கொழும்பில் கொரோனா வைரஸ் பரவல் அபாய பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் பாரவூர்தியில் யாழ்ப்பாணத்துக்கு தப்பிச் சென்றவர்கள் 8 பேரையும் அவர்களை சட்டத்துக்கு புறம்பாக ஏற்றிவந்த பாரவூர்தி சாரதியையும் விடத்தல்பளை படைமுகாம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் வைத்து கண்காணிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குருநகர், பீச் வீதியைச் சேர்ந்த ஒருவர், யாழ்ப்பாணம் ஐந்துசந்தி- ஒஸ்மானியா வீதியைச் சேர்ந்த ஒருவர், சங்கானை- ஓடக்கரையைச் சேர்ந்த ஒருவர், சுழிபுரம் – தொல்புரத்தைச் சேர்ந்த ஒருவர் தெல்லிப்பழை (சந்திக்கு அருகில்) ஒருவர், நாவற்குழி வீட்டுத்திட்டம் பகுதியைச் சேர்ந்த மூவர் மற்றும் புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த சாரதி ஆகிய ஒன்பது பேரே இவ்வாறு தனிமைப்படுதலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர்.
சாரதி யாழ்ப்பாணத்தில் இருந்து அத்தியாவசிய சேவைக்கான அனுமதிப்பத்திரத்துடன் சென்றுள்ளார். ஏனையவர்கள் தொழில்நிமித்தம் கொழும்பில் தங்கியிருந்து யாழ்ப்பாணத்துக்கு வந்துள்ளனர்.
சாரதி உள்பட 9 பேரையும் விடத்தற்பளையில் உள்ள படை முகாம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்த யாழ்ப்பாணம் காவல்துறையினரால் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் விண்ணப்பம் செய்யப்பட்டது.
அதனை ஆராய்ந்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல், 9 பேரையும் மே மாதம் 26ஆம் திகதிவரை விடத்தற்பளை படைமுகாம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் வைத்து கண்காணிக்க உத்தரவிட்டார்.