கலாநிதி, சி. ஜெயசங்கர்.
இன்றைய காலகட்டத்தின் அதிக பேசுபொருளாக இருப்பவர்கள் பழங்குடி மக்கள். பழங்குடி மக்களை ஆதிக்குடிகள், தொல்குடிகள் என்று பொதுவாக அழைப்பர். ஆயினும் பிரதேசத்திற்குப் பிரதேசம் வேறு வேறு பெயர்களைக் கொண்டவர்களாக இவர்கள் காணப்படுகின்றனர். அவுஸ்ரேலிய அபொறிஜின்கள், நியுசிலாந்தின் மயோரிகள் என பல்லாயிரக்கணக்கான தனித்துவமான பெயர்களைக் கொண்டவர்களாக பழங்குடிகள் வாழ்ந்து வருகின்றனர். இலங்கையின் பழங்குடிகள் அல்லது தொல்குடிகள் ‘வேடுவர்’ என அழைக்கப்படுவர்.
பழங்குடி மக்கள் தேசத்தின் முதல் மக்கள் (People of First Nation) எனவும் உலகம் முழுவதும் அழைக்கப்படுகின்றனர். இந்த மக்களின் போராட்டத்தில் தான் இந்த உலகின் இருப்பு இருந்து வருகின்றது என்பதை அறிந்தவர் தொகை மிகக் குறைவு.
உலகத்தின் பாதுகாப்பு, தேசத்தின் பாதுகாப்பு என்ற பெயரில் ஆயுதக்குவிப்பை நிகழ்த்தி பொருளீட்டுவதிலும், உலகின் வளங்களை கபளீகரம் செய்வதற்கான ஆக்கிரமிப்புக்களை மேற்கொள்வதற்குரிய அரசியல் பொருளாதாரக் கொள்கைகளை வகுத்து முன்னெடுப்பதிலும் பேராசை வெறிகொண்டு இயங்கும் அதிகார ஆதிக்க வலைப்பின்னலை எதிர்த்தும், நவகாலனியம் எனப்படும் புதிய தாராளமயவாத ஆக்கிரமிப்புக்களை பல்வேறு வழிகளிலும் உலகம் முழுவதிலும் எதிர்கொண்டும் இயற்கையையும், உயிர்களையும் காப்பாற்றும் மக்கள் குடியினராக பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
உலகத்தின் பாதுகாப்பு, தேசத்தின் பாதுகாப்பு என்பதன் அர்த்தத்தை பழங்குடி மக்களது போராட்டங்களிலும் வாழ்வியலிலுமே காணமுடியும். மாறாக மூலவளச் சுரண்டலுக்காகவும் மூலதனச் சுரண்டலுக்காகவும் போர்களையும் பயங்கரவாதத்தையும் உற்பத்தி செய்யும் சக்திகள் கட்டமைத்திருக்கும் பாதுகாப்பென்பது ஆக்கிரமிப்பிற்கும் ஆதிக்கத்திற்குமானது என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டியது.
‘மனிதர்களை மனிதர் கொல்லும்
வாழ்க்கை தன்னை வெற்றியென்போம்
மனிதருடன் மனிதர் வாழும் வாழ்க்கையெல்லோ வெற்றியாகும்’
(‘அபிமன்யு இலக்கணன் வதம்’ – மீளுருவாக்கப்பட்ட வடமோடி கூத்துப் பாடல்)
‘இயற்கை மடியினில் கூடுகள் கட்டி
இயற்கை மகிழ்ந்திட வாழ்வினைக் கூட்டி
இணைந்து மகிழ்ந்து உயர்வு பெற்று
வாழவேண்டும் நாங்கள்
இணைந்து மகிழ்ந்து உயர்வு பெற்று வாழுவேண்டும்’
(மூன்றாவதுகண் உள்ளுர் அறிவு திறன் செயற்பாடுகளுக்கான நண்பர்கள் குழுவின் பாடலில் இருந்து)
பழங்குடி மக்களின் வாழ்க்கை என்பது இயற்கையுடன் இயற்கையாகச் சேர்ந்து வாழ்வது. இயற்கையைச் சுரண்டி வாழும் வாழ்க்கைக்கு எதிராகவும், சுமார் ஆறு நூற்றாண்டுகளுக்கும் மேலான காலனிய ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகவும் உலகம் முழுவதும் போராடிய, போராடி வருகின்ற மக்கள் குடிகளும் இந்தப் பழங்குடிகள்தாம்.
