறுத்திற்று. அந்த உதவியை வழங்கவே உலக வங்கி, சர்வதேச நாணய நிதி ஆகிய தாபனங்கள் நிறுவப்பட்;டன. இவ்வாறு கீன்ஸியத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு வளர்ந்ததனால் 1970கள் ஆரம்பமானபோது வட அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, ஜப்பான் அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் நிறைதொழில் மட்டத்தை எட்டிய நாடுகளாக மிளிர்ந்தன. ஆனால் 1970களில் ஏற்பட்ட சில நிகழ்வுகள் கீன்ஸியப் பொருளியற் சிந்தனைக்கு ஒரு சவாலாக அமைந்து அதன் வசீகரத்தையும் இழக்கச் செய்தன.
அந்த நிகழ்வுகளுள் மிகமுக்கியமானது எண்ணெய் விலையேற்றம். எண்ணெய்வள நாடுகள் அந்நிய நாடுகளின் எண்ணெய் நிறுவனங்களால் சுரண்டப்பட்டுவந்ததை உணர்ந்து, தமது வளங்களைத் தாமே நிர்வகிக்க வேண்டுமெனத் தீர்மானித்து, பெற்றோலிய ஏற்றுமதி நாடுகள் ஸ்தாபனம் என்ற ஒன்றை நிறுவி அதன்மூலம் எண்ணெய்யின் விலையை பலமடங்;குகளால் உயர்த்தின. இது கைத்தொழிலையே பிரதானமாகக்கொண்டு வளர்ச்சிபெற்ற நாடுகளுக்கு விழுந்த ஒரு பேரிடி. இயந்திரமயமாகிய நவீன பொருளாதாரங்களின் உயிர்நாடியே எண்ணெய்யும் அதனைச்சார்ந்த பொருள்களும்தானே. ஆதலால் இவ்விலையேற்றம் கைத்தொழிற் பொருளாதார உற்பத்தி நிறுவனங்களின் செலவை அதிகரிக்கச் செய்தது. இதனால், ஏற்கனவே நிறைதொழில் மட்டத்தில் இயங்கிய பொருளாதாரங்களுக்கு ஒருபுதிய பிரச்சினை உருவாகியது. அதாவது, உற்பத்தியாளர்களின் செலவு உயர்ந்தால் அவர்களின் இலாபம் குறையும், உற்பத்தி சுருங்கும், தொழிலாளர்களும்; வேலை இழப்பர். வேலையற்றோர் படை பெருகும். முதலாளித்துவப் பொருளாதாரத்தைப்பற்றி ஏற்கனவே கார்ள் மாக்ஸ் கூறிய தீர்க்தரிசனம் இது. இதைத் தடுக்கவேண்டுமெனின் விற்பனைக்குறைவைத் தடுக்கவேண்டும். எப்படி?
கீன்ஸியக் கொள்கையின்படி அரசாங்கம் வரிகளைக்குறைத்து, மானியங்களைக் கூட்டி, அரசாங்கத்தின் செலவுகளையும் அதிகரித்து ஏற்கனவே கொள்வனவு செய்த அளவைத் தொடர்ந்தும் கொள்வனவு செய்யத் தூண்ட வேண்டும். உற்பத்தியும் கொள்வனவும் ஏற்கனவே நிறைதொழில் மட்டத்தில் இயங்கின என்பதை மறத்தலாகாது. எனவே கீன்ஸிய நடவடிக்கை விலையை உயர்த்துமேயன்றி உற்பத்தியைப் பெருக்காது. இதன் ஒட்டுமொத்த விளைவு பணவீக்கம். இவ்வாறு, எண்ணெய் விலையேற்றம் பணவீக்கத்தையும் தொழிலின்iமையையும் ஒரே சமயத்தில் தோற்றுவித்து வீக்கமந்தம் (ளவயபகடயவழைn) என்ற ஒரு புதுப் பிணியை முதலாளித்துப் பொருளாதாரங்களில் உருவாக்கிவிட்டது. இதிலிருந்து விடுதலையடைய வழியுண்டா?
