இசக்கி கார்வண்ணன் கதை இயக்கத்தில் வெளிவந்துள்ள பெட்டிக்கடை எனும் திரைப்படம் சென்ற ஆண்டின் சிறந்த படம் என்றே சொல்ல வேண்டும். இப்படம் லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் வெளிவந்துள்ளது. ஏதோ பெட்டிக்கடை குறித்து படம் என்று நினைப்பதும் உண்டு.பெட்டிக்கடை ஒரு கிராமத்தின் பாரம்பரிய வாழ்வியல் சார்ந்த குறியீடு. இப்படத்தின் தொடக்கம் பூட்டியிருந்த பெட்டிக்கடையை நோக்கி சுந்தரராசன் விரைவாக வந்து கதவைத் தட்டிப்பார்க்கிறார். “எப்பதான் திறப்பாங்க தெரியலையே. ஆன்லைன் வர்த்தகம்வேறவந்துச்சு, ஊருக்குள்ள ஒரு பெட்டிக்கடை கூட இல்லை. ஆறறிவு படைத்த மனிதர்களுக்கே இப்படியென்றால் ஆடு மாடுகளுக்கு என்ன செய்யும்” எனப் புலம்புகிறார்.எப்போதுதான் விடிவுகாலம் ஏற்படுமோ என்கிற கேள்வியை எழுப்புகிறார். இதற்குப் பின்னணியாக ஒரு சேவல் கொக்கரிக்கும் ஒலி கேட்கிறது. இந்தச் சேவலின் கொக்கரிப்பு ஒலி விடிவுக்கான ஒரு குறியீட்டு மொழிதலின்அடையாளம் தான்.இப்படத்தில் பெட்டிக்கடை, சந்தைப்பேட்டை, கேலைன்ஸ் என்பவைகள் நுகர்வியத்தின் குறியீடுகளாகும்.இதில் பெட்டிக்கடை என்பது கிராமியம் சார்ந்த உற்பத்திப் பொருள்களைச் சந்தைப்படுத்தும் குறியீட்டுச் சொல்லாகும்.இப்படத்தில் கேலைன்ஸ், சந்தைப்பேட்டை என்பன பெருநிறுவனம் (கார்ப்பரேட்) நுகர்வியத்தின் கொள்ளைலாபம் நோக்கிய நுகர்வுக் கலாச்சாரத்தின் குறியீடுகள் ஆகும்.இவ்விரு குறியீட்டுமுரணியத்தில்படத்தின்திரைமொழிஅமைந்துள்ளது.
இப்படத்தின் காட்சிகள் அதீத மிகையுணர்ச்சியின்றி கதாபாத்திரங்கள் நடப்பியல் தன்மையோடு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.இப்படத்தில் நாடகத்தன்மை நிறைந்திருப்பதைப் பார்க்கமுடிகிறது.கதையைப் புரிந்துகொள்ள பிளாஷ்பேக் உத்தி பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒருசில,காட்சிகளின்போதாமைஇருந்தபோதிலும் அது மிகையாகத் தெரியவில்லை. படத்தின் ஒருகாட்சியாக துவாரகா( சாந்தினி) தன்வீட்டில் தூங்கிக் கொண்டிருக்க, தன் அம்மா எழுப்புவதும் செல்போன் மேல் பைத்தியமாக இருக்கக்கூடிய துவாரகா தான்குளித்து வரும்பொழுது ஆடையைப் பெரிதும் பொருட்படுத்தாமல் செல்போனில் மூழ்கி ஆடை அணியாமல்வருவதும் அதை வீட்டிற்கு வந்த நண்பரின் பாத்திர உரையாடல்வழி அறியமுடிகிறது. பின்னர் அவளது அம்மா அறிவுறுத்தியதன்பின்னரே துவாரகா ஆடையை உடுத்துவருகிறாள். இவ்வாறு துவாரகாவின்பாத்திரம் அறிமுகமாகிறது. இக்காட்சிக்குப் பிற்பகுதியில் காட்டப்படும் துவாரகாவின் போராட்ட குணத்திற்கான மனமாற்றம் எங்கிருந்து உருவாகிறது என்று அனுமானிக்க முடிகிறது.செல்போனில் மூழ்கியிருந்த துவாரகா தான் பணிக்குச் சென்றதும் அந்தக் கிராமியச் சூழல் தன்னை மாற்றியதா?