ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு. மங்கள சமரவீர கடந்த 28ஆம் திகதி தனக்கு அனுப்பி வைத்திருந்த கடிதத்திற்கு தனது செயலாளரின் மூலம் நேற்று (30) பதில் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.
திரு. மங்கள சமரவீரவின் கடிதம் பல்வேறு பிழையான தகவல்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தரவின் கையொப்பத்துடன் அனுப்பிவைக்கப்பட்டுள்ள பதில் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தகையதொரு கடிதம் அனுப்பிவைக்கப்படுவது கவலைக்குரியதாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
‘உருவாகியுள்ள பிரச்சினையை அரசியலமைப்புக்கு அமைவாக தீர்ப்பதற்கும் அரச செலவுகளை அனுமதிப்பதற்காகவும் பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கான கோரிக்கை‘ என திரு. சமரவீர ஜனாதிபதி அவர்களுக்கு அனுப்பிவைத்திருந்த கடிதத்திற்கு தலைப்பிடப்பட்டிருந்தது. பாராளுமன்றம் கலைக்கப்படும் சந்தர்ப்பத்தில் நிதி ஒதுக்கீட்டு சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்காவிட்டால் அரசியலமைப்பின் 150(3) பிரிவின் கீழ் இடைக்கால கணக்கின் மூலம் புதிய பாராளுமன்றம் கூட்டப்பட்டு 03மாத காலத்திற்கான செலவுகளுக்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளதாக ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.
புதிய தாராளவாத சமூக பொருளாதார தத்துவத்தை தனது கொள்கையாக கொண்ட முன்னாள் நிதியமைச்சர் தேர்தலை நடத்தி மக்களின் ஜனநாயக உரிமைகளை உறுதிசெய்வதற்கு முன்னுரிமையளிக்காதிருப்பது ஏன் என ஜனாதிபதி கவலை தெரிவித்திருப்பதாகவும் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி அவர்களின் பணிப்புரையின் பேரில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதம் வருமாறு,
2020 ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி
கௌரவ மங்கள சமரவீர
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்
கௌரவ மங்கள சமரவீர அவர்களே,
‘உருவாகியுள்ள பிரச்சினையை அரசியலமைப்புக் அமைவாக தீர்ப்பதற்கும் அரச செலவுகளை அனுமதிப்பதற்காகவும் பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கான கோரிக்கை‘
2020.04.28ஆம் திகதி மேற்படி தலைப்பில் மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களுக்கு நிங்கள் அனுப்பிவைத்திருந்த கடிதம் தொடர்பானது.
அக்கடிதத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் பல்வேறு பிழையான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது தெளிவாகிறது என்றும் முன்னாள் நிதியமைச்சர் என்ற வகையில் அத்தகையதொரு கடிதத்தை அனுப்பிவைப்பது கவலைக்குரிய ஒன்றாகும் என்றும் உங்களுக்கு தெரியப்படுத்தும் படி மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் எனக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். அக்கடிதத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள பல்வேறு விடயங்களை ஆராய்கின்ற போது பின்வரும் அவதானங்களுக்கு வரவேண்டியுள்ளது.
1.நீங்கள் அறிந்த வகையில் 2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கத்திற்கு 21நாட்களுக்குள் வரவுசெலவுத்திட்டமொன்றை முன்வைப்பதற்கு முடியுமாக இருந்தது 2015 ஆண்டுக்கான 2014 ஒக்டோபர் மாதம் நிதி ஓதுக்கீட்டு சட்டமும் குறித்த உத்தேச வரவுசெலவுத்திட்டமும் நிறைவேற்றப்பட்டிருந்த சூழலிலாகும் என்பது குறிப்பிடப்பட்டிருக்காமை.
2.2015 முதல் 2019 வரை நீங்களும் உங்களுக்கு முன்பிருந்த நிதியமைச்சரும் பல குறைநிறப்பு உத்தேச திட்டங்களை ஒவ்வொரு வருடமும் முன்வைத்ததுடன், வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுக்காக குறித்த சட்ட வரைவும் பாராளுமன்றத்தினால் சட்ட நிலைமைக்கு உட்படுத்தப்பட்டிருக்கவில்லை என்பதும்,
3.2019ஆம் ஆண்டிற்காக அங்கீகரிக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டு சட்டமும் உத்தேச வரவுசெலவுத் திட்டமும் இருக்கின்ற போதும் செலுத்தப்படாத பட்டியல்களின் அளவு 182பில்லியன் ரூபா என்பதுடன், அந்த நிலுவைப் பணம் உரம், மருந்துகள், முதியோர் நிவாரணங்கள், பல்வேறு நிர்மாணப் பணிகளுக்காக பொருட்கள், சேவைகள் வழங்குனர்களுக்கு வழங்கப்பட்டிக்கவில்லை என்பதும் குறிப்பிடப்பட்டிருக்காமை,
4.211பில்லியன் ரூபா வெளிநாட்டுக் கடன் பெற்று அங்கீகரிக்கப்பட்ட ஏற்பாடுகளின்றி அவை செலவிடப்பட்டிருந்த போதும் அரச கணக்குகளில் உள்ளடக்கப்பட்டிருக்காததும்,
5.தேசிய வருமான வளர்ச்சி நூற்றுக்கு 5வீதத்திலிருந்து நூற்றுக்கு 2.5 வீதம் வரை வருடாந்தம் பலவீனமடைந்தமை, அரச கடன், வரவுசெலவுத்திட்ட நிலுவை அதிகரிப்பு பற்றி முன்னாள் நிதியமைச்சர் என்ற வகையில் விளக்கங்கள் கடிதத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.
