பரந்தவொளி கொடுத்த ஞாயிறு
படுவானில் ஒளிந்து கொள்ளும்
அசைவை நிறுத்தி கண்ணா, காயா
ஆறுதல் அடையும்
பறவைகள் கூடுசேர்ந்து
பரவசம் கொள்ளும்
மிதவைகள் வரிசையாய்
மிருதுவாய் ஓய்வெடுக்கும்
வலைகாரன் கொல்லாவை
வகுஞ்ச நேரம் தள்வான்
சவள் கொண்டு தொடுப்பான்
சத்தமின்றி நகரும்.
நீள் வலை விரியும்
நீரில் குத்துக்கம்பு குத்தி தோணி உறையும்
உறக்கமும் அதன்மேல்
உருண்டுபடுத்தால் உயிரும் பலியாகும்.
நடுநிசி கழிந்து
வலை தூக்கி
செல்வன், கோல்டன்
கெளுத்தி, ஒட்டி,
முரல், அதக்கை
பனையான், திரளி
சள்ளல், பொட்டியான்
உழுவை விரால்
கிளக்கான்……..
நீண்டு செல்லும்
பிடிக்கும் இனங்கள்
பெருங்கண் கொண்டு – பலர்
பெருமீன் பிடிப்பர்
சிலந்தி வலை இட்டு – சில
சிணுக்கன் சிதறச்சிதற
குஞ்சி, கூரானையும்
குவலயத்தோடு அழிப்பர்.
ஈழதேசத்தில்
ஈவீரக்கமின்றி அழிக்கப்பட்டவை ஏராளம்
இனவழிப்பு வேண்டாம்
இம்மண்ணில் இனவழிப்பு வேண்டாம்.
– வ.துசாந்தன் –