நவீனமயமாக்கம், நாகரீகப்படுத்தல் என்ற பெயரில் உலக வளங்களை கபளீகரம் செய்யும் ஸ்பெயின், போர்த்துக்கல், பிரான்ஸ், நெதர்லாந்து, ஜேர்மனி போன்ற மேற்குலக நாடுகளது குரூரமானதும் தந்திரமானதுமான போர்களை எதிர்கொண்டவர்களும், பேரழிவுகளுக்கு இலக்கானவர்களும் இந்தப் பழங்குடி மக்கள்தாம்.
இத்தகைய புதைக்கப்பட்ட பேரழிவுகளின் மேல் நின்றே உலகின் நாகரிகம், நவீனமயமாக்கம், சனநாயகம், சட்டம், ஒழுங்கு என்பன கட்டமைக்கப்பட்டன. புதிதாகக் கட்டமைக்கப்பட்ட இந்நிலைமைகளை விரும்பியேற்கும் தலைமுறைகள் உருவாக்கப்பட்டன. பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், வெகுசன ஊடகங்கள்;, சட்டம் ஒழுங்கிற்கான அமைப்புக்கள், மதநிறுவனங்கள் என்பன இப்பணியினைச் செய்வதற்கென நிர்மாணிக்கப்பட்டன. அந்த நிர்மாணம் இற்றைவரை நிலைத்திருப்பதன் அடிப்படை, கடந்தகாலம் பற்;றிய நினைவழிப்புகளும், திரிபுபடுத்தல்களும், நவீனமாயைகளும் அறிவு பூர்வமானவையாக முற்போக்கானவையாக சனநாயகமானவையாக காலனிய வாழ்வியியலில் கட்டமைக்கப்பட்டதும் ஆகும்.
தேசிய விடுதலைப் போராட்டங்கள் இவற்றைக் கேள்விக்குட்படுத்தி காலனிய நீக்கத்திற்கான முனைப்புகளாகத் தோற்றம் கண்டன. விடுதலை பெற்ற தேசங்கள், பல காலனிய நீக்கம் பெற்ற வாழ்வியலைக் கட்டமைக்க முயன்றன. ஆயினும் காலனீயநீக்க முனைப்புகள் சனநாயக விரோதங்கள் என்ற யெயரில் உள்ளுர் சக்திகளின் ஒத்துழைப்புடன் கவிழ்க்கப்பட்டன. இதற்கு மாற்றீடாக அதிகார வேட்கை கொண்ட கறுப்புத் தோலில் அல்லது மண்ணிறத்தோலில் வெள்ளை மனிதர்கள் நிறுவப்பட்டனர். இது தொடர்ச்சியான பொருளாதாரச் சுரண்டலுக்கான நிலமையை உறுதிப்படுத்தியது.
புதிய உலக ஒழுங்கு என்பது மேற்கண்ட வகையிலே கட்டமைக்கப்பட்டிருக்கின்றது. இத்தகைய நிலைமையை வலுப்படுத்தும் புதிய கல்விக் கொள்கைகளும், பொருளாதாரக் கொள்கைகளும் நிராகரிக்கப்பட முடியாத வகையில் பரிமாறப்பட்டிருக்கின்றன. தட்டிக்கேட்க முடியாத மூலவளச் சுரண்டலுக்கும் திருப்பிக் கொடுக்கப்பட முடியாத கடன் சுமைக்கும் வெறுப்புப் பண்பாட்டுச் சூழலுக்குள்ளும் வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட சமூகங்களின் கூட்டாகவே உலகம் இயங்கி வருகின்றது. இத்தகைய நிலைமையினைப் பேணுவதே, பாதுகாப்பு என்ற கொள்கையாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலைமைகளிலிருந்து விடுபடுவதற்கான மக்கள் போராட்டங்கள், உலகம் முழுவதும் நிகழ்ந்து வருகின்றன. இவை குரூரமாக நசுக்கப்பட்டும் வருகின்றன. ஆயினும், மக்கள் கிளர்ந்தெழுவதென்பது நிகழ்ந்தே வருகின்றன. இத்தகைய கிளர்ச்சிகளில், ஒருபகுதி உலகின் ஆதிக்க ஒழுங்குகளை நிராகரிக்கும் அல்லது ஏற்றுக் கொள்ள மறுக்கும் அல்லது தமக்கான மாற்று ஏற்பாடுகளுக்கு முனையும் சக்திகளுக்கு எதிராகவும் உற்பத்தி செய்யப்படுவதும் வலுவாகக் காணப்படுகின்றது. இதற்கேற்ப மக்களை விமர்சன நோக்கற்ற, படைப்பாக்கத் திறனற்ற நுகர்வுச் சக்திகளாக கட்டமைக்கும் வேலைத் திட்டங்கள் வெற்றிகரமாக முடுக்கி விடப்பட்டுள்ளன. வாழும் சூழல் பற்றிய கவனிப்பற்றதும் புதிய தொழில்நுட்பச் சாதனங்களின் வழி உற்பத்தி செய்து பரவவிடப்படடும் உலகத்துள் மூழ்கிக் கிடக்கும் சமூகங்களது உருவாக்கம் வலுவாகக் கட்டமைக்கப்பட்டு வருகிறது.
