ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தயாரித்துள்ள கொரோனா தொற்றுத் தடுப்பூசி மனிதர்கள் மீதான பரிசோதனை இன்று வியாழக்கிழமை முதல் ஆரம்பமாகும் என பிரித்தானிய அரசாங்கம் கடந்த செவ்வாயக்கிழமை அறிவித்திருந்தது.
கடந்த வாரம் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் அதிவேக தடுப்பூசித் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், செப்டெம்பர் மாதத்துக்குள் தடுப்பூசி கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தடுப்பூசித் தயாரிப்பு பணிகள் துரிதமாக நிறைவடைந்துள்ளன.
ஒக்ஸ்போர்ட் ஆராய்ச்சி குழுவின் இந்த மருத்துவ பரிசோதனைகளுக்காக பிரித்தானிய அரசாங்கம் 20 மில்லியன் பவுண்டுகளை ஒதுக்கியுள்ளது. லண்டனின் இம்பீரியல் கல்லூரியும் 22.5 மில்லியன் பவுண்டுக்களை ஒதுக்கியுள்ளது.
மருந்துகள் தயாரிப்பு மற்றும் சோதனை குறித்து பிரித்தானிய சுகாதாரத் துறை செயலாளர் மாட் ஹான்காக் தெரிவிக்கையில்,
வேறெந்த நாடுகளும் ஒதுக்காத அளவு நிதி ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலை குழுவிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இன்று மனிதர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்படும். இந்த சோதனை முயற்சி வெற்றி பெற்றால், நாட்டில் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் செலுத்தப்படும். தடுப்பூசி சோதனை எனப்படுவது ட்ரையல் அன்ட் எரர் நடைமுறை தான். இந்நடைமுறையைப்படித்தான் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசியைக் கண்டுபிடித்து, இன்று முதல் சோதனை மேற்கொள்ளவுள்ளதால் உலகத்தின் பார்வையே தற்போது பிரித்தானியா மீது உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது #ஒக்ஸ்போர்ட் #கொரோனா #தடுப்பூசி #பரிசோதனை