6.ஹம்பாந்தோட்டை துறைமுகம் போன்ற தேசிய சொத்துக்களை விற்றபோதும், அதன் மூலம் கிடைத்த வெளிநாட்டு பணத்தை கொண்டு வெளிநாட்டு கடனை அடைக்காமை குறித்தும், ETI போன்ற நிதி நிறுவனங்கள் வீழ்ச்சியடைந்து வைப்பாளர்கள் நிர்க்கதிக்குள்ளானது பற்றியும் எதுவும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.
7.பாராளுமன்றம் கலைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் நிதி ஒதுக்கீட்டு சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்காவிடின் அரசியலமைப்பின் 150(3) கீழ் ஜனாதிபதி அவர்களுக்கு இடைக்கால கணக்கின் மூலம் பாராளுமன்றம் கூட்டப்பட்டு 3மாத காலப்பகுதிக்கான செலவுகளுக்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்பதும் அது இதற்கு முன்னரும் நிதி ஒதுக்கீட்டு சட்டம் நிறைவேற்றப்பட முன்னர் பாராளுமன்றம் கலைக்கப்பட்டிருந்த அனைத்து சந்தர்ப்பங்களின் போதும் நடைமுறைப்படுத்தப்பட்ட வரவுசெலவுத்திட்ட சட்ட ஒழுங்காகும் என்பதை குறிப்பாக முன்னாள் நிதி அமைச்சர் என்ற வகையில் நீங்கள் அறிவீர்கள்.
ஜனாதிபதி தேர்தலின் பின்னர் மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் புதிய அரசாங்கமொன்றை அமைத்ததன் பின்னர் அமைச்சரவையின் அனுமதியுடன் கௌரவ பிரதமர் அவர்களினால் நீங்கள் நிதி அமைச்சராக இருந்த காலம் உட்பட செலுத்தப்படவேண்டியிருந்த 182பில்லியன் ரூபா நிலுவை பட்டியல்களும் 211 பில்லியன் ரூபா வெளிநாட்டு கடன் திட்டங்கள் நிதிக் கணக்கிடுவதற்கு சட்டமா அதிபரின் அனுமதியுடன் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவு நிராகரிக்கப்பட்டதன் மூலம் ஜனாதிபதி தேர்தலில் பெரும்பான்மை மக்களின் மக்கள் ஆணை கவனத்திற் கொள்ளப்படாமையும் கவலைக்குரியதாகும் என்று மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் உங்களுக்கு அறியத்தருமாறு எனக்கு அறிவுறுத்தியுள்ளார். அது 2015ஆம் ஆண்டு தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதிக்கு ஆதரவாக இருந்த சிறுபான்மை அரசாங்கத்திற்கு எதிர்கட்சி ஆதரவு வழங்கிய முறைமைக்கு முற்றிலும் புரம்பானதாகும்.
இவை அனைத்தைப் பார்க்கிலும் புதிய தாராளவாத சமூக, பொருளாதார கொள்கைக்குள் செயற்படும் உங்களைப் போன்ற படித்த அதேநேரம் நிதியமைச்சர் என்ற வகையில் பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்த ஒரு சிரேஷ்ட அரசியல்வாதி, தேர்தலை நடத்தி மக்களின் ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமையளிக்காதிருப்பது ஏன் என்பது குறித்து மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் கவலையடைந்திருப்பதாகவும் ஜனாதிபதி அவர்களின் பணிப்புரையின் பேரில் உங்களுக்கு அறிவிக்க விரும்புகின்றேன்.
இவ்வண்ணம், உண்மையுள்ள
பி.பீ ஜயசுந்தர
ஜனாதிபதியின் செயலாளர்
பிரதிகள் – மஹிந்த ராஜபக்ஷ – பிரதமர் மற்றும் நிதி, பொருளாதார, கொள்கை அபிவிருத்தி அமைச்சர்
சஜித் பிரேமதாஸ – முன்னாள் எதிர்கட்சித் தலைவர்
ரனில் விக்ரமசிங்க – தலைவர், ஐக்கிய தேசிய கட்சி
கரு ஜயசூரிய – முன்னாள் சபாநாயகர்
ஆர்.சம்பந்தன் – தலைவர், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு
அநுர குமார திஸாநாயக – தலைவர், மக்கள் விடுதலை முன்னணி
ரவூப் ஹக்கீம் – தலைவர், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்
ரிஷாத் பதியுதீன் – தலைவர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்
மனோ கனேஷன் – தலைர் தமிழ் முற்போக்கு கூட்டணி
பழனி திகாம்பரம் – தலைவர், தேசிய தொழிலாளர் சங்கம்
மொஹான் சமரநாயக்க
பணிப்பாளர் நாயகம்
ஜனாதிபதி ஊடகப் பிரிவு