இராணுவப் பொருளாதார வல்லபமே உலகப் பாதுகாப்பென்றும், இயற்கையுடன் இணைந்த வாழ்வே உலகப் பாதுகாப்பென்றும் இரு நிலைகளில் நிகழ்த்தப்பட்டுவரும் போராட்டத்தில், இயற்கையுடன் இணைந்து வாழும் வாழ்வே பாதுகாப்பானது எனும் நம்பிக்கையுடன் வாழ்க்கைப் போராட்டத்தை முன்னெடுக்கும் காலனிய நீக்கச் சக்திகளின் முன்னணியில் நிற்பவர்களாக 21ம் நூற்றாண்டிலும் பழங்குடி மக்களே திகழ்ந்துவருவதை உலகம் கண்டு வருகின்றது. இதன் காரணமாக உலகின் எதிர்காலம் பழங்குடி மக்களின் கைகளிலேயே இருக்கின்றது என்பது, உலகம் அதில் வாழும் உயிர்கள் பற்றிய அறிவும் அக்கறையும் கொண்ட அறிஞர்களின் கருத்தாக இருக்கின்றது. பழங்குடி மக்கள் அணிதிரண்டு தமக்குள் அமைப்பாகி சமூகவலைப்பின்னல்களை உருவாக்கிக் கொண்டு மக்கள் போராட்டங்களாகவும், சட்ட முன்னெடுப்புகளாகவும,; காலனிய நீக்கசூழல் உருவாக்கங்களாகவும், கலைப்பண்பாட்டு சூழல் உருவாக்கங்களாகவும், கலைப்பண்பாட்டுப் பொருளாதார மீளுருவாக்கங்களாகவும் வாழ்தல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இத்தகையதொரு பின்னணியில் இலங்கைத்தீவின் நிலவரத்தைக் கருத்தில் கொள்வது முக்கியமாகின்றது. இலங்கையின் பழங்குடிகள் வேடுவர் என அழைக்கப்படுகின்றனர். இலங்கையின் பழங்குடியினராகிய வேடுவரின் நிலைமை மிகவும் பாரதூரமானது. ஆயினும் அதிகம் பேசப்படாதது. சமூகமயப்பட்டு அணிதிரளலுக்கான சக்திகளாக இலங்கை வேடர்கள் பரிமாணம் கொள்ளாத நிலைமையையே காணமுடிகின்றது. இது ஏனைய தென்னாசிய நாடுகளிலிருந்து மாறுபட்டதாகக் காணப்படுகின்றது. வேடர்களும் தமது கருத்துக்களை வெளிப்படுத்துபவர்களாக இருப்பினும், அவை கவனத்தில் கொள்ளப்படுவதாக இல்லை. மாறாக அறிஞர்களிற்கான ஆய்வுப் பொருளாகவும், ஊடகங்களுக்கு அவ்வப்போது ஆச்சரியப்படுத்தும் செய்தியாகவும், வணிகத்திற்கும், அரசியலுக்கும், கல்விக்கும் காட்சிப் பொருளாகவுமே பார்க்கப்பட்டு வருகின்றது.
வேடர்கள் எனும் ஆளடையாளப்பதிவிலிருந்து தமிழர்களாகவும், சிங்களவர்களாகவும் அடையாள மாற்றத்திற்கு உள்ளாக்கப்பட்டதன் காரணமாக உலக ரீதியான ஐ.நா. சட்டவாக்கங்கள், தேசத்தின் அரசியலைப்பில் காணப்படும் வாய்ப்புகளையும் பெறத் தகுதியற்றவர்களாகி இருக்கின்றனர். இதன் காரணமாக அவர்களது வாழ்வாதாரத்திற்கான வேட்டையாடுதல் பெருந்தண்டனைக்குரிய குற்றமாகக் கையாளப்படுவதை எதிர்கொண்டு வருவது யதார்த்தமாக இருக்கின்றது.