அல்லது மருத்துவப்படிப்பு படித்த துவாரகா ஆட்சியராக ஆகவேண்டுமெனப் பயிற்சி வகுப்புக்குச் செல்கிறாள். அவ்வகுப்பில் பழங்குடிச் சமூகத்தின் வாழ்வியலைப் பேசுவதும், சாலைகள் அமைப்பதற்குப்பின் இயற்கைவளங்களைக் கொள்ளை அடிப்பதுமான முதலாளித்துவ முகத்தைக்கட்டவிழ்க்கும் பயிற்சியாசிரியரின் பேச்சின்வழி மனமாற்றம் அடைகிறாளா? இங்கிருந்துதான் மக்களுக்காகப் போராடவேண்டும் என்கிற உணர்வு துவாரகாவிற்கு ஏற்படுகிறது. செல்போன், குளிர்சாதனப் பெட்டி போன்ற நுகர்வுப் பொருள்கள் நம்வாழ்வோடு பிரிக்கமுடியாததாக ஆகிவிட்டது என்றும் பிணத்தைப் பாதுகாக்கத்தான் குளிர்சாதனப்பெட்டி பயன்படும் என்பதான உரையாடலை துவாரகா பாத்திரம் விளக்கிச் செல்கிறது. ஓமத் தண்ணீர் வாங்குவதற்குக் கூட கார்ப்பரேட் இணைய வர்த்தகத்தை எதிர்பார்க்கின்ற நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம் என்பதைப் படத்தில் பார்க்கமுடிகிறது.
ஆண்களை முதன்மைப் பாத்திரமாக வெளிப்படுத்தும் தமிழ் சினிமாவிலிருந்து பெட்டிக்கடை திரைப்படம் வேறுபட்டிருக்கின்றன.இதில் நாயகத்தனம் இன்றி எல்லா பாத்திரங்களுக்கும் முதன்மை கொடுக்கப்பட்டுள்ளதைப் பார்க்கலாம்.நாடகத்தில் தான் ஒவ்வொரு பாத்திரமும் ஒவ்வொரு சொல்லாடலும் முக்கியத்துவம் பெறும்.இதனைப் பெட்டிக்கடை திரைப்படம் கொண்டுள்ளதைப் பார்க்கமுடிகிறது. இப்படத்தில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு பாத்திரமே முக்கியப்படுத்தி மையப்பாத்திரம் என்பதான தன்மை குறைந்து மையப்பாத்திரத்தைக் கட்டவிழ்ப்பு செய்து மையபாத்திரத்தை அனைவருக்கும் பொதுமைப்படுத்திக் கொடுக்கப்பட்ட பொதுமை பாத்திரங்களாகக் கூட்டுப் பாத்திரங்களாகப் பெட்டிக்கடை திரைப்படத்தில் பாத்திரங்களின் இயங்குதளத்தை அவதானிக்க முடிகிறது. இது தமிழ் சினிமாவில் மாற்றுத்தளத்தை நோக்கிச் செல்வதற்கான முயற்சியாகவே தோன்றுகிறது.இருப்பினும்துவாரகாபாத்திரம்கதையின்மையத்தைஇழுத்துச்செல்கிறது. இப்படம் கதைக்கரு, கதைக்களம் கதைக்கான மொழிதல், கதைக்கான காட்சிப்புலப்பாடு என்பவைகளனைத்துமே மாற்று சினிமாவுக்கான படமாக்க முயற்சித்துள்ளார்இசக்கி கார்வண்ணன்.
இரண்டாவது காட்சியில் துவாரகா அறிமுகம் செய்யும் காட்சிகள் தவிர அனைத்துமே கச்சிதமாகப் பொருந்தியிருக்கின்றது.துவாரகா அறிமுகத்தை வேறு விதமாகக் காட்டியிருக்கலாம் என்று படம் பார்த்து முடித்தபின்னரே எனக்குள் உதயமானது. ஏனென்றால் பிற்பகுதிகளில் காட்டப்படும் துவாரகா பாத்திரத்தின் குணங்கள் அனைத்துமே மக்களுக்காக ஏகாதிபத்திய தரகு முதலாளிகளுக்கு எதிராகச் செயல்படுவதும் இறுதியில் பொதுவாழ்க்கைக்காகத் தன்னையே இழக்கும் வாழ்வின் அவலத்தை அனைத்தையும் சிறப்பாகவே காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குநர்.