இங்கேதான் 1970களுக்குப் பின்னர் ஏற்பட்ட இரண்டாவது முக்கிய நிகழ்வை அறிமுகப்படுத்த வேண்டும். அதுதான் நவீன தொழில்நுட்பப் புரட்சி. இன்று நமது வீடுகளிலும், மடிகளிலும், கைகளிலும் தவழ்ந்து விளையாடுகின்ற கணினி, மடிக்கணினி, கையடக்கத் தொலைபேசி போன்றவை அப்புரட்சி ஈன்றெடுத்த சில குழந்தைகள். ஆனால் உலகளாவிய ரீதியில் அப்புரட்சி செய்த பாரிய மாற்றம் என்னவெனில் நேரத்தையும் தூரத்தையும் ஒடுக்கிவிட்டு நாடுகளுக்கிடையே நிலவிய எத்தனையோ தடைகளைத் தகர்த்துவிட்டமையாகும். இம்மாற்றங்களையும் விரிவஞ்சி விபரிக்காது விடுவோம். ஆனால் ஒன்றை மட்டும் உணர்த்த வேண்டும். அதாவது பூகோளமயவாக்கம் என்ற பெயரில் உலகமே இன்று ஒரு கிராமமாகிவிட்டது. இக்கிராமத்தின் பிரதான பண்புகளென்ன?
முதலாவது, மனிதர்கள் முன்னெப்போதும் இல்லாதவாறு விரைவாகவும் கூடுதலாகவும் ஒருவரோடொருவர் நேரடியாகவோ பார்வை அல்லது கேள்வி மூலமாகவோ தொடர்பு கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் உலகின் பலபாகங்களிலுமுள்ள பொருளாதார நிலவரங்களைப்பற்றிய தகவல்கள் விரைவாகப் பரவுகின்றன. ஆதலால் பணமுதலும் தொழில் திறமையுமுள்ள ஒருவர் உழைப்புக்காக அல்லது வருவாய்க்காக சொந்த நாட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கத் தேவையில்லை. தடையற்ற பூகோளக்கிராமத்தில் முதலும் தொழிலும் வருவாய்தேடி உலகெலாம் அலையலாம். இப்புதுமைக் கிராமத்தின் இரண்டாவது பண்பு இது.
சந்தைச் சக்திகளை மையமாகக்கொண்ட முதலாளித்துவப் பொருளாதாரத்தை இயங்கவைப்பது இலாபநோக்கு. இந்த நோக்கினால் எங்கே உற்பத்திச் செலவு குறைவாய் இருக்குமோ அங்கே பொருளை உற்பத்திசெய்து எங்கே விற்பனைக்கு அதிக வாய்ப்புண்டோ அங்கே விற்பனை செய்வது பூகோளக்கிராமத்தில் இலகுவாய்விட்டது. இதுவரை சொந்த நாட்டுக்குள்ளேயே கட்டுப்பட்டுக் கிடந்த இவ்வுற்பத்தி, விற்பனை முயற்சிகள் இப்பொழுது நாட்டின் எல்லையைக் கடந்து பூகோள வரம்புக்குள் நின்று செயற்படுகின்றன. அதற்கேற்றவாறு பொருளியற் சிந்தனைகளும் பொருளாதாரக் கொள்கைகளும் கீன்ஸியக் கொள்கைளகளிருந்து தலைகீழாக மாறிவிட்டன. அவற்றையும் இங்கே விபரிக்க வேண்டிய அவசியமில்லை.
புதிதாகத் தோன்றிய இம்மாற்றங்களால் இந்தியா, சீனா போன்ற சனத்தொகை பெருகிய நாடுகள் உலகின் உற்பத்தித் தலங்களாக மாறிவிட்டன. இத்தலங்களுள் முதலிடம் வகிப்பது சீனா. மலிவான பொருளைத்தேடி உலகமே அதன் காலடியில் சிக்குண்டுள்ளது என்றால் அது மிகையாகாது. சீனாவே உலகின் பாரிய தொழிற்சாலையாக இன்று மாறிவிட்டது. விற்பனையாளர்களும், கொள்வனவு செய்வோரும், ஊர்சுற்றிகளும் அதிகளவிலும் அடிக்கடியும் சீனா சென்று வருதலும், சீனர்களும் முன்னெப்பொழுதும் இல்லாவதவாறு வெளியுலகுக்குச் சென்றுதிரும்புவதும் சகஜமாகிவிட்டது. நவீன தொழில்நுட்பப் புரட்சி நேரத்தையும் தூரத்தையும் குறுக்கிவிட்டதால் ஆகாயமும் சமுத்திரமும் விமானங்களாலும் கப்பல்களாலும் நிரம்பி வழிகின்றன. இவ்வாறான ஒரு பொருளாதாரச் சூழலிலேயே கொரேனா நுண்கிருமி ஒரு துன்பப் பிரளயத்தை ஏற்படுத்தியுள்ளது.
