உயிர்த்த ஞாயிறு
நினைவு கூறப்போவது
பல உயிர்கள் உதிர்ந்த
ஞாயிறு என்றுதான்.
குரோத நெஞ்சங்கள்
மருந்தாக வேண்டிக்கொண்டது
சிலுவைச் சகோதரங்களை மட்டுமல்ல
சில அப்பாவிகளையும் தான்.
நம்மில் பலர்
மதமெனும் அடையாளம் கொண்டுதான்
நினைவு கூர்கின்றோம்.
உயிர் நீத்த உறவுகளுக்காய்
மனிதம் கொண்டும்
இரு நிமிடம் ஒதுக்க வேண்டும்
மனிதரெல்லாம்
அதுவே
குரோதமில்ல நெஞ்சினர்க்கு அழகு.
ஒரு கோளையின்
வழிகாட்டல்
பலரை பாவிகளாய்
ஏவி விட்டது.
ஒரு சமூகம் இழக்கென
தலை குனிகிறது.
ஒரு சமூகம் மெழுகென
கரைகிறது.
உயிர்த்த ஞாயிறு
மீண்டு வந்துவிட்டது.
உறவுகளை பறி கொடுத்தவர்கள்
கரை தட்டவில்லை.
காகிதங்களில்
பத்திரிகை காகிதங்களில்
அஞ்சலி செலுத்தி
எதைத்தான் கண்டோம்
எரிகின்ற நெருப்பில்
எண்ணெய் தான் விட்டோம்.
மதம் அன்று
யாரையும் காக்கவில்லை
மதம் இன்று
இனப் பிரிவினையைக் குறைக்கவுமில்லை.
மதம் எனும் நம்பிக்கை
பல தருணங்களில்
எம் நெருக்கத்தை தொலைவாக்கி
தூரப்படுத்துகிறது.
போதனைகள்
சொன்ன மதம்
பேதங்கள் அழிய
வழி காட்டவில்லையென்றால்
எதற்காய் இன்னும்
உயிரோடு இருக்கிறது.
இருக்கும் உயிர்களையும்
பறிப்பதற்கோ?
மதங்களை
உங்களுக்குள் சாகடித்திடுங்கள்
இல்லை
மனிதம் எனும்
மதமொன்றால்
கை கோர்த்திடுங்கள்
அதுவே
இறப்புகளுக்கு அர்த்தமாகும்
இருப்பவர்களின்
திருத்தமாகும்.
த.நிறோஜன்.
கிழக்குப் பல்கலைக்கழகம்,
இலங்கை.