யாழில். சந்தேகத்திற்கு இடமான முறையில் வீடொன்றில் தங்கி இருந்த பெண்களுடன் தொடர்பில் இருந்த ஆண்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்.நாவலர் வீதியில் உள்ள வீடொன்று அதன் உரிமையாளரால் பிறிதொரு நபருக்கு வாடகைக்கு வழங்கப்பட்டது. வாடகைக்கு பெற்ற நபர் அதனை தென்னிலங்கை சுற்றுலா பயணிகளுக்கு தங்குமிடமாக வாடகைக்கு வழங்கி வந்துள்ளார்.
கடந்த நவம்பர் மாத பகுதியில் குறித்த வீட்டில் பெண்கள் சிலர் தங்கி இருந்த நிலையில் ஆண்கள் பலர் அந்த வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்கள். அதனால் அயலவர்கள் குறித்த வீட்டில் விபச்சார நடவடிக்கைகள் நடைபெறுகின்றன என சந்தேகம் கொண்டு அது தொடர்பில் அப்பகுதி கிராம சேவையாளருக்கு அறிவித்தனர்.
அது தொடர்பில் கிராம சேவையாளர் விடுதி நடத்துனரிடம் விசாரணைகளை முன்னேடுத்த போது, தாம் அவ்வாறு செயற்படுவதில்லை என தெரிவித்துள்ளார். அதன் போது கிராம சேவையாளர் இனி இவ்வாறன முறைப்பாடு கிடைக்க பெற்றால் அது தொடர்பில் காவற்துறையினருக்கு அறிவித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கடுமையாக எச்சரித்துள்ளார்.
அதனை தொடர்ந்து சிலகாலம் அந்த விடுதியில் அவ்வாறான சம்பவங்கள் நடைபெறாத நிலையில் சில வாரங்களில் சந்தேகத்திற்கு இடமான ஆண், பெண் நடமாட்டம் அந்த வீட்டில் காணப்பட்டு உள்ளது.
இந்நிலையில் நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுலான காலப்பகுதி தொடக்கம் குறித்த வீடு யாருமற்ற நிலையில் பூட்டி இருந்துள்ளது. அந்நிலையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் மின் விளக்கு ஒளிர்ந்ததை தொடர்ந்து அந்த வீட்டில் ஆள் நடமாட்டம் இருந்தமையால், அயலவர்கள் அந்த வீட்டிற்கு சென்ற போது, விடுதி நடத்துனரும் இரு பெண்களும் வீட்டில் இருந்துள்ளனர். அங்கிருந்த பெண்களை அயலவர்கள் விசாரித்த போது, தாம் பருத்தித்துறையை சேர்ந்தவர்கள் என கூறியுள்ளனர்.
அதனால் அயலவர்கள் பெரிதும் சந்தேகமடையாமல், அன்றைய தினம் அது தொடர்பில் கவனத்தில் எடுக்காமல் விட்டிருந்தனர். மறுநாள் சனிக்கிழமை (நேற்று) அந்த வீட்டில் வேறு ஆண்களின் நடமாட்டமும் இருந்துள்ளது. அத்துடன் கார் ஒன்றும் வீட்டிற்கு வந்து சென்றுள்ளது. அதனால் அவர்கள் சந்தேகம் அடைந்து நேற்றைய தினம் யாழ்ப்பாண காவற்துறையினருக்கும் பொது சுகாதார பரிசோதகர்களுக்கும் அறிவித்தனர்.
அறிவித்தலின் பிரகாரம் அவ்விடத்திற்கு விரைந்த காவற்துறையினர் வீட்டினை முற்றுகையிட்ட போது அங்கு இரு பெண்களும் விடுதி நடத்துனருமான ஆணும் இருந்துள்ளனர். பெண்களிடம் காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்த போது , தொடர்ந்து முன்னுக்கு பின் முரணான தகவல்களை வழங்கினார்கள்.
பின்னர் விசாரணைகளின் போது , ஒருவர் பூநகரி பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் மற்றைய பெண் பருத்தித்துறை பகுதியை சேர்ந்தவர் எனவும் , அவர்கள் இருவரும் முல்லைத்தீவில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றும் போது நட்பு ஏற்பட்டதாகவும் காவற்துறையினரின் விசாரணைகள் மூலம் கண்டறியப்பட்டது.
அதேவேளை ஒரு பெண் தான் விவாகரத்து பெற்றவர் எனவும் மற்றைய பெண் தனது காதலன் கொழும்பில் உள்ளார். அவருக்காக இந்த விடுதியில் தங்கி இருக்கிறோம் என தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து குறித்த விடுதியில் இருந்த இரு பெண்களையும் விடுதி நடத்துனரான ஆணையும் அந்த விடுதியில் தனிமைப்படுத்த காவற்துறையினர் மற்றும் பொது சுகாதார பரிசோதகர் ஆகியோர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த விடுதிக்கு இன்றைய தினம் காலை சென்ற யாழ்.பிரதேச செயலர் ச. சுதர்சன், வீட்டின் உரிமையாளரை அழைத்து வீட்டினை விடுதி நடாத்துவதற்கு வழங்கிய ஒப்பந்தத்தை உடனே இரத்து செய்யுமாறும், இனி வரும் காலங்களிலும் விடுதி நடத்தும் நோக்குடன் வீட்டினை எவருக்கும் வழங்க கூடாது என கடுமையாக எச்சரித்து அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.