இக்கிருமி எங்கே எவ்வாறு தோன்றியது என்பதைப்பற்றிய சுருக்கமானதும் சர்ச்சைக்குரியதுமான ஒரு கட்டுரையை ஒரு வைத்தியத் துறை ஆய்வாளர் அண்மையில் வெளியிட்டுள்ளார் (பார்க்க: Romeo F. Quinjano, “Origin of COVID-19: Ecological, Historical and Geopolitical Perspective”, https://thuppahi.wordpress.com/2020/04/06/comprehending-covid-19-comprehensively/). இத்தொற்றின் பொருளாதார விளைவுகளென்ன?
முதலாவதாக, நுகர்வோரின் எத்தனையோ தேவைகளுக்காகச் சீனாவையே அனேகமான நாடுகள் நம்பியிருந்தால் போக்குவரத்து தடைப்படவே நுகர்வுப் பொருள்களின் பற்றாக்குறையால் இந்நாடுகள் தவிக்கலாயின. அதிலும,; பல உணவுப் பொருள்களின் உண்ணாட்டு உற்பத்தியையும் சீனாவுக்குத் தாரைவார்த்துக் கொடுத்த நாடுகளின் நிலை இன்னும் கேவலம். பொருள் பற்றாக்குறைவானால் கொள்ளைலாபம் பெருக்குவோருக்குக் கொண்டாட்டந்தானே. ஆதலால், விலைகள் உயர்ந்து வாழ்க்கைச் செலவு விஷம்போல் ஏறி சமூகத்தின் நடுத்தர, கீழ்த்தர வர்க்கத்தினரை நசுக்கத் தொடங்கிற்று. சொற்பமாயுள்ள தொகையை எவ்வாறு மக்களுக்கு நியாய விலையில் பங்கீடு செய்வதென்று தெரியாது அரசாங்கங்கள் தவிக்கலாயின. அதனை நிர்வகிக்க அமைக்கப்பட்ட குழுக்களும் பாரபட்சமாய் நடக்கத் தொடங்கின.
இரண்டாவதாக, பொருளுற்பத்தியில் முதலீடு செய்யாமல் பணச்சந்தையின் சூதாட்டத்தில் தமது செல்வத்தை முடக்கிய எத்தனையோ தனிநபர்களும், நிறுவனங்களும், வங்கிகளும் பங்குச் சந்தையின் சரிவால் பாரிய அளவு நட்டத்தைத் தாங்கவேண்டி இருந்தது. பணச் சந்தையின் அதிவேக வளர்ச்சி தொழில்நுட்பப் புரட்சியினதும் பூகோளமயவாக்கத்தினதும் ஒன்றுபட்ட விளைவு. இதனால், நவீன பொருளாதாரம் பொருளுற்பத்தி சார்புடையதாக இல்லாமல் பணந்திரட்டுவதையே நோக்காகக் கொண்டதாக மாறிற்று.
மூன்றாவதாக, பாரிய உற்பத்தி, வர்த்தக நிறுவனங்களும், சிறிய கடைகளும் தொழிற்சாலைகளும் நட்டத்தைத் தாங்கொணாது தொழிலாளிகள் தொகையை குறைக்கலாயின. இதனால் வேலையற்றோர் படை பெருகத் தொடங்கிற்று. அதமட்டுமல்ல, சுற்றுலாத்துறையையும் அதனைச் சார்ந்த பல தொழில்களையும் நம்பியிருந்த இலங்கை, மாலைதீவு போன்ற நாடுகள் பெரும் இழப்புகளை எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. உலக வர்த்தக நிறுவனம் சர்வதேச வர்த்தகம் 32 சதவீதத்தால் வீழ்ச்சியடையுமென எதிர்பார்க்கிறது. இதனாலேற்படும் பொருhதார மந்தம் பாரதூரமானதாக அமையும்.