பெட்டிக்கடை படத்தில் இசக்கி, தங்கம் காதல் தனி லேயராக அமைந்திருக்கின்றது.இவர்களின் காதல் கிராமிய மனம் சார்ந்ததாக இருப்பது படத்தின் வழி அறியமுடிகிறது.தன் பெயரையும் தன் காதலி தங்கத்தின் பெயரையும் உச்சிப் பாறையின் மேல் எழுதிவைப்பது என்கிற கிராமியக் குணத்தைப் பதிவாக்கியிருக்கிறார் இயக்குநர். இச்சூழலில் இசக்கி நண்பர்கள் இந்தக் கல்வெட்டு தான் காலத்துக்கும் காதலைச் சொல்வது. இந்த கல்வெட்டு தான் காதலை ஊராருக்கு காட்டிக்கொடும் என்று கூறுகிறார்கள்.காதலின் வழியாக இசக்கி பாத்திரம் நண்பர்களுக்காகத் திருடக் கூடியதைக் கண்டிக்கிறாள் காதலி தங்கம்.களவு செய்வதிலிருந்து திருந்த வேண்டும் என்பதை வள்ளுவரின் வழி எடுத்துக்கூறுவது வாழ்வியலுக்கான பாதையைக் காட்டுகிறது. தன் காதலன் சின்ன சின்ன களவுகளைச் செய்வதைச் சுட்டிக்காட்டும் தங்கம் பிற்பகுதியில் கார்ப்பரேட் நிறுவனம் மக்களுக்கு எதிராக இருக்கின்றதைப் புரிந்து போராட முன்வருகிறான் இசக்கி. இது தன் காதல் வாழ்வில் பெற்ற களவுக்கு எதிராக நிற்கவேண்டும் எனத் தங்கம் சொன்னதன் தொடர்ச்சியாக இதைப் பார்க்கமுடிகிறது.
படத்தில் சமுத்திரக்கனி பாத்திரம் அழுத்தமாகப் பதிவாகியிருக்கிறது.சமுத்திரக்கனி விளையாட்டுக் கற்றுத்தரும் விளையாட்டு வாத்தியார்.இவர் ஊர் ஊராகப் பாரம்பரிய விளையாட்டுகளைக் கற்றுத்தரும் வாத்தியாராக வந்து செல்கிறார்.சமுத்திரக்கனியின் வருகை படத்தில் பிளாஷ்பேக் ஆகக் கட்டப்பட்டுள்ளது. தமிழரின்பாரம்பரிய விளையாட்டுக்களை ஊர் ஊராகச் சென்று கற்றுத்தருவது மட்டுமல்லாமல் ஆண்-பெண் பேதத்தைப் போக்கியும் சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஒழித்து வாழவேண்டும் என்பதையும், ஊனம் என்பது உடலளவில் மனதளவில் இல்லை எனும் தன்னம்பிக்கை வரிகளை வெளிப்படுத்துவதும், தமிழனின் வீரமிக்க விளையாட்டையும் தமிழனின் பெருமையை எடுத்துரைக்கும் வாத்தியாராக வெளிப்படுகிறார் சமுத்திரக்கனி. பிள்ளையார் குடியிருப்பைச் சேர்ந்த மக்கள் அனைவரும் ஒன்றுகூடி விளையாட்டு வாத்தியாரைச் சந்தித்துப் போகிறார்கள் எங்களுக்கும் சந்தைப்பேட்டைப்பிரச்சினை, விளையாட்டில் வெற்றி கொண்டால் கார்ப்பரேட் வெளியேறும் என்று உரைக்க. வெற்றிக்கான போட்டியாகக் கிட்டிப்புள் விளையாட்டைத் தேர்ந்தெடுக்கின்றனர். தமிழரின் கிட்டி விளையாட்டு தான் இன்று உலகமே விளையாடும் கிரிக்கெட்டாக ஆகிவிட்டது எனவும்தமிழரின் வீரவிளையாட்டின் பெருமையும் எடுத்துக்கூறுகிறார்.