168
நுண்நிதி கடன்கள் மற்றும் நிதிநிறுவன கடன்களை வசூலிப்பதற்கு ஊழியர்கள் வீடுகளுக்கு வந்து நெருக்கடிகளை தருவதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பேரிடர் கால பகுதியில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் மக்கள் பெற்ற கடனுகளுக்கான தவணை கட்டணங்களை மூன்று மாத காலத்திற்கு மீள பெற வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ள நிலையில், அறிவுறுத்தலை மீறி கடன் வசூலிப்பில் சில நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.
கடனாளிகளின் வீடுகளுக்கு செல்லும் ஊழியர்கள் தவணை பணத்தினை செலுத்துமாறு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். வாழ்வாதரங்களை முற்றாக இழந்துள்ள குடும்பங்கள் தவணை பணத்தினை செலுத்த முடியாத நிலையில் ஊழியர்களின் நெருக்கடிகளால் கடும் மனவுளைச்சலுக்கு உள்ளாகி உள்ளனர்.
அதேவேளை அது தொடர்பில் கடன் வசூலிக்கும் ஊழியர்களிடம் கேட்ட போது , தமக்கு நிறுவன தலைமை அலுவலகத்தில் இருந்து தவணை பணத்தினை சேகரிக்குமாறு அறிவுறுத்தல்கள் வந்துள்ளன. தவணை பணத்தினை சேகரித்தால் மாத்திரமே அடுத்த மாதத்திற்கு உரிய கொடுப்பனவுகள் வழங்கப்படும் என எமது அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளமையால் தான் தாம் கடன் வசூலிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர்.
ஆகவே இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் எடுத்து ,இதற்கு ஓர் தீர்வினை பெற்று தர வேண்டும் என கோரியுள்ளனர்.
கடந்த வாரம் நல்லூர் பகுதியில் தவணை பணத்தினை பெற ஒரு வீட்டிற்கு நிதிநிறுவன ஊழியர் சென்ற போது செலுத்த பணம் இல்லாததால் , வீட்டில் இருந்த பெண் தனது கணவருக்கு கொரோனோ தொற்று ஏற்பட்டு உள்ளது என கூறியுள்ளார். அதனால் உடனே அந்த வீட்டில் இருந்து வெளியேறிய குறித்த ஊழியர் சுகாதார பரிசோதகர் மற்றும் காவல்துறையினருக்கு அது தொடர்பில் அறிவித்துள்ளார்.
அதனை அடுத்து அங்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் சுகாதார பரிசோதகர்கள் அந்த பெண்ணிடம் விசாரித்த போது செலுத்த பணம் இல்லாததால் தான் பொய் சொன்னதாக கூறியுள்ளார். அதனை அடுத்து குறித்த பெண்ணை காவல்துறையினர் கடுமையாக எச்சரித்தனர்.
இருந்த போதிலும் , குறித்த பெண்ணின் வீட்டிற்கு தவணை பணத்தினை பெற சென்ற ஊழியர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது #நுண்நிதிகடன்கள் #ஊழியர்கள் #கொரோனோ
Spread the love