மனித வரலாற்றில் தற்போது புதிய சகாப்தம் நடந்து வருகிறது. பல லட்சம் உயிர்களை காவு வாங்கும் கொரோனா வைரஸுக்கு எதிராக உலகமே போராடி வருகிறது.
இந்த சூழலில் பள்ளிகள் மற்றும் கோயில்கள் தனிமைப்படுத்தப்பட்டவர்களை தங்க வைக்கும் இடங்ளாக மாறி வருகின்றன. ஆந்திரப் பிரதேசத்தில் இருக்கும் பிரபல கோயில்களான திருமலை-திருப்பதி, ஸ்ரீகாலஹஸ்தி, கனிபாகம் போன்ற சில கோயில் நிர்வாகங்கள் தங்களுக்கு சொந்தமான சில கட்டடங்களை கோவிட்-19 நோயாளிகளை தங்க வைக்கும் இடங்களாக மாற்றியுள்ளன. அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும், இங்கே தற்போது தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்து , இஸ்லாமியர் என அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்களும் சில வெளிநாட்டவர்களும் அகதிகளாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். சிலர் இந்த கட்டடங்களில் சிகிச்சை எடுத்து வருகின்றனர்.
வருமானத்திலும் பக்தர்கள் கூட்டத்திலும் மிகப்பெரிய கோயில்களில் ஒன்றான திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் நிறைய தங்கும் விடுதிகளும் விருந்தினர் மாளிகைகளும் உள்ளன.
அதில் ஸ்ரீனிவாசம் தங்கும் விடுதி மற்றும் மாதவம் தங்கும் விடுதி ஆகிய இரு விடுதிகள் முக்கியமானதாகும். மலையின் கீழிருக்கும் இரண்டு விடுதிகளிலும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து தங்குவார்கள். எப்போதும் பக்தர்களின் கூட்டத்தோடு இருக்கும் விடுதிகள் இவை.
ஸ்ரீனிவாசம் மற்றும் மாதவம் விடுதிகள் திருப்பதி பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ளன.
இவை தற்போது தங்க இடமில்லாத வெளி மாநில தொழிலாளர்களுக்கு முகாம் போல செயல்பட்டு வருகின்றன. சாதி, மத பேதமின்றி அனைவருக்கும் இந்த விடுதிகளில் அடைக்கலம் தரப்படுகிறது.