‘அடிக்கிற அடியில எந்த கார்ப்பரேட்காரன் ஆனாலும் காற்றோடு கிளம்பிடுவான்’ என்கிற வாத்தியாரின் வீரமிக்க பேச்சு இம்மக்களுக்கு உத்வேகமளிக்கவில்லை.கார்ப்பரேட்காரர்களால் வாத்தியார் படுகொலை செய்யப்படுகிறார்.‘நான் கொல்லப்படவில்லை நான் விதைக்கப்படுகிறேன்.மறுபடியும் வருவேன் இது சத்தியம்’ என்று கூறுவது புரட்சியாளர்கள் இறப்பதில்லை, விதைக்கப்படுகிறார்கள். புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை. விதைக்கப்படுகிறார்கள் என்ற முழக்கத்தோடு ஒன்றிணைக்கிறது. சமுத்திரக்கனி இறப்பின் போது வெளிப்படும் பேச்சு, பிள்ளையார் குடியிருப்பு மக்கள் சமுத்திரக்கனி பாத்திர இறப்பிற்குப்பின் அவர்கள் தன்னம்பிக்கை இழந்து கார்ப்பரேட்டை எதிர்ப்பதில் பின்வாங்கிவிடுகிறார்கள். இவ்வாறுவிளையாட்டு வாத்தியாரின் கதையினை மருத்துவருக்கு எடுத்துரைக்கின்றனர் அவ்வூர் மக்கள்.இது துவாரகாவிற்கு கூடுதல் உத்வேகத்தை அளிக்கிறது.
கார்ப்பரேட்டுக்கு எதிராகப் போராட வேண்டும் என்றால் ஒவ்வொரு ஊராகச் சென்று முதலில் கருத்துப் பிரச்சாரம் செய்து, மக்களின் மனநிலையை மாற்ற வேண்டும் என்பது போன்ற கருத்துக்கள் துவாரகாவிற்கு அறிவுறுத்தப்படுகிறது. துவாரகா சந்தைப்பேட்டை என்கிற பகுதியைச் சுற்றியுள்ள மக்கள்களுக்கும் சந்தைப்பேட்டையில் கார்ப்பரேட் நிறுவனப் பணிக்குச்செல்லும் பணியாளர்களுக்கும் எடுத்து முன்வைக்கிறாள். துவாரகாவோடு சேர்ந்த நண்பர்கள் குழு இது வெறும் பெட்டிக் கடையை வென்றெடுக்கப் போராடுவது மட்டுமல்லாமல் மக்களுக்கு புரட்சிகர கருத்துக்களையும் லாபவேட்டையாடும் முதலாளித்துவத்திற்கு எதிரான கோஷங்களை முன்வைக்கின்றனர். “உணவுச் சங்கிலி அழிந்துபோய் ரெம்ப நாளாச்சு உணவே மருந்து என்று வாழ்ந்த வாழ்க்கை இன்று மருந்தே உணவாக உட்கொள்கிறோம். இயற்கை நம்மிடமிருந்து பறிக்கப்படுவதும் ரசாயன நவீன உரங்களைப் போட்டு நம் மண்ணையும் கெடுத்து மண் புழுக்களையும் கொண்டுட்டாங்க. அந்த மண்புழுக்களும் நாங்க முன்னுக்கப் போகிறோம். நீங்க பின்னாடி வாங்க என்று சொல்லும் அளவிற்கு மனிதனின் இழப்புகள் அதிகமாகவிட்டே இருக்கு.முன்பெல்லாம் ஊருக்கு ஒரு வைத்தியர் இருப்பார்.அவரே எல்லா மருத்துவமும் பார்ப்பார். ஆனால் இன்று ஒவ்வொரு உறுப்புக்கும் ஒரு வைத்தியம் பார்க்கக்கூடிய கார்ப்பரேட் களவாணிகள் வந்துட்டாங்க. கார்ப்பரேட் அட்டைப்பூச்சிபோல் நம் இரத்தத்தைக் குடித்துக் கொண்டிருக்கிறது.