‘நாங்கள் வேடர்கள்’ என்ற அடையாளப்படுத்தலுடன் தங்களை நிலைநிறுத்தும் குரல் வலுப்பெற்று வருவது அவதானிக்கப்படுகிறது. வேடர் சமூகங்களுக்குள் இருந்தும் வெளியிலிருந்தும் இக்குரல் மெல்லிதாகக் கிளம்புகின்றன. இந்தக் குரலின் வலுவாக்கமும், உலகந்தழுவிய பழங்குடிச்சமூகங்களுடன் ஒண்றிணைதலும், வேடர்களை வலுப்படுத்தும் விடயமாக இருப்பதுடன் இலங்கைக்கு உரிமை கோரி ஆள்மாறி ஆள் அழிக்கும் வந்தேறிகளின் அடாவடிகளையும் மட்டுப்படுத்துவதாக இருக்கும்.
இயற்கையுடன் இணைந்து வாழும் உலகந்தழுவிய அரசியல் முன்னெடுப்புடன் இலங்கைத் தீவையும் இணைத்து வைக்கும் சக்தியாகவும் சரடாகவும் இது அமையும்.
ஆய்வுப் பொருளாகவும் வணிக மற்றும் அரசியல் காட்சிப் பொருளாகவும் ஆக்கப்பட்டிருந்த இலங்கைத்தீவின் பழங்குடி மக்களான வேடுவர்களின் வாழ்வியல் அவர்களுக்காக அவர்களே பேசுவதும் அவர்களுடன் இணைந்து அவர்களின் நிலைப்பாட்டில் நின்று அவர்களுடன் தொடர்ந்து பணியாற்றுவதும் பேசுவதும் பங்குகொள் கலைச்செயற்பாடுகளாகவும் ஆய்வுச்செயற்பாடுகளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மூன்றாவதுகண் உள்ளுர் அறிவு திறன் செயற்பாடுகளுக்கான நண்பர்கள் குழுவின் மேற்படி முன்னெடுப்பிலும் அதன் தொடர்ச்சியாக கிழக்குப்பல்கலைக்கழக நுண்கலைத்துறை மற்றும் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவன முன்னெடுப்பிலும் இணைந்து நின்ற, நிற்கின்ற குமாரசாமி சண்முகம் அவர்களது ‘களுவன்கேணி வேடுவப் பரம்பரையினரின் வழக்காறுகள்’ ஆய்வுநூல் கிழக்கிலங்கை வேடுவர்களுடனான நீண்டகால நெருக்கமான வாழ்வின் வெளிப்பாடாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆய்வுகளின் நோக்கம் என்ன? ஆய்வாளருக்கும் ஆய்வுக்குரிய விடயத்திற்கும், ஆய்வுக்குரிய சமூகத்திற்குமான தொடர்பு என்ன? ஆய்வின் விளைவு என்னவாக இருக்கிறது? என்பதெல்லாம் முக்கியமாகச் சிந்திக்கப்பட வேண்டிய விடயங்கள். அப்பொழுதுதான் ஆய்வு என்பது பயன்பாட்டிற்குரியதாக இருக்கும். இல்லையேல் பயிற்சிக்கும் பதவியேற்றத்திற்கும், ஆய்வுக்கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்வதற்குமான நடைமுறையாகவே ஆய்வு காணப்படும். இந்தவகையிலானவையே மிகப்பெரும்பாலும் ஆய்வுகளாகக் கருதப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இத்தகையதொரு பின்னணியில் வேடுவர் சமூகங்களுடன் மிகநீண்ட காலமாக இணைந்து வேலை செய்து வருகின்ற குமாரசாமி சண்முகம் அவர்களது நூல் குறிப்பிடப்பட வேண்டியது. வேடர் சமூகங்களின் சடங்குகள் உள்ளிட்ட வழக்காறுகளில் அவர்களுடன் இணைந்து இயங்கி வருகின்ற பட்டறிவு, படிப்பறிவுகளின் திரட்சியின் வெளிப்பாடாக இந்நூல் அமைகின்றது.