ஓட்டுமொத்தமாக நோக்கினால், கடந்த நாற்பது ஆண்டுகளுக்குள் கடுகதியில் வளர்ந்து பூகோளமயமாகிய முதலாளித்துவப் பொருளாதார அமைப்பு ஒரு நுண்கிருமி ஏற்படுத்திய தாக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் பலிகொடுத்து ஓரிரு மாதங்களுக்குள் நிலைதளர்ந்து நிற்கின்றது. இதிலிருந்து கற்கவேண்டிய பாடங்களென்ன?
முதலாவது, அரசனை நம்பிப் புருஷனைக் கைவிட்டதுபோல் வெளிநாட்டு மலிவுப் பொருட்களை நம்பி சொந்த நாட்டு உற்பத்தியைக் கைவிடமுடியாது. அத்தியாவசியப் பொருள்களிலாவது ஒரு நாடு தன்னிறைவடைய வேண்டும். சிறிமாவோ பண்டாரநாயகாவின் இடதுசாரிக் கூட்டணி ஆட்சியில் இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவற்றின் நன்மைகளை பூரணமாக அனுபவிக்குமுன் ஜெயவர்த்தன ஆட்சி அதனை முற்றாகப் புறக்கணித்து திறந்த பொருளாதாரம் என்றனை போர்வையில் நாட்டையே முதலாளித்துவத்தின் கைப்பொம்மையாக்கி விட்டது. இந்தத் திருப்பம் மீளாய்வு செய்யப்படல் வேண்டும்.
இரண்டாவதாக, பொருளாதாரக் கொள்கைகள் சமூகத்தின் அமைப்பையும், இயற்கைச் சூழலையும் புறக்கணித்துவிட்டு உற்பத்தியையும் நுகர்வையுமே பிரதான நோக்காகக்கொண்டு வகுக்கப்படக்கூடாது. அதாவது பொருளாதார வளர்ச்சி என்பது தனியே தலா மெய்வருமானத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படுவது. இந்த வழக்கம் கைவிடப்பட்டு விரிவான ஒரு அளவீட்டின் மூலம் கணிக்கப்படல் வேண்டும். அதாவது சில உற்பத்திகள் மக்களுக்கு அவசியம்தானா என்பதை முதலில் தீர்hமானித்து அவசியமற்றவையையும் ஆபத்து நிறைந்தவையையும் தவிர்த்தல் வேண்டும். இதற்கு கொரோன ஓர் சிறந்த உதாரணம்.
கொரோனா கொண்டுவந்த கொள்ளை நோய்க்கு ஒரு காரணம் போராயுதங்கள் உற்பத்தி செய்வதற்காக உயிரியல் ரீதியான ஆய்வுகளை அமெரிக்காவும் சீனாவும் மேற்கொண்டமை என்று மேலே குறிப்பிட்ட கட்டுரை தெரிவிக்கின்றது. இது எவ்வளவு ஆபத்தானதென்பது இப்போது தெளிவாகிவிட்டது. இவ்வாறான ஆராய்ச்சியில் முடக்கப்படும் முதலீடும் அந்த ஆராய்ச்சியினால் உற்பத்தியாகும் ஆயுதங்களும் மக்கள் வாழ்வுக்கு அவசியம்தானா? பொருளாதார வளர்ச்சிக் கணிப்பில் இவையெல்லாம் சேர்க்கப்பட வேண்டுமா?
சுருக்கமாகக் கூறினால் நடைமுறையிலிருக்கும் பூகோளமய முதலாளித்தவப் பொருளாதார அமைப்பும் அதனைச் சுற்றியுள்ள சித்தாந்தங்களும் அவ்வமைப்பின் வளாச்சி பற்றிய கணிப்பு முறைகளும் தலைகீழாக மாற்றப்படல் வேண்டும். வருங்கால மனித சமுதாயத்தின் நலன்கருதி இப்பணி மேற்கொள்ளப்படல் வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.
கலாநிதி அமீர் அலி, மேர்டொக் பல்கலைக்கழகம், மேற்கு அவுஸ்திரேலியா