கார்ப்ரேட்டை ஒழிக்கப் போராடுவோம், நமது உரிமையை மீட்போம்”. “என்ன படிக்கவேண்டும்?என்ன சாப்பிட வேண்டும்?எந்தச் சாமியைக் கும்பிடவேண்டும்?என கார்ப்பரேட்காரன் தீர்மானிக்க அவன் யார்?” எனத் துவாரகாவின் குரலுக்கு வலுசேர்ப்பது போல இசக்கியின் குரல் உரக்கிறது.“பெரிய நிறுவனங்கள் மலத்தை பொட்டலத்தில் அடைத்துக் கொடுத்தாலும் அதை வாங்கி திங்கிற நிலைமைதான்” என்று துவாரகா கருத்துப் பிரச்சாரத்தை மக்களிடம் எடுத்துக்கூறுகிறார். மக்களிடம் ஒரு சில எதிர்ப்புகள் இருந்தாலும் மக்களின் மனமாற்றத்தைப் படம்காட்டுகிறது.மக்கள் ஒன்றிணைகிறார்கள். ஆன்லைன் வர்த்தகத்திற்கு எதிராகவும் சந்தைப்பேட்டை கார்ப்பரேட் குழுமங்களின் ஊடுருவலைக் கண்டித்தும் உரிமையை வென்றெடுக்க எல்லோரும் ஓரணியில் ஒன்றிணைந்து போராடுவோம் என்கிற தொனியில் கேலயன்ஸ்க்கு எதிராகப் போராடுகிறார்கள். கார்ப்பரேட் நிறுவனமும் இங்கு இருக்கக்கூடிய காவலர்களை ஏவி விடுகிறது.காவலர்கள் போராட்டக்காரர்களைத் தாக்குகிறார்கள். தாக்கியவர்கள் ஓயவில்லை போராட்டத்திற்குத் துணையாக இருக்கக்கூடிய துவாரகாவைக் கொன்றுவிட்டால் எல்லாம் ஒழிந்துவிடும் என்று நினைத்து காவல்அதிகாரியின் மூலமாக, துவாரகாவை மானபங்கப்படுத்தப்படுகிறது. மக்களைக்காக்க வேண்டிய காவல்துறை மக்கள் விரோதச்செயலைச் செய்வதைப் படம் காட்டுகிறது.அரசும் அரசின் ஆட்சியதிகாரமும் மக்களுக்கு எதிராக இருந்துவருகிறது என்பதை இப்படத்தில் காட்டப்பட்டுள்ளது.வெகுசனங்களை அநீதிக்கு எதிராக ஒன்றிணைக்கக்கூடிய சூழலை பதிவுசெய்துள்ளதுஇப்படம். இசக்கி கார்வண்ணனின் ஆரம்பப்படத்திலேயே சோலிச எதார்த்தவாதத்தை முன்வைத்துள்ளதுகுறிப்பிடத்தக்கதாகும்.
பிள்ளையார்பட்டி குடியிருப்பில் இருக்கும் சந்தைப்பேட்டைகுமான பிரச்சினை இப்பொழுது கார்ப்பரேட் காரனுக்குமான பிரச்சினையாக மாறிவிட்டது. ஆரம்பத்தில் பிள்ளையார் பட்டி குடியிருப்பில் ஒரு பெட்டிக்கடை இருந்ததற்காக ஊரையே தீ வைத்துக்கொளுத்தியதால் பெட்டிக்கடையைக் கைவிட்டு, இணைய வழியாகப் பொருட்கள் வாங்குவதை வழக்கமாகக்கொண்டிருந்தாலும் பின்னர் பொருளின் தரம் நம்பிக்கையற்று இருப்பதை மொட்டை ராஜேந்திரன் பாத்திரம் வெளிப்படுத்தியுள்ளது. ஆன்லைன் மூலம் பொருள் வாங்கியதால் ஏமாற்றமடைந்த மொட்டை ராஜேந்திரன் திருந்துகிறார். “அவன் கொண்டுவந்து கொடுக்கிறது எல்லாம் வெசமாக இருந்தாக் கூட வாங்கிட்டு சாக சொல்றியா” எனப்பேசுவது ஆன்லைன் வர்த்தகத்திற்கு எதிரான இருப்பதைக்காட்டுகிறது. அமெரிக்கா அமெரிக்கா என்று பேசி தெரியும் மொட்ட ராஜேந்திரன் நாம் ஏகாதிபத்திய வலைக்குள் ஆட்பட்டுள்ளதைக் காட்டுகிறது.