சூழல் சார்ந்ததும் மக்கள் மயப்பட்டதுமான வாழ்க்கையை உருவாக்குவதில் ‘களுவன்கேணி வேடுவர் பரம்பரையினரின் வழக்காறுகள்’ நூல் கூறும் விடயங்கள் பல பரிசோதிப்புக்கள் ஊடாக வலுப்படுத்தப்படுவதும், மீளுருவாக்கம் செய்யப்படுவதும் அவசியமாகிறது. இந்தச்செயற்பாடு வேடுவர் சமூகத்தவரின் பங்குபற்றுதலுடனும், முன்னீடு முகாமைத்துவத்துடனும் அவர்களுக்கு உரித்துடனான வகையில் அமையவேண்டும். இந்தவகையில் இலங்கையின் ஆதிக்குடிகளான வேடுவர் சமூகங்களது வாழ்வியல் வழக்காறுகள் மொழி என்பவற்றின் இருப்பும் வலுவாக்கமும் இலங்கைத் தீவானது தன்னில் தங்கி நிற்கும் வளத்திற்குப் பங்களிப்புச் செய்யும் காரணிகளுள் சிறப்பிடம் பெறுவதாக இருப்பதுடன் வந்தேறு குடிகள் கொண்டாடும் இலங்கைத்தீவிற்கான உரிமம் பற்றிய வாதங்களின் பொய்மைகளைப் புலப்படுத்துவதற்கும் வாய்ப்பளிப்பதாக இருக்கும்.
இந்தப்பின்னணியில் வேடுவர் சமூகங்களது வாழ்வியலுடனும், வழக்காறுகளுடனும் இயல்பான உறவுகளும் தொடர்புகளும் கொண்ட குமாரசாமி சண்முகம் அவர்கள் இந்நூலை எழுதியிருப்பது முக்கியமானது. இத்தகைய முயற்சி, வேடர் சமூகங்களுக்குள் இருந்து வருவதும், அதற்கான முயற்சிகளும் முன்னெடுப்புக்களும் அவசியமானவை. அந்த வகையில், மூன்றாவதுகண் உள்ளுர் அறிவு திறன் செயற்பாடுகளுக்கான நண்பர்களுடன் இணைந்து வேடர் சமூகங்களுடனான கலை ஆற்றுகைகள், பங்குகொள் ஆய்வுச் செயற்பாடுகள் என்பவற்றின் வழி கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக முன்னெடுக்கப்பட்டு வரும் கலைச்செயல்வாத நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க பங்குவகிப்பவராகவும் குமாரசாமி சண்முகம் விளங்கி வருகிறார். இத்தகையதொரு பயணத்தில் மேலதிக கற்றலுக்கும், புரிதலுக்குமான ஊடகமாக இந்நூல் அமைவதுடன் தொடர் உரையாடலுக்கும் வளர்த்தெடுப்புக்கும் உரியதாகவும் இருக்கிறது. களுவன்கேணி வேடுவர் சமூகம் பற்றிய ஆய்வு அவர்களுடன் இணைந்து மேலும் முன்னெடுக்கப்படுவதுடன் ஏனைய வேடுவர் சமூகங்கள் பற்றிய ஆய்வுகள், பங்குகொள் ஆய்வுகளாக சமூக வலுவாக்கத்திற்கும் வளர்ச்சிக்குமானதாகப் பரிமாணம் கொள்ள வேண்டும்.
வேடுவர் சமூகங்கள் நாகரிகப்படுத்தப்படல் வேண்டும், நவீனமயப்படுத்தப்படல் வேண்டும், அபிவிருத்தி செய்யப்படல் வேண்டும் என்று காலனியப்படுத்தும் நோக்கில் வேடுவர் அடையாளத்தை, மொழியை, நம்பிக்கைகளை, வாழ்வியலை அழித்தொழிப்பது சமூகப்பண்பாட்டு வன்முறையாகவே அமையும்.
இலங்கையின் ஆதிக்குடிகள் சமூகமயப்பட்டு உலகம் முழுவதும் அணிதிரண்டு வருகின்ற பழங்குடி சமூகங்களுடன் இணைந்து உருவாக்குகின்ற வாழ்விற்கு உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் இயங்குவது அவசியம். இந்த அவசியத்திற்கு பங்களிப்புச் செய்வதாக இந்நூல் அமைகிறது.
உலகம் முழுவதும் மீண்டெழுந்து வருகின்ற பழங்குடி மக்களது வாழ்வும் இருப்பும் உலகத்தை, இயற்கையை மனிதருள்ளிட்ட உயிர்களைக் காக்கவல்லது. இந்தப்பயணம் பன்மைப் பண்பாட்டைக் கொண்டாடுவது, உயிர்களை மதிப்பது, உலகின் அழகை அர்த்தப்படுத்துவது.
கலாநிதி, சி. ஜெயசங்கர்
முதுநிலை விரிவுரையாளர்,
நுண்கலைத்துறை,
கிழக்குப்பல்கலைக்கழகம்,
இலங்கை.