தீண்டாமைச் சுவரை விட ஆபத்தானது.தீண்டாமை என்பது ஒரு குறிப்பிட்ட ஜாதியை ஒதுக்கி வைப்பது. ஆனால் இது எல்லோரையும் ஒதுக்கிவைக்கிறது என துவாரகா கதாபாத்திரம் பேசுவது ஏகாதிபத்தியச் சூழலில் நாம் எல்லோரும் அடிமைகளாகவும் தீண்டத்தகாதவர்களாகவும் ஆக்கப்பட்டுள்ளோம் என்பதைக் காட்டுகிறது. கிராமங்களில் இருப்பவர்கள் கூட நவநாகரீகமாக வாழ நுகர்விய வலைக்குள் சிக்குண்டுள்ளோம்.பொருட்களின் வாங்கும் சக்தி அதிகரிக்க அதிகரிக்க முதலாளிய லாபவேட்டை அதிகமாக வேண்டும் என்பதே நவீன நுகர்வியத்தின் உள்ளார்ந்த நோக்கம்.இங்கு முதலாளித்துவம் லாபவேட்டையை மட்டுமே பார்க்குமேயோழிய இதனால் ஏற்படுகின்ற தீமைகளைப் பற்றி கவலை கொள்வதில்லை.பணம் படைத்தவர்கள் – பணம் இல்லாதவர்கள், வாங்குசக்தி பெற்றோர் – வாங்குசக்தி அற்றோர் என்கிற தன்மையிலேயே உயர்வு-தாழ்வு இன்றி வர்த்தகத்தைப் பரவலாக்கம் செய்கின்றது.இங்குக் குட்டி முதலாளியைப் பெரு முதலாளி அடித்து இல்லாமல் ஆக்குவதும் நடக்கின்றது. இணைய வர்த்தகத்தையும் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் போன்ற வர்த்தகத்தால் முதலாளி அதிகலாபம் அடைவதும் வரிவிதிப்புகளின் மூலமாக வாங்குவோரிடமே வரிக்கான பணத்தைப் பொருட்களின் மீதும் சுமத்தப்படுவதும் நிகழ்கிறதுதிரைமொழியில்புரியமுடிகிறது.
இப்படத்தின் பாடல்கள் அனைத்துமே கூடுதல் வலுசேர்க்கின்றன. ந.முத்துக்குமார், சினேகன்பாடல்கள் காதல் பாடல்களாக மலர்கின்றன.தேவகுமரவேல்,மறத்தமிழ்வேந்தன், இசக்கிகார்வண்ணனின்கவிதைவரிகளில் உருவான பாடல்கள் போராட்டக்காரர்களுக்கும், பாரம்பரிய விளையாட்டைக் கற்றுத்தரும் வாத்தியாருக்கும் ஊக்கமளிப்பதாக அமைவதோடு, ஸ்ரேயாகோசல், மரியமனோகரர், சத்தியன்மகாலிஙகம், நாகேஸ்வரன் வேல்முருகன், சின்னப் பொண்ணுவின் குரல்கள் பார்வையாளர்களை உணர்வுவயப்படுத்துகின்றன. இப்படத்தின் இசையை மரியமனோகரர் சிறப்பாக அமைத்துள்ளார். இப்படத்தில் சாந்தினி, வீரா,வர்சா,சுந்தர்ஆகியோர்ஆரம்பநிலைநடிகர்களாகஇருப்பினும்நன்குநடித்துள்ளார்கள்.
படத்தின்இறுதியில் சின்னப்பொண்ணு குரலில் ஒப்பாரிப்பாடல் வடிவில் பாடியிருப்பது பார்வையாளர்களுக்கு ஒருவித கனத்த மனதைத்தருகிறது. “பாவிப்பய மக்கா, பாவிப்பய நாட்டுக்குள்ள, நீதி கேட்க வந்த மக்கா, நீ பட்ட துன்பம் சொல்ல வார்த்தை இல்லை, ஏழை சனம் காக்க வந்த, நீ எங்க குற தீர்க்க வந்த அம்மா எனப்பாடும் ஒப்பாரிப்பாடல் வடிவம் கூடுதல் வலியை உருவாக்குகிறது. கைது செய்யப்பட்ட துவாரகா விடுதலை செய்வதற்காக நிர்வாணப்போராட்டம் நடத்தவேண்டிய சூழலுக்கு இன்றைய உலகம் தள்ளப்பட்டிருப்பது இப்படத்தில் காட்டியுள்ளது, போராட்டத்தின் உச்சக்கட்டம் ஆகும். “இந்த உலகத்தில் நீதி நேர்மையை நிலைநாட்டப் பெண்கள் நிர்வாணமாக நிக்கணுமா” எனத் துவாரகா அழுவது மக்கள் உரிமைக்காகத் தன்மானத்தையும் விட்டொழித்துப் போராடத்துணியும் பெண்ணின் குரலாக வெளிப்பட்டதும் இப்படத்தின் வெற்றி. இதுபோன்ற படங்கள் அதிகமாக வரும் பொழுதுதான் வெகுசனப் பார்வையாளரின் ரசனை மாற்றம் நிகழ்வதும் சமகாலப் பிரச்சினைகளுக்கு எதிராக நிற்பதும் படத்தின் வழியாகவே சமூகத்தின் பொதுத்தள மாற்றமும் சாத்தியப்படும் என்பதைத் தமிழ்சினிமா இயக்குநர்கள் உணரத் தளைப்பட்டுள்ளார்கள். ஏகாதிபத்திய முதலாளித்துவ, பார்ப்பனிய, உலகமயச் சூழலுக்குஎதிராகமாற்று அரசியலை, மாற்றுப் பண்பாட்டின் அரசியலை முன்வைத்து சினிமாத்துறையின் செயல்பாடுகள் நகர்வது வரவேற்கத்தக்கதாகும். இம்மாதிரியான படங்கள் மேலும் தொடர வேண்டும்.
மத்திய மாநில வரி எனும் அறிவிப்பு இன்றைய சூழலில் விரிவுபடுத்தக் கூடிய தன்மையைப் பார்க்கமுடிகிறது.ஒரு குக்கிராமத்தில் ஒரு பெட்டிக்கடை வைத்து நடத்துவது கூட ஜிஎஸ்டி சேவைவரி கட்டியே அப்பொருளை வாங்கி வரமுடியும்.இப்படி எல்லா பொருட்களுக்கும் சேவை வரி என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ள இன்றைய சூழலில் பெட்டிக்கடை (வித்தவுட் ஜி.எஸ்.டி) திரைப்படம் முக்கியத்துவம் பெறுகிறது. அட்டைப்பூச்சி எவ்வாறு தன் உடலில் ஒட்டிக்கொண்டு தன் ரத்தத்தைக் குடிப்பதுபோல நவீன முதலாளித்துவத்தின் குறியீடாக கேலைன்ஸ் நிறுவனம் இருப்பதாகவும், கேலைன்ஸை ஒழித்துப் பெட்டிக்கடையைக் காக்கவேண்டும் என மக்கள் குரல்கொடுக்கிறார்கள். ஆதலால் பெட்டிக்கடைக் காப்போம் என்பதும் இப்படத்தில் முக்கியத்துவம் பெறுகிறது.
இப்படத்தில்சுந்தரராஜன், ஆர்.வி.உதயகுமார்,ஈழத்துக்கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் ஆகியோர் பிள்ளையார் பட்டி குடியிருப்பில் வசிக்கக்கூடிய மக்களாக வந்து போகிறார்கள். உரிமைக்காகப் போராடினால் இங்கு தீவிரவாதிகளாகவும் நக்சலாகவும் சித்திரித்துக் கொடுமைப்படுத்துவதும், கைது நடவடிக்கை எடுப்பதுமான செயல்பாட்டைக் கொண்டிருக்கக்கூடிய பாசிச சூழலை இப்படம் பதிவுசெய்துள்ளது. “உலகம் முழுவதும் நாம கும்புடுற சாமி எல்லாம் நமக்காகச் சித்திரவதைப்பட்டுத் துன்பப்பட்டு அவமானப்பட்டவங்கதான் அந்த வகையில் இவர்களும்” என இறுதியாகக் குரல் ஒலிக்கப் படம் நிறைவு பெறுகிறது.
– ம.